ரஷ்யாவிடமிருந்து அணு சக்தி நீர்மூழ்கி கப்பலை குத்தகைக்கு எடுக்க இந்திய கப்பல் படை முடிவு

ரஷ்யாவிடமிருந்து மேலும் ஒரு அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பலை பத்து ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க இந்திய கப்பல் படை முடிவு செய்துள்ளது, அதற்கான ஆயத்த கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே நிறைவு பெற்று விட்டது, அடுத்த மாத துவக்கத்தில் ரஷ்யா செல்லும் இந்திய பாதுகாப்பு மந்திரி மனோகர் பாரிக்கர் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்கி ஷோயகுவிடம் இது குறித்து பேசி இறுதி முடிவு எடுப்பார் என்றும். டிசம்பர் மாதம் ரஷ்யா செல்லும் இந்திய பிரதமர் இதற்கான ஒப்பந்தத்தில் ரஷ்யாவுடன் கையெழுத்திடுவார் என்றும் தகவல்கள் தெரிவிகின்றன.

இந்திய கப்பல் படையிடம் மிக குறைந்த அளவே நீர் மூழ்கி கப்பல்கள் உள்ளன. மொத்தம் உள்ள 13 நீர்மூழ்கி கப்பலுமே தொலை தூரம் வரை கடலுக்கடியில் சென்று செயல்பட தகுந்தவை அல்ல. ஏற்கனவே கடந்த 2012-ம் ரஷ்யாவிடமிருந்து இது போல ஒரு அணு சக்தியால் இயங்கும் நீர் மூழ்கியை குத்தகைக்கு எடுத்து அதற்க்கு INS சக்ரா என்று பெயர் சூட்டியது, அது தற்போது இந்திய கப்பல் படையில் பணியில் உள்ளது.

இந்தியாவிடம் தற்போது ஒரு விமானம்தாங்கி கப்பல் உள்ளது, இன்னும் இரண்டு ஆண்டுகளில் அத்தனை சோதனையையும் முடித்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விமானம் தாங்கி கப்பலான INS Vikrant-ம் படையில் சேர்ந்து விடும். தொலை தூரம் வரை செல்லும் இந்த பெரிய போர் கப்பல்களுக்கு பாதுகாப்பாக அதி சிறந்த நீர்மூழ்கி கப்பல்கள் தேவைப்படும். இதன் மூலம் கடலுக்கடியில் வரும் அச்சுறுத்தல்களை எளிதில் சமாளிக்க முடியும். இதற்கு அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல்களே மிக சிறந்த தீர்வு. ஆகவே இந்திய கப்பல் படைக்கு மேலும் ஒரு அணு சக்தியால் இயங்கும் நீர்மூழ்கி கப்பல் தேவைப்படுகிறது.

ரஷ்யா வழங்கும் இந்த கப்பலும் பழைய அகுலா ரகத்தை சேர்ந்தது தான். இருப்பினும் நவீன போர்களத்தில் சண்டையிட ஏற்றதாக நவீனப்படுத்தபட்டுள்ளது. இந்தியா ஒப்பந்தத்தில் இந்த வருடமே கையெழுத்திட்டாலும் கப்பலை இந்தியாவிற்கு கொடுக்க இன்னும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் ஆகலாம். கப்பலில் சில மாறுதல்களையும் இந்திய கப்பல்படை வீரர்களுக்கு இந்த கப்பலில் பணியாற்ற பயிற்சியும் இந்த கால கட்டத்தில் கொடுக்கப்படும்.

அகுலா ரக இந்த நீர்மூழ்கி கப்பலில் எட்டு கன ரக டோர்பீடோக்களை ஏவும் வசதியும், சுமார் 40 டோர்பீடோக்களை ஏவ சேமித்தும் வைக்க முடியும், இந்த டோர்பீடோ ஏவும் குழல் மூலம் சுமார் 250 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளையும், கண்ணிவெடிகளை செல்லும் இடங்களில் போட்டு செல்லவும் முடியும். இதன் வேகம் மற்றும் நீருக்கடியில் செல்லும் ஆழம் குறித்த தகவல்கள் இரசியமாக பாதுகாக்கப்பட்டவை.