பல கோடி மதிப்புள்ள ஆயுதங்கள் வாங்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல்

சுமார் 60,000 கோடி மதிப்பில் புதிய ஆயுதங்கள் வாங்கவும், பழைய ஆயுதங்களை நவீனப்படுத்தும் திட்டத்தையும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கி அவற்றை நிறைவேற்ற  கேபினெட் மற்றும் நிதி அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது, இதில் அதிகபட்சமாக 30,000 கோடி செலவில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட S 400 வான் பாதுகாப்பு ஏவுகணையை வாங்கும் விமானப்படை அளித்த பரிந்துரையை ஏற்றுள்ளது.

இந்திய விமானப் படைக்கு எதிரி நாட்டின் பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை எதிர்க்கும் வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயாரிக்க DRDO திட்டமிட்டு அதை செயல்படுத்தி வந்தது, 2012-ம் வருடமே நடைமுறைக்கு வரும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இன்னும் தயாராகாததால் வெளிநாட்டிலிருந்து இது போன்ற ஏவுகணையை வாங்க விமானப் படை முடிவு செய்து ரஷ்யாவின் S 400 ஏவுகணையை தேர்வு செய்து பாதுகாப்பு அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

இந்த மாதம் இறுதியில் இந்திய பிரதமர் ரஷ்யா செல்லவுள்ளார். அப்போது இரு நாடுகளும் இந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என்று ஆங்கில செய்திகள் தெரிவிகின்றன. இருப்பினும் இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவு என்றும், விமானப் படை இதுவரை S 400 ஏவுகணைகளை இந்தியாவில் சோதனை செய்யாததும் ஒரு காரணம் என்று கூறப் படுகிறது, சுமார் 5 தொகுதிகள் S 400 ஏவுகணைகளை வாங்கப் போவதாக பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிகின்றன.

இந்திய ராணுவத்திற்கு மேலும் ஆறு புதிய பினாக்கா ராக்கெட் ஏவும் அமைப்பை வாங்கும் திட்டத்திற்கும் பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது, இதன் மூலம் பாகிஸ்தான் எல்லை பகுதியில் உள்ள இந்திய ராணுவத்திற்கு மேலும் அதிக ராக்கெட் வீசும் சாதனங்கள் கிடைக்கும், பாகிஸ்தானுடன் போர் ஏற்படும் போது இவ்வகை ராக்கெட்டுகள் மூலம் பாகிஸ்தானின் ஊடுருவலை தடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்காக சுமார்  14,600 கோடி ரூபாவை ஒதுக்க நிதி அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்.

இந்திய கப்பல் படைக்கு புதிதாக உதவிக் கப்பல் கட்டும் திட்டத்திற்கு ஒரு முறை கூட ஒப்புதல் அளித்து ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் நிறுவனத்திற்கு ஆர்டர்களை வழங்க பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. மிக நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ள இந்த திட்டத்தை இரண்டாவது முறையாக மீண்டும் ஒப்புதல் வழங்கி பரிந்துரை செய்துள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், இதன் மொத்த மதிப்பு சுமார் 9000 கோடி ரூபாய் ஆகும், இதன் மூலம் கப்பல் படைக்கு புதிதாக 5 உதவிக் கப்பல்கள் கிடைக்கும்.

இதனுடன் மேலும் சில பரிந்துரைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில், முக்கியமாக சுமார் 310 கோடி செலவில் ராணுவத்திற்கு கவச வாகனங்கள் வாங்கவும், டாங்குகளில் பொருத்தப்படும் கண்ணி வெடிகளை அகற்றும் கருவிகள் வாங்க சுமார் 450 கோடி செலவிடப்படும் , இதை T  72 முன்னணி டாங்குகளில் இந்திய ராணுவம் பொருத்தி பயன்படுத்தும். மேலும் சீனாவின் தொலை தொடர்பு சாதனைகளை செயலிழக்க செய்யும் ஜாமர் கருவிகளை இந்திய சீன எல்லை பகுதிகளில் பொருத்த சுமார் 425 கோடி ஒதுக்கியுள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்.

அதோடு கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட பிச்சோரா S 125 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை நவீனப்படுத்தவும் அதன் மின்னணு பகுதிகளில் மாற்றம் செய்யும் திட்டத்திற்கு ஒரு முறை கூட ஒப்புதல் அளித்துள்ளது பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில்.