FGFA போர் விமான ஒப்பந்தத்தை துரிதப்படுத்த பாதுகாப்பு மந்திரி ரஷ்யா பயணம்

இந்திய விமானப் படைக்கு 5-ம் தலை முறை போர் விமானம் வாங்க இந்திய அரசு ரஷ்யாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது. இருப்பினும் பல காரணங்களால் இறுதி ஒப்பந்தம் இதுவரை தயாராகவில்லை. ரஷ்யா தயாரித்துள்ள விமானத்தில் உள்ள குறைகளைகளையவும், அதிலுள்ள சாதக பாதகங்களை அறியவும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இந்திய விமானப் படை விமானிகளை வைத்து ரஷ்யாவின் PAK FA விமானத்தை சோதனை செய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

பாதுகாப்பு மந்திரி நவம்பர் முதல் வாரத்தில் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பின்பு அவரும் ரஷ்ய பாதுகாப்பு மந்திரியும் FGFA ஒப்பந்தத்தை பற்றி பேசி அதிலுள்ள குறைகளை களைய முயற்சிப்பார்கள். வரும் டிசம்பர் மாதம் ரஷ்யா செல்லும் இந்திய பிரதமர் முன்னிலையில் இதற்கான ஆரம்ப கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 36,000 கோடி ரூபாய் ஆகும். இதன் மூலம் ரஷ்யா மூன்று PAK FA விமானங்களை இந்தியாவின் HAL நிறுவனத்திற்கு வழங்கும். அதோடு விமானத்தை செய்யும் எல்லா வழிமுறைகளையும் அதில் மாறுதல் செய்யும் முறைகளையும் இந்திய பொறியியலார்களுக்கு கற்றுக் கொடுக்க ரஷ்ய பொறியியலார்களும் இந்தியாவிற்கு வருவார்கள். இதன் மூலம் இந்தியாவிலேயே உலகின் நவீன 5-ம் தலை முறை போர் விமானகளை செய்ய முடியும்.

இருப்பினும் FGFA விமானத்தின் அடிப்படையான PAK FA விமானத்தில் ஒரு சில குறைகள் இருப்பதாக இந்தியா கருதுகிறது, முக்கியமாக அதன் எஞ்சின் தான். PAK FA மாற்றியமைக்கப் பட்ட AL 31 F எஞ்சினையையே பயன்படுத்தி வருகிறது. புதிய என்ஜினை 2017-க்குள் தயாரிப்பதாக ரஷ்யா தெரிவித்திருந்தது. ஆனாலும் இதுவரைக்கும் அதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியதாக தெரியவில்லை.

எனவே இது போல வேறு ஏதேனும் குறைகள் உள்ளதா என்று பரிசோதிக்க இந்தியா விரும்புகிறது. எனவே இந்திய விமானிகள் PAK FA விமானத்தில் பறந்து அவர்களுக்கு திருப்திகரமாக இருந்தால் மட்டுமே FGFA ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும்.

இந்தியா சுமார் 8 ஸ்குவார்டன் FGFA விமானத்தை வாங்க திட்டமிட்டுள்ளது, ஒவ்வொரு விமானமும் சுமார் 800 கோடி முதல் 1000 கோடி வரை விலை கொண்டது. இதை இந்தியாவின் HAL நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும்.