5000 கோடி செலவில் கிலோ ரக நீர்மூழ்கி கப்பல்களை நவீனப்படுத்துகிறது இந்திய கப்பல் படை

இந்திய கப்பல் படை 9 கிலோ ரக நீர்மூழ்கிகளை தற்போது பயன்படுத்தி வருகிறது, 1980 முதல் 2000 ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட இந்த நீர்மூழ்கிகளை இன்னும் ஒரு 20 முதல் 30 ஆண்டுகள் வரை பயன்படுத்த அதன் அடிப்படை அமைப்புகளில் மாறுதல் செய்து நவீனப்படுத்த சுமார் 5000 கோடி ருபாய் மதிப்பிலான ஒப்பத்தில் ரஷ்ய நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது. கடைசியாக வாங்கப்பட்ட நான்கு நீர்மூழ்கி கப்பல்களும் நவீனப்படுத்தப்படவுள்ளது.

இந்த நவீனப்படுத்துதலின் முக்கிய அங்கமாக தொலை தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வீசும் அமைப்பு இதில் சேர்க்கப்படவுள்ளது, இந்த வசதி முதல் ஆறு நீர்மூழ்கிகளில் ஏற்கனவே உள்ளது, கடந்த வருடங்களில் நடந்த நவீனப்படுத்துதல் திட்டத்தில் அவைகளில் இந்த வசதி சேர்க்கப்பட்டிருந்தது, அதில் ஒன்று தான் கடந்த 2013 அன்று மும்பையில் நடந்த கோர விபத்தில் நீரில் மூழ்கியது.

ஒவ்வொரு புதிய கிலோ ரக நீர்மூழ்கியும் சுமார் 1500 கோடி முதல் 2000 கோடி ரூபாய் வரை தான் ஆகும், ஆனாலும் இந்த நவீனப்படுத்துதலில் ஒவ்வொரு நீர்மூழ்கிகளுக்கும் சுமார் 1300 கோடி வரை இந்திய கப்பல் படை செலவு செய்கிறது, முக்கிய காரணங்களாக புதிய கட்டுப்பாட்டு அமைப்பு, புதிய பாட்டரிகள், நவீனப்படுத்தப்பட்ட எதிரி நீர்மூழ்கிகளை தேடும் அமைப்பு, தொலைதொடர்பு சாதனைகள், மற்றும் புதிய டிஜிட்டல் பெரிஸ்கோப் ஆகியவை சேர்க்கப்படும்.

மேலும் இந்த ஒப்பந்தத்துடன் அதிக அளவிலான ஏவுகணைகள், டோர்ப்பீடோக்கள், மற்றும் மைன் போன்றவைகளும் வாங்கப்படவுள்ளன.

டீஸல் மூலம் இயங்கும் நீர்மூழ்கிகளிலேயே கிலோ ரக நீர்மூழ்கிகள் தான் சத்தம் குறைந்த நீர்மூழ்கிகள் ஆகும். இவை இரான் மற்றும் சீன கப்பல் படையிடம் அதிகம் உள்ளது.

கிலோ ரக நீர்மூழ்கிகள் சுமார் 3500 டன் எடை கொண்டவை, இதனால் கடலின் 250 மீட்டர் ஆழம் வரை பயணிக்கவும் தாக்குதல் நடத்தவும் முடியும், நீருக்கடியில் சுமார் 20 நாட்ஸ் வேகத்திலும் நீரின் மேல் சுமார் 10 நாட்ஸ் வேகத்திலும் பயணிக்கும்.

துறைமுகத்திற்கு வராமல் சுமார் 45 நாட்கள் கடலிலேயே இருக்கும், பெரிஸ்கோப் ஆழத்தில் சுமார் 7 நாட்ஸ் வேகத்தில் 6000 மைல் வரை செல்லும், கடலுக்கடியில் 3 நாட்ஸ் வேகத்தில் 400 மைல் தூரம் செல்லும், போர் சமயங்களில் அதிக ஆழத்தில் அதிக வேகமாக சுமார் 20 நாட்ஸ் வேகத்தில் 12 மைல் தூரம் வரை செல்லும்.

இதன் முக்கிய ஆயுதமாக இதன் முன் பக்க குழாய் மூலம் ஆறு கனமான டோர்ப்பீடோக்களை செலுத்தும், ஒவ்வொரு டோர்ப்பீடோவும் ஒரு பெரிய போர்க் கப்பலையே அழிக்கும் சக்தி கொண்டது, இதன் தாக்கும் தூரம் சுமார் 10 முதல் 20 மைல் ஆகும். இந்த குழாய் மூலம் சுமார் 250 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணையை செலுத்தி எதிரியின் போர்க்கப்பல்களைக் கூட தாக்க முடியும்.