நல்லுறவுக்காக சென்னை வந்தது தென் கொரிய போர் கப்பல்கள்

கம்கன்சான் மற்றும் டிசியாங் என்னும் பெயருடைய இரண்டு தென் கொரிய போர்க் கப்பல்கள் இந்தியாவுடன் உள்ள உறவை மேம்படுத்தும் விதமாக பயண வழியில் சென்னை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது, இந்த இரு போர் கப்பல்களிலும் வந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வீரர்களை சென்னை அருகே உள்ள பள்ளி மாணவர்களும், இந்திய கப்பல் படை அதிகாரிகளும், தென் கொரிய தூதரக அதிகாரிகளும் வரவேற்றனர்.

முதல் முயற்சியாக, இந்திய கப்பல் படை வீரர்களுடன் இணைந்து கொரிய வீரர்களும் சென்னை மெரினா கடல் கரையை சுத்தப்படுத்துவார்கள், மேலும் அருகில் உள்ள முதியோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு தேவையான பல உதவிகளையும் செய்ய திட்டமிட்டுள்ளனர்,

மேலும் சென்னை பல்கலைக் கழக மாணவர்களுடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளையும் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர், இதில் கொரிய வீரர்களும் தங்கள் நாட்டு பாரம்பரிய முறையில் நடனம் ஆடவும் போகிறார்கள்.

கொரிய வீரர்கள் பின்பு போர் நினைவு சின்னங்களுக்கு சென்று மரியாதை செலுத்தவும் திட்டமிட்டுள்ளனர், மேலும் இந்திய கப்பல் படை வீரர்களுடன் சேர்ந்து கப்பல் படை சம்பந்தமான கருத்தரங்கில் கலந்து கொண்டு தங்கள் யுக்திகளைப் பற்றியும் பேசவுள்ளனர்.

கொரிய குழுவுக்கு தலைமை தாங்கி வந்துள்ள கிம் சாம் கூறுகையில், கொரிய நாடு 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அந்த நாட்டு போர் கப்பல்கள் உலகம் முழுவதும் உள்ள நேச நாடுகளுக்கு சென்று இது போன்ற நிகழ்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், இந்தியாவும் தங்களுக்கு மிக நெருங்கிய நேச நாடு என்றும், இந்த சந்திப்பு இரு நாட்டு உறவை இன்னும் மேம்படுத்தும் என்றும் கூறினார்,

மற்றொரு கொரிய வீரர் கூறும் போது 1950-ம் வருடம் நடந்த கொரிய போரில் இந்தியா செய்த மருத்துவ உதவிகளை கொரியர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள் என்றும், அந்த உதவிக்காக கொரியர்கள் இந்தியர்களுக்கு கடன் பட்டுள்ளதாகவும் கூறினார்.

சென்னையில் இருந்து இந்த கப்பல்கள் வரும் சனிக்கிழமை புறப்பட்டு சவூதி நாட்டிற்கு நேராக செல்லவுள்ளது