எல்லைப் பாதுகாப்பு படையின் விமானம் விழுந்து நொறுங்கி 10 பேர் உயிரிழப்பு

இந்திய எல்லை பாதுகாப்பு படைக்கு சொந்தமான Beechcraft Be 200 என்ற சிறிய விமானம் இன்று காலை டெல்லி விமான நிலையத்திலிருந்து கிளம்பும்போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் மூன்று பேர் மற்றும் அதில் பயணம் செய்த மற்ற ஏழு அதிகாரிகளும் உயிரிழந்தனர்.

இந்திய எல்லைப் பாதுகாப்பு படை பல பணிகளுக்காக 1994-ம் வருடம் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரட்டை எஞ்சின் கொண்ட  Beechcraft Be 200 விமானங்கள் இரண்டை வாங்கியது. அதில் ஒன்று தான் இன்று காலை சுமார் 9.30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திலிருந்து புறப்படும் போது விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் இருந்த கோளாறை விமானி புறப்பட்ட 5-நிமிடங்களிலேயே கண்டுபிடித்தார். அதனால் விமானத்தை திருப்பி மீண்டும் விமான நிலையத்தில் இறங்க முயற்சி செய்தார். அனால் அதற்கு முன்பே விமானம் அருகில் இருந்த கழிவுநீர் சுத்திகரிக்கும் பகுதியில் விழுந்தது. எரிபொருள் வெளியானதால் உடனே தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானம் முழுவதுமாக சிதைந்தது.

இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே இந்த விபத்தினால், பங்களாதேஷ் நாட்டு எல்லைப் பாதுகாப்பு படையினருடன் நடைபெறவிருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதிலிருந்த அதிகாரிகள் ராஞ்சியை நோக்கி புறப்படவிருந்ததாவும் அங்கு ஹெலிகாப்ட்டர்களை சரி செய்ய அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதே விமானத்தில் தான் பல  எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் பயணம் செய்வார்கள் எனபது குறிப்பிடத்தக்கது.