முதல் J 20 விமானத்தை தயாரித்து 5-ம் தலைமுறை போர் விமான நாடுகளின் வரிசையில் இரண்டாவதாக இணைந்தது சீனா

சீனா தனது  5-ம் தலைமுறை போர் விமானமான J 20 -ஐ கடந்த சில வருடங்களாக  சோதனை செய்து அதன் திறனில் இருக்கும் குறைபாடுகளை களைந்து, அதற்கு இறுதி வடிவம் கொடுத்து பயன்பாட்டிற்கான முதல் J 20 விமானத்தை நேற்று தயாரிக்கும் இடத்திலிருந்து வெளியே கொண்டு வந்தது. இதன் மூலம் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக சீனா இரண்டாவது நாடாக 5-ம் தலைமுறை போர் விமானத்தை படையில் சேர்த்துள்ளது.

வான்வெளி துறையில் மிகவும் முன்னேறிய நாடானா அமெரிக்கா கடந்த 2005-ம் வருடம் உலகின் தலை சிறந்த போர் விமானமான F 22 -ஐ படையில் சேர்த்தது, 5-ம் தலை முறை போர் விமானங்கள் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளன. முக்கியமாக அதன் உலோகம்  ராடரால் எதிரொளிக்காத வண்ணம் செய்யப் பட்டிருக்கும். இதனால் இதை   ராடாரில்  கண்டுபிடிப்பது  இயலாத  காரியம். ஆகவே இது அடுத்த நாட்டு வான் பரப்பிற்குள் எளிதாக சென்று தாக்குதல் நடத்திவிட்டு வரும். எதிரி போர் விமானங்களின் ராடரில் புலப்படாத தன்மையினால்  எதிரி போர் விமானங்களையும் எளிதில் தாக்கி அழித்து விடும்.

அமெரிக்காவிடம் மட்டும் தான் இந்த வகை போர் விமானம் இது வரை இருந்தது. இதே போன்று விமானங்களை தயாரிக்க சீனாவும் ரஷ்யாவும் கடும் போட்டியிட்டு சில மாதிரி விமானங்களை தயாரித்து சோதனை செய்து வருகின்றன. ரஷ்யா PAK FA என்ற பெயரில் 5-ம் தலைமுறை போர் விமானத்தை தயாரித்து வருகின்றது. இதையே வாங்க இந்தியாவும் முடிவு செய்துள்ளது. இருப்பினும் இதில் குறைபாடுகள் உள்ளதால் இந்த திட்டத்தை தற்போது வேகமாக தொடராமல் கிடப்பில் வைத்துள்ளது ரஷ்யா.

சீனா மறுபுறம் J 20 மற்றும் J 31 என்னும் பெயரில் இரு மாடல்களில் 5-ம் தலை முறை போர் விமான திட்டத்தை மேற்கொண்டு வந்தது. இந்த இரு போர் விமானகளின் தொழில்நுட்பமுமே அமெரிக்காவின் கணிப்பொறிகளில் உள்ள தகவல்களை திருடி தான் செய்யப்பட்டது.

J 20 திட்டத்தின் கீழ் சுமார் 8 மாதிரிகளை செய்து பல்வேறு கட்ட சோதனைகளை செய்து, இறுதி வடிவம் கொடுத்து தொழிற்சாலைகளில் தயாரிக்க திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட முதல் போர் விமானத்தை நேற்று வெளி உலகுக்கு அறிமுகப் படுத்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது சீனா.

ஏற்கனவே 2016-ம் வருடம் J 20 விமானத்தை படையில் சேர்க்க திட்டமிட்டிருந்தது சீனா, அதை தற்போது நிறைவேற்றி உலக அரங்கில் நவீன போர் விமானங்களை வைத்திருக்கும் பட்டியலிலும் சேர்ந்துள்ளது.

அமெரிக்காவின் F 22, F 35 போர் விமானங்களுக்கு அடுத்தபடியாக சீனாவின் J 20 விமானம் உலகின் தலை சிறந்த போர் விமானமாக கருதப்படுகிறது.