விமானப்படை தளத்தை தாக்கிய பாகிஸ்தான் தீவிரவாதிகள்

பஞ்சாப் அருகே பதன்கோட் என்னும் பகுதியில் இந்திய விமானப்படை தளம் அமைந்துள்ளது, நேற்று அதிகாலை அங்கு புகுந்த தீவிரவாதிகள் விமான தளத்தின் சில முக்கிய பகுதிகளை  அழிக்க முயன்றனர், அதற்குள் விமானப் படை வீரர்கள் அவர்களை தடுத்து நிறுத்தி அனைத்து தீவிரவாதிகளையும் கொன்றனர். ஒரு தீவிரவாதி தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தான்.

வருடபிறப்பு அன்று காலை ஒரு மாவட்ட காவல் அதிகாரியின் காரை ராணுவ சீருடையில் வந்த 5-பேர் தடுத்து நிறுத்தி அதிலிருந்தவர்களைக் கடத்தி சென்றனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.  இது குறித்து காவல் துறை விசாரித்து வந்தது, இதற்கிடையே ராணுவ உடையில் வந்தவர்கள் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்று காவல் துறை சந்தேகித்து உடனே மேல் மட்ட அதிகாரிகளுக்கும் ராணுவத்திற்கும் தெரியப்படுத்தியது.

இதற்கிடையே மற்றுமொரு கார் கடத்தப்பட்டத்தையும் போலீசார் கண்டறிந்தனர், தீவிரவாதிகள் காரின் டிரைவரை கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் விழிப்படைந்த காவல் துறை மற்றும் உளவுப் பிரிவு தப்பி சென்ற தீவிரவாதிகளை வலை வீசி தேடி வந்தது.

பதான்கோட் பகுதி முழுவதும் காவல் துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப் பட்டுவந்தது. ஆனால் நேற்று அதிகாலை விமானப் படை தளம் அருகே திடீரென்று வந்த தீவிரவாதிகள் முன் கேட்டில் நின்ற இரு வீரர்களை சரமாரியாக சுட்டுக் கொன்றனர். பின்பு விமானப் படை தளத்திற்குள் நுழைய முயன்றனர். அதற்குள் விமானப் படை வீரர்கள் தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.

ஒருவன் தப்பி சென்று பதுங்கி விட்டான், பின்பு நேற்று மாலை 4 மணி அளவில் தான் வைத்திருந்த குண்டை வெடிக்க செய்து இறந்தான். இதன் பின்னும் சிலர் இருக்கக் கூடும் என்ற நோக்கில் விமானப் படை தனது ஹெலிகாப்டர்கள் மற்றும் உளவு விமானங்கள் மூலம் மொத்த பகுதியையும் கண்காணித்து வருகிறது.

மேலும் அதிகாரிகள் கூறுகையில் தேடும் பனி தொடர்ந்து நடை பெறும் என்றும் தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார்.

இந்த தாக்குதலில் ராணுவ வீரர்கள் மூவர் வீர மரணம் அடைந்தனர். இதன் எண்ணிக்கை உயரக் கூடும் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன