கிரிப்பன் விமானத்தை வாங்குமாறு இந்திய விமானப் படைக்கு சுவீடன் பரிந்துரை

இந்திய விமானப் படைக்கு தற்போது அதிக அளவில் விமானங்கள் தேவை, அதிலும் குறிப்பாக இலகு ரக மற்றும் நடுத்தர ரக விமானங்களின் தேவை அதிகமாக உள்ளது, இலகு ரக விமானமாக வடிவமைக்கப்பட்ட தேஜாஸ் விமானம் போதிய அளவு செயல் திறனை நிரூபிகாததால் அதனை படையில் சேர்க்க விமானப் படை தயக்கம் காட்டுகிறது, மேலும் நடுத்தர விமான கொள்முதலான ரபேல் விமான ஒப்பந்தமும் இன்னும் இறுதியாகவில்லை.

இதற்கு முன்னரும் பல தடவை சுவீடன் அரசு கிரிப்பன் விமானத்தை வாங்குமாறு இந்திய விமானப் படைக்கு பரிந்துரை செய்தது, மேலும் மொத்த விமானத்தையும் இந்தியாவில் செய்வதாகவும் உறுதியளித்தது, ஆனால் இந்திய விமானப் படை பரிந்துரைகளை மறுத்ததோடு, வாங்கினால் ரபேல் விமானம் மட்டுமே அல்லது எதுவும் வாங்கப் போவதில்லை என்று விமானப்படை திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஸ்வீடன் விமானப்படையும் பிரேசில் விமானப்படையும் இணைந்து மின்னணு தாக்கும் வடிவில் சில கிரிப்பன் விமானங்களை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது, இந்த மின்னணு போர் விமானங்கள் எதிரி ராடர்களை செயலிழக்க வைக்கவும், ஏவுகணைகளை செயலிழக்க செய்யவும், எதிரி விமானங்களின் தகவல் தொடர்பை செயலிழக்க வைக்கவும் செய்யும்.

இந்த வகை போர் விமானங்களை அமெரிக்கா மட்டுமே அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது, அதற்கு அடுத்தபடியாக ஆஸ்த்ரேலியாவும் இதை பயன்படுத்தி வருகிறது, மேலும் சீனா ரஷ்யா போன்ற நாடுகள் தற்போது தான் இது போன்ற விமானங்களை வடிவமைக்க தயாராகி வருகிறது.

இந்திய விமானப்படைக்கும் இது போன்ற விமானங்கள் சுமார் 25 தேவைப்படுகிறது, மேலும் இந்தியா அமெரிக்காவின் கிரவுளர் விமானத்தையே வாங்க ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது, கிரிப்பன் போன்ற சிறிய விமானங்களால் கிரவுளர் போன்ற இரட்டை எஞ்சின் கொண்ட விமானத்தை போல அதிக செயல்திறன் கிடையாது.

மேலும் சுவீடனின் இந்த பரிந்துரைக்கு இந்திய விமானப் படை இதுவரை பதில் கூறவில்லை.