ரபேல் போர் விமான ஒப்பந்தம் வரும் ஜனவரி 26 அன்று கையெழுத்து

பல தடைகளுக்கு பிறகு, வரும் ஜனவரி மாதம் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும் பிரெஞ்சு நாட்டு அதிபர் ஹோலண்டே முன்னிலையில் சுமார் $7 பில்லியன் மதிப்பில் சுமார் 36 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதம் பிரான்ஸ் நாட்டில் இந்திய பிரதமர் உரையாற்றும் போது விமானப்படையின் பலத்தை அதிகரிக்க புதிய நடுத்தர பல்திறன் கொண்ட ரபேல் விமானங்கள் வாங்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பின் இந்திய விமானப்படை அந்த விமானத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து கடந்த எட்டு மாதங்களாக விவாதித்து தற்போது இறுதி முடிவு எடுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நாள் குறிக்கப் பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தோடு ஏராளமான வான் பாதுகாப்பு ஏவுகணைகள், தொலை தூரம் தாக்கும் ஏவுகணைகள், குண்டுகள் மற்றும் உளவு பார்க்க பயன்படும் கருவிகளும் வாங்கப்படும். அதோடு விமானத்திற்கு தேவையான உதிரி பாகங்கள், விமானத்தை நிலை நிறுத்தும் விமானப்படை தளத்தில் செய்ய வேண்டிய வேலைகள் யாவும் மேற்கொள்ளப்படும்.

சமீபத்தில் தான் இந்திய ரயில்வே பிரான்ஸ் நாட்டில் ரயில் எஞ்சின் தயாரிக்கும் ஆல்ஸ்டம் நிறுவனத்திடமிருந்து சுமார் $6 பில்லியன் மதிப்பில் என்ஜின்களை வாங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்திய கப்பல் படை ஏற்கனவே பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான EC 725 என்னும் ஹெலிகாப்டரை  கடலோர பணிகளுக்கு தேர்வு செய்துள்ளது. இந்த ஒப்பந்தமும் விரைவிலேயே கையெழுத்தாகும் என்று கப்பல் படை தெரிவித்துள்ளது.

விமானப் படைக்கு புதிதாக வாங்கப்படவுள்ள வானிலேயே விமானங்களுக்கு எரிபொருள் நிரப்பும் விமானம் மற்றும் பறக்கும் வான் கட்டுப்பாட்டு விமானம் ஆகியவற்றையும் பிரான்ஸ் நாட்டிடமிருந்து வாங்கவே இந்திய விமானப் படை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது