முதல் ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பல் கடுமையான கடல் சோதனைக்கு தயார்

 

INS கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள பிரெஞ்சு நாட்டு வடிவமைப்பில் உருவான இந்தியாவில் கட்டப்பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல் கடுமையான கடல் சோதனைகளை மேற்கொள்ள துறைமுகத்திலிருந்து இந்த மாத இறுதிக்குள் புறப்படவுள்ளது,

பிரான்ஸ் நாட்டு அனுமதியுடன் சுமார் 25,000 கோடி செலவில் சுமார் ஆறு ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிகளை இந்தியாவின் MDL நிறுவனம் மும்பையில் கட்டுகிறது.

பெருங்கடல் சோதனைக்கு கப்பல் ஆயத்தமாக உள்ளதாகவும், எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால் சீக்கிரமே சோதனையை தொடங்க முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர், இந்த கப்பல் ஏற்கனவே துறைமுக நிறுத்தல் சோதனையை வெற்றிகரமாக தாண்டி விட்டது, கடந்த ஆகஸ்ட் மாதம் முறைப்படி இந்த கப்பல் பாதுகாப்புத் துறை அமைச்சரால் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கப் பட்டது.

இது கப்பல் படையில் சேர்வதற்கு முன்பு, முக்கியமான துறைமுக சோதனைகள், கடல் சோதனைகள் மற்றும் ஆயுத சோதனைகளை வெற்றிகரமாக முடிக்க வேண்டும், இவை அனைத்தையும் வரும் 2016 செப்டம்பர் மாதத்திற்குள் முடித்து கப்பல் படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் அடுத்த கப்பல்களை தொடர்ந்து சோதனைக்கு உட்படுத்தி அடுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு புதிய ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலை படையில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது, மொத்தமாக ஆறு கப்பல்களும் 2022 க்குள் கப்பல் படையில் சேர்க்கப்பட்டு விடும்.

66 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பலில் மொத்தமாக 31 கப்பல் படை வீரர்களும் அதிகாரிகளும் இருப்பார்கள்,

இந்த கப்பலால் கடலில் சுமார் 300 மீட்டர் ஆழம் வரை செல்ல முடியும், அதே நேரத்தில் அதே ஆழத்தில் தொடர்ந்து 5 நாட்ஸ் வேகத்தில் சுமார் 1000 கிலோ மீட்டர் வரை பயணிக்கவும் முடியும்.

பொதுவாக கடல் பரப்பின் மேலே வந்து, ஆக்சிஜன் சேமித்து பின்பு கடலுக்கடில் பயணம் செய்யும் சாதாரண நேரங்களில் இது சுமார் 10 நாட்ஸ் வேகத்தில் 10,000 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும், ஒரு தடவை கடலுக்குள் சென்றால் சுமார் 50 நாட்கள் வரை எவ்வித உதவியும் இல்லாமல் கடலில் இருக்கும், மேலும் எவ்வித அசைவும் இன்றி கடலுக்கடியில் 300 மீட்டர் ஆழத்தில் 40 நாள் வரை இருக்கும்.

இதன் முக்கிய ஆயுதமாக 533 mm குறுக்களவு கொண்ட எதிரி கப்பல்களை அழிக்கும் டோர்பெடோக்கள் சுமார் 6-ஐ சுமந்து செல்லும்,

இதே வகை ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலை சிலி மலேசியா மற்றும் பிரேசில் நாடுகளும் பயன்படுத்தி வருகிறது,