எல்லை அருகே பறந்த மர்ம பலூன் போன்ற பொருளை சுட்டு வீழ்த்தியது இந்திய விமானப் படை

இந்திய பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள ஜெய்ஸ்லாமர் நகரின் மேலே மர்ம பொருள் ஒன்று பறந்து வருவதை இந்திய விமானப் படையின் ராடர்கள் கண்டறிந்தன, அது என்ன என்பதைக் கண்டறிய விமானப் படைக்கு உடனடியாக உத்தரவிடப்பட்டது, விமானப் படையின் QRA எனப்படும் தயார் நிலையில் உள்ள சுகோய் போர் விமானம் அந்த இடத்திற்கு சென்றது.

பார்த்ததில் அது சுமார் மூன்று மீட்டர் விட்டம் கொண்ட ஒரு பெரிய பலூன் ஆகும், உடனடியாக அதை சுட்டு வீழ்த்த  விமானிக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது, பலூனை விமானத்தில் உள்ள துப்பாக்கி மூலம் சுட்டது சுகோய் விமானம், உடனடியாக பலூன் விழுந்த இடத்திற்கு விமானப் படை அதிகாரிகள் விரைந்து சென்று அதை பரிசோதனை செய்தனர்.

ஆனால் அதில் சந்தேகப்படும் படியான பொருட்கள் எதுவும் இல்லை என்று விமானப் படை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது, குடியரசு தின நாளில் நடந்த இந்த சம்பவம் சிறிது சலசலப்பை  ஏற்படுத்தியது.

பாதுகாப்பு மந்திரி பாரிக்கர் கூறும் போது, அந்த பலூன் போன்ற பொருள் பாகிஸ்தானிலிருந்து வந்ததாக இருக்கலாம் என்றும், இந்தியாவின் பாதுகாப்பை சோதனை செய்யவே பாகிஸ்தான் இது  போன்ற முயற்சிகளை செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.