12,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதல்

12,000 கோடி மதிப்பிலான ஆயுதங்கள் வாங்க பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதல்

சுமார் 12,000 கோடி ருபாய் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க முப்படைகள் வைத்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சர் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புக் கொண்டது, ரஷ்யாவிற்கு செல்லும் முன்பு அமைச்சர் பங்கேற்ற இந்த கூட்டத்தில் ரஷ்யா சார்ந்த ஆயுதங்கள் வாங்கவே அதிகளவில் பரிந்துரைகள் ஏற்கப்பட்டன.

இதில் அதிக செலவில் இந்திய விமானப் படையில் பயன்படுத்தப்படும் சரக்கு விமானமான IL 78 ரக விமானத்தை நவீனப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த நவீனப்படுத்தலில் முக்கியமாக ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நம்பகத் தன்மை மற்றும் செயல்பாடு அதிகமுள்ள PS 90 A எஞ்சின் சேர்க்கப்படும். மேலும் விமான கட்டுபாட்டு அறையும் நவீன டிஜிட்டல் முறைக்கு மாற்றப் படும்.

இந்தியா சுமார் 14 IL 76 விமானங்களை சரக்கு மற்றும் வீரர்களை ஏற்றி செல்லவும், ஆறு விமானத்தை போர் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் பணியிலும், மூன்றை பறக்கும் ராடார் விமானமாகவும் இன்னும் மூன்றை உளவுத் துறை ஆராய்ச்சிக்கும் பயன்படுத்தி வருகிறது. நவீனப்படுத்தலின் மொத்த மதிப்பு சுமார் 4000 கோடி ருபாய் ஆகும்.

இந்திய விமானப் படையின் விமான தளங்களை பாதுகாக்க இந்தியா ரஷ்ய தயாரிப்பான S 125 ரக வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி வருகிறது, இவை 1970 களிலேயே வாங்கப்பட்டவை ஆகும். உலகின் பல நாடுகள் இதை தற்போது பயன்படுத்துவது இல்லை. இருப்பினும் புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் எதுவும் இல்லாததால் பழைய S 125 ரக ஏவுகணைகளை நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. சுமார் 1800 கோடி செலவில் 25 ஏவுகணை ஏவும் அமைப்புகள் நவீனப் படுத்தப்படவுள்ளன.

இந்திய ராணுவத்திற்கு புதிதாக இரண்டு பினாக்கா ராக்கெட் ஏவும் ரெஜிமெண்ட் தேவை என்று ராணுவம் பரிந்துரைத்தது. ஏற்கனவே சுமார் 5 முதல் எட்டு பினாக்கா ராக்கெட் ஏவும் ரெஜிமெண்ட் படை இந்திய ராணுவத்தில் உள்ளது இவை பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு ரெஜிமெண்டில் சுமார் 18 ராக்கெட் ஏவும் அமைப்பும் அதற்கு தேவையான மற்ற அமைப்புகளும் இருக்கும். புதிய ரெஜிமெண்டிற்காக சுமார் 3000 கோடி ஒதுக்கியுள்ளது பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி .

இந்திய ராணுவம் ஐ.நாவின் பல்வேறு பணிகளில் ஆப்ரிக்காவில் பணி புரிந்து வருகிறது, அவர்கள் மிக பழைய கவச வாகனங்களான BTR மற்றும் BMP- ஐ பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுக்கு சுமார் 900 கோடி செலவில் 150 புதிய நவீன BMP 2M கவச வாகனங்களை வாங்க பாதுகாப்புத்துறை ஒப்புதல் வழங்கியது. மேலும் இதே வகை கவச வாகனங்களை உற்பத்தி செய்ய மேடாக் ஆயுத தொழிற்சாலைக்கு அனுமதியும் கொடுத்துள்ளது. இந்த புதிய அனுமதியின் மூலம் மேடாக் ஆயுத தொழிற்சாலை சுமார் 350 புதிய கவச வாகனகளை தயாரித்து ராணுவத்திற்கோ அல்லது வேறு படை பிரிவுகளுக்கோ கொடுக்கும்.

கப்பல் படையின் வேண்டுகோளான புதிய Tug படகுகளை வாங்க பாதுகாப்பு துறை ஒப்புதல் அளித்தது, அதன் படி கடலில் வெகு தூரம் வரை செல்லும் நவீன பல வேலைகளை செய்யும் TUG படகுகளை கப்பல் படை வாங்கவுள்ளது. இவை கப்பலை தள்ளவும் இழுக்கவும் பயன்படும்.

மேலும் கடலுக்கடியில் மூழ்கியுள்ள நீர்மூழ்கியிலிருந்து வீரர்களை காப்பாற்றும் மிக அத்தியாவசிய DSRV எனப்படும் நீர்மூழ்கி வாகனத்தையும் வாங்க கப்பல் படைக்கு பாதுகாப்பு கொள்முதல் கமிட்டி ஒப்புதல் அளித்துள்ளது.