PAK FA விமானத்தின் தொழில்நுட்ப விலையை அதிரடியாக குறைத்தது ரஷ்யா

இந்திய பிரதமர் ரஷ்யா சென்றுள்ள நிலையில் 5-ம் தலை முறை போர்   விமானமான PAK FA விமானத்தின் விலையை சுமார் 40,000 கோடி ரூபாயிலிருந்து 24,000 கோடியாக குறைத்துள்ளது ரஷ்ய அரசு. இதன் மூலம் PAK FA விமானத்தை வாங்கும் திட்டத்தை இந்திய அரசு துரிதப்படுத்தும் என்று ரஷ்யா நம்புகிறது.

இந்தியா தனது 5-ம் தலைமுறை விமானத்தை ரஷ்யாவுடன் கூட்டு சேர்ந்து தயாரிக்க திட்டமிட்டிருந்தது. இந்தியாவிடம் போதிய தொழில் நுட்ப வசதிகள் இல்லாததால் ரஷ்யா தயாரித்த PAK FA விமானத்தை அடிப்படையாகக் கொண்டு  FGFA என்ற பெயரில் மேம்படுத்தப்பட்ட PAK FA விமானங்களை தயாரிக்க திட்டமிட்டு ரஷ்ய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் செய்து கொண்டது.

சுமார் 5 ஆண்டுகள் கழிந்தும் இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசு கையெழுத்திடவில்லை, அதற்காக பல காரணங்களை இந்தியா முன்வைக்கிறது. அதில் முக்கியமாக PAK FA விமானத்தின் எஞ்சின் இதுவரை தயாராகாததும், PAK FA விமானத்தை இந்திய  விமானிகள் கொண்டு பரிசோதிக்க ரஷ்யா அனுமதி அளிக்காததும் முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

ரஷ்ய தரப்பில்  தொழில்நுட்ப கை மாறுதலுக்கு இந்தியா உரிய தொகையை அளித்தால் மட்டுமே PAK FA விமானங்களை சோதனை செய்ய அனுமதிக்க முடியும் என்று ஏற்கனவே உறுதி பட தெரிவித்திருந்தது. இதற்காகத் தான் சுமார் 40,000 கோடி ரூபாவை ரஷ்யா கேட்டிருந்தது. அதையே தற்போது 24,000 கோடியாக குறைத்துள்ளது.

இந்த 24,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், ரஷ்யா இந்தியாவிற்கு மூன்று PAK FA விமானங்களை அடுத்த 5 ஆண்டுகளில் வழங்கும், அதை இந்திய HAL பொறியாளர்கள் அலசி ஆராய்ந்து அதை விட மேம்பட்ட FGFA விமானத்தை தயாரிப்பார்கள். ரஷ்ய பொறியாளர்களும் இந்த திட்டத்திற்கு உதவியும் செய்வார்கள்.

இந்தியா FGFA திட்டத்தின் கீழ் சுமார் 127 போர் விமானங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது, இதற்காக சுமார் 1,80,000 கோடி ருபாய் வரை செலாவகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்தியா தனது உறுதிப்பாட்டில் நிலையாகவே உள்ளது, இந்திய விமானப்படை விமானிகளை PAK FA விமானத்தை சோதனை செய்ய அனுமதித்தால் மட்டுமே ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடியும் என்று ரஷ்ய அரசை வலியுறுத்தியுள்ளது. ஏற்கனவே Su 30 MKI விமானத்தில் உள்ள கோளாறுகளால் பாதிக்கும் மேற்பட்ட விமானங்கள் பறக்க தகுதியில்லாமல் தரையிலேயே உள்ளது குறிப்பிடத் தக்கது.