விமானப்படையின் 55% போர் விமானங்கள் மட்டுமே சண்டையிட தகுதியுடவை

இந்திய விமானப்படையில் உள்ள சுமார் 45% விமானங்கள் பறக்கும் நிலையில் இல்லை என்றும் அவற்றில் உள்ள குறைகளை களைந்து அதை 20% ஆக குறைக்க வேண்டும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.  இந்திய விமானப் படையில் சுமார் 860 போர் விமானங்கள் உள்ளது, அவற்றை சுமார் 40 ஸ்குவாடுகளாக பிரித்து பயன்படுத்தி வருகிறது இந்திய விமானப் படை. ஒரு ஸ்குவாட் என்பது சுமார் 15 போர் விமானங்கள், இரண்டு உடனடி தயார் நிலை விமானங்கள், இரண்டு பயிற்சி விமானங்கள் மற்றும் ஒரு உதிரி போர் விமானமும் ஆகும்.  இதையே எல்லா நாடுகளும் பின்பற்றி வருகின்றன.

எந்த ஒரு நாடும் தனது விமானப்படையின் திறனை 100%-மாக வைத்திருப்பது இயலாத காரியம். அதிகபட்சமாக  இஸ்ரேலிய மற்றும் ஜப்பானிய விமானப்படை விமானங்கள் தங்கள் சேவை மதிப்பை 85% ஆக வைத்துள்ளன. அதன் எல்லா ஸ்குவாட் விமானங்களுமே சரியாக பராமரிக்கப்பட்டு வருவதாலேயே இந்த அளவு மதிப்பு அதற்கு உள்ளது.

இந்தியாவின் 40 ஸ்குவாட் விமானத்தில் சுமார் 14 ஸ்குவாட் விமானங்கள் மிகவும் பழைய MiG 21 மற்றும் MiG 27 விமானங்கள் ஆகும், இவற்றில் பல செயல்படாத சூழ்நிலையில் தான் உள்ளன. ஒவ்வொரு ஸ்குவாடிலும் உள்ள  15 விமானத்தில் 5 அல்லது 8 விமானங்களே போருக்கு செல்ல தகுதியானவை, மற்றவை பல காரணங்களினால் பயன்படுத்தாத நிலையில் உள்ளது. ஆகவே இந்த எண்ணிக்கை மொத்த விமானங்களின் சேவை எண்ணிக்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த விமானங்கள் தங்களின் சேவை காலம் முடிந்த பின்பும் படையில் உள்ளது. அவற்றை நீக்கும் போது மொத்த விமானப் படையின் சேவை எண்ணிக்கையிலும் மாற்றம் வரும்.

விமானப்படையில் முதுகெலும்பான Su 30 MKI விமானத்திலும் உள்ள சில பிரச்சனைகள் காரணமாக அதன் சேவை தரமும் 55%-க்கும் கீழ் குறைந்து விட்டது. இதை பாராளுமன்ற நிலைக்குழு முன்பே கூறியிருந்தது, அதன் முக்கிய காரணமாக எஞ்சினில் உள்ள கோளாறு மற்றும் சரியான நேரத்தில் ரஷ்யா போதிய உபகரணங்களை வழங்காதது மற்றும் வேறு  சில காரணங்களையும் சுட்டிக் காட்டியது. தற்போதைய பாதுகாப்பு மந்திரி கூறும் போது மேற்கண்ட பிரச்சனைகளை களைந்து 2015-க்குள் சேவை தரத்தை 65% ஆக உயர்த்தப் போவதாகவும், அதன் பின் வரும் ஆண்டில் அதிக பட்சமாக 75% சேவை தரத்தை உறுதி செய்யப் போவதாகவும் தெரிவித்தார். இருப்பினும் பல்வேறு சூழ்நிலைகளால் இதுவரை அதன் மதிப்பு உயராமல் அப்படியே இருந்து வருகிறது.

எளிதாக கூறினால் இந்தியாவிடம் சுமார் 220 Su 30 MKI விமானங்கள் உள்ளது, அவற்றில் வெறும் 120 விமானங்களே சண்டையிட தகுதியுடவை. மற்றவை என்ஜின் மற்றும் தேவையான உபகரணங்கள் இல்லாததால் பறக்க தகுதியில்லாமல் காணப்படுகிறது.

பிரான்ஸ் நாட்டிலிருந்து வாங்கிய Mirage 2000 விமானம் மட்டுமே அதிக பட்ச சேவை தரமான 80%-இல் உள்ளது. இந்தியாவிடம் சுமார் 3 ஸ்குவாட் Mirage 2000 விமானம் உள்ளது. அதுவும் தற்போது நவீனப்படுத்தப்பட்டு வருவதால் அதன் சேவை எண்ணிக்கையும்  குறைந்திருக்க வாய்ப்புகள் அதிகம்.

ஜாகுவார் விமானமும் அதிக பட்ச சேவை தரத்தில் தான் உள்ளது, அதுவும் சுமார் 80% வரை இருக்கும் என்று நம்பப் படுகிறது. ஜாகுவார் விமானமும் தற்போது நவீனப் படுத்தும் பணியில் உள்ளதால் அதன் சேவை தரமும் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. இந்தியாவிடம் சுமார் 17 ஸ்குவாட் அளவில் ஜாகுவார் விமானம் உள்ளது. மேற்கூறிய அனைத்து  இராணுவ விமானங்களுமே பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து நாடுகளிடமிருந்து வாங்கப்பட்டவை.

எனவே வரும் ஆண்டுகளில் இதிலுள்ள குறைகளை-களையும் போதும், நவீனப் படுத்தும் பணி முடிவடையும் போதும் விமானப்படையின் சேவை மதிப்பு 80%-க்கும் மேல் உயரும் என்று நம்பப் படுகிறது.