வங்காள விரிகுடாவில் தொடங்கியது இந்திய அமெரிக்க ஜப்பானிய கப்பல் படை கூட்டுப் பயிற்சி

 

இந்திய அமெரிக்க கப்பல் படையின் மலபார் வருடாந்திர கப்பல் படை பயிற்சி, இந்த வருடம் முதல் ஜப்பான் நாட்டு கப்பல் படையுடனும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிறது, மூன்று நாடுகளுமே சீனாவின் கப்பல் படையின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே இதை மேற்கொள்வதாக ராணுவ பார்வையாளர்கள் கருதுகின்றனர், சீனாவும் இந்த பயிற்சியை எதிர்த்து வருவது குறிப்பிடத்தக்கது, வங்காள விரிகுடா பகுதியில் அமெரிக்க ஜப்பானிய போர் கப்பல்கள் வருவது இந்திய சீன அமைதியை சீர்குலைக்கும் என்றும் அது கூறிவருகிறது.

இந்த வருடம் மொத்தம் ஏழு போர் கப்பல்கள் ஒரு விமானம் தாங்கி கப்பல் மற்றும் இரண்டு நீர்மூழ்கி அழிக்கும் விமானங்களும் பயிற்சியில் ஈடுபட உள்ளன, அமெரிக்கா சார்பில் அணு உலையில் இயங்கும் அதி நவீன நீர் மூழ்கி கப்பலும் விமானம் தாங்கி கப்பலும் இந்த பயிற்சியில் முன்னிலை வகிக்கும்.

மூன்று நாடுகளுமே தங்களது அதி நவீன தாக்கி அழிக்கும் டிஸ்ட்ராயர் ரக போர் கப்பல்களை கொண்டு வந்துள்ளன, இந்தியா INS ரன்விஜய் , அமெரிக்கா USS நார்மாண்டி, ஜப்பான் JMSDF பியுஜூகி கப்பல்களுடன் இந்த பயிற்சியை தலைமை தாங்கப் போகின்றன.

இதில் இந்திய நீர் மூழ்கியும் அமெரிக்க நீர்மூழ்கியும் குறிப்பிட்ட ஒரு போர்க் கப்பலை தாக்கும்படியும் அதை தடுக்கும் விதமாக மற்ற போர்க்கப்பல்கள் விமானம் தாங்கி கப்பலையும் உதவிக் கப்பலான INS சக்தியை பாதுகாக்குமாறும் போர் பயிற்சி நடைபெறவுள்ளது.

வரும் காலங்களில் போர் கப்பல்களின் எண்ணிக்கையைக் கூட்டவும், பயிற்சியின் நாள் மற்றும் விதங்களை அதிகரிக்கவும் ஏற்கனவே முடிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.