நிஷாந்த் உளவு விமான விபத்து, வேறு விமானங்கள் வேண்டாம் என்று ராணுவம் அறிவிப்பு

பாதுகாப்பு மேம்பாட்டு நிறுவனமும் வான்வெளி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து  நிஷாந்த் என்னும் ஆளில்லா உளவு விமானத்தை தயாரித்து இந்திய  ராணுவத்திற்கு கொடுத்து வந்தது, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்பு 2011-ல் முதல் விமானத்தை படையில் சேர்த்தது, இதுவரை நான்கு விமானங்களை மட்டுமே தயாரித்து வழங்கியது DRDO , ஆனால் நான்குமே விபத்துக்குள்ளானது

கடந்த நவம்பர் மாதம் 4-ம் தியதி நடந்த விபத்தில் கடைசி விமானமும் சேதமடைந்தது, இதனால் அதிருப்தியடைந்த இந்திய ராணுவம், மேற்கொண்டு இந்த விமானங்களை தயாரிக்க வேண்டாமென DRDO-விடம் கூறியுள்ளது.

ராணுவத்தின் உளவு வேலைகளுக்காக உள்நாட்டிலேயே ஆளில்லா விமானங்களை தயாரிக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது, அதற்கான பணிகளை 1995-ம் ஆண்டே துவங்கிவிட்டது, சில ஆண்டுகளிலேயே தயாரிக்கப்பட்ட இந்த  நிஷாந்த் உளவு விமானத்தை வாங்க ராணுவம் முடிவு செய்து முதல் கட்டமாக 12 விமானங்களை வாங்கியது, ஒவ்வொரு விமானத்தின் மதிப்பும் சுமார் 15 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் என்ஜின் மற்றும் பல தரப்பட்ட பிரச்சனைகளினால், விமானத்திற்கு இறுதி வடிவம் கொடுக்க முடியாமல் DRDO திணறியது. இருப்பினும் சுமார் 15 ஆண்டுகள் கழித்து 2011-இல் முதல் விமானத்தை ராணுவத்திற்கு கொடுத்தது DRDO. 2015 வரை வெறும் நான்கு விமானங்களையே வழங்கியது, முதல் மூன்று விமானங்களும் கடந்த காலங்களில் விபத்துக்குள்ளானது, கடைசி விமானம் இந்த மாதம் விபத்துக்குள்ளானது.

விபத்துக்கான முக்கிய காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை, இருப்பினும் என்ஜின் பிரச்னை தான் இதற்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த திட்டத்திற்காக இதுவரை சுமார் 100 கோடி வரை இந்தியா செலவு செய்துள்ளது குறிப்பிடதக்கது. 20 ஆண்டுகள் ஆன பிறகும் நம்பகத்தன்மையுடன் அதை தயாரிக்க DRDO-வால் இயலவில்லை, எனவே தான் மேற்கொண்டு அந்த பணிகளை நிறுத்துமாறு ராணுவம் DRDO-வை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த உளவு விமானம் சுமார் 100 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தில் 11,000 அடி உயரம் வரை பறக்கக் கூடியது, சுமார் 150 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து தகவல்களை சேகரிக்கவும் இதனால் முடியும்.

இந்தியா ராணுவம் இஸ்ரேலிடமிருந்து வாங்கிய உளவு விமானங்களையே அதிகம் பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது