கைகளில் கொண்டு செல்லும் விமான எதிர்ப்பு ஏவுகணை டெண்டர், மூன்றாவது முறையாக வெளியீடு

இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் கைகளிலேயே சுமந்து செல்லும் சிறிய வகை விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தை மூன்றாவது முறையாக திருத்தி வெளியிட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது, 2010-இல் முதல் தடவை வெளியிடப்பட்டு பின்பு 2012 இறுதியில் ரத்து செய்யப்பட்டது, பிறகு 2013-இல் இரண்டாவது தடவையாக வெளியிடப்பட்டு அதை ரத்து செய்யும் முடிவில் அமைச்சகம் உள்ளது, மூன்றாவது முறையாக மீண்டும் வெளியிட பாதுகாப்பு அமைச்சகம் தற்போது தயாராக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ஒப்பந்தம் முதல் முறை வெளிவந்து ரஷ்ய தயாரிப்பான இக்லா, பிரெஞ்சு தயாரிப்பான மிஸ்ட்ரல் மற்றும் சுவீடனின் RBS 70NG  ஆகியவை போட்டியிட்டன, பல காரணங்களினால் ராணுவ  பரிசோதனையாளர்கள் ரஷ்யாவின் இக்லா ஏவுகணையையே தேர்வு செய்து சோதனைக்கு தயார்படுத்தினார்கள், ஆனால் அதிக வெப்ப மண்டல பகுதியில் நான்கு முறை சோதனை செய்ததில் இக்லா வெறும் ஒரு  தடவையே இலக்கை தாக்கியது,  மேலும் கடற்கரையில் சோதனை செய்தபோது ஒரு தடவை சரியாக தாக்கியது மறு முறை தோல்வியடைந்தது.

ராணுவ பரிசோதனையாளர்கள் ரஷ்யாவிற்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுத்து ஆறு மாதங்கள் கழித்து பரிசோதனையை செய்ய ஆயத்தமானார்கள். இந்த முறை எல்லா தடவையும் வெற்றிகரமாக  இலக்கை தாக்கியது, இருப்பினும் அதிலுள்ள பார்க்கும் கருவிகளில் உள்ள குறைகளை இந்திய அதிகாரிகள் கண்டு அதை சரி செய்தால் மட்டுமே இக்லா ஏவுகணையை வாங்க முடியும் என்று கூறி விட்டனர்.

இதனிடையே அமெரிக்கா தனது தயாரிப்பான ஸ்டிங்கர் ஏவுகணையை இந்தியாவிற்கு தர முன்வந்தது, அதன் தரம் உயர்ந்தது என்று அறிந்த அமைச்சகம் அந்த வேண்டுகோளை பரிசீலித்தது, ஆனால் அதை இந்தியாவில் செய்ய அனுமதிக்க முடியாது என்று அமெரிக்கா கூறியதால் திட்டம் கைவிடப்பட்டு ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு 2013-இல் இரண்டாவதாக இதே ஒப்பந்தம் வெளியிடப்பட்டது.

கடந்த முறை நடந்த அதே சோதனைகள் நடத்தப்பட்டன, சில காரணங்களால் அதன் சோதனை முடிவுகள் வெளி உலகுக்கு அறிவிக்கப்படவில்லை, சமீபத்தில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்திய கொள்முதல் நடை முறைகளில் சில பிரச்சனைகள் இருப்பதால் போட்டியிட்ட அனைத்து நிறுவனங்களும் விலகிக்கொள்வதாக அறிவித்தன.  ஆகவே இரண்டாவது முறையும் இதே ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் தருவாயில் உள்ளது.

அடுத்த வருட தொடக்கத்தில் வெளியிடப்படும் இதே ஒப்பந்தத்தில் பல மாறுதல்களை செய்ய பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. முக்கியமாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள ஏதாவது தனியார் நிறுவனத்துடன் சேர்ந்து இதை இந்தியாவில் தயாரிக்கும் பட்சத்தில் அதையே தேர்வு செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ஏவுகணைகளை இந்திய நிறுவனத்திடமிருந்தே வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒன்றுக்கு மேல் நிறுவனங்கள் வந்தால் சோதனை அடிப்படையில் குறைந்த தொகைக்கு ஒத்து வரும் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை அளிக்கவும் பாதுகாப்பு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

இந்தியா ரஷ்யாவிடமிருந்து வாங்கிய மிக பழைய கைகளில் கொண்டு செல்லும் ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது. இவற்றை மாற்றி புதிய ஏவுகணைகளை வாங்க ராணுவம் பல வருடங்களாக அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஏவுகணைகள் சுமார் 6 கிலோ மீட்டர் உயரம் வரை சென்று தாழ்வாக பறக்கும் எதிரி ஹெலிகாப்டர்கள் மற்றும் போர் விமானங்களை சுட்டு வீழ்த்த பயன்படும். ராணுவத்திற்கு இது போல சுமார் 5000 ஏவுகணை அமைப்புகள் தேவைப்படுகிறது