இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 150 தடவை எல்லை தாண்டிய சீனா

இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் மட்டும் சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 150 தடவை வந்து சென்றதாகவும், இதில் சுமார் 100 தடவைகள் இந்திய ராணுவம் நேரிடையாக எதிர்த்து நின்றதாகவும் கூறியுள்ளது. மேலும் நான்கிலிருந்து ஐந்து வீரர்கள் கொண்ட சிறிய குழுக்கள் தான் இந்த ஊடுருவலில் அதிக அளவில் பங்கெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆனால், கடந்த வருடம் சுமார் 600 ஊடுருவல்கள் நடந்ததாகவும், அதில் சுமார் 350 தடவை இந்திய ராணுவம் அவர்களை நேரிடையாக எதிர்கொண்டதாகவும், அதற்கு முந்தய வருடம் 2013- ல் 400 முறை ஊடுருவல்களும் 100 எதிர்கொள்ளல்களும் நடந்துள்ளதாக மூத்த ராணுவ அதிகாரி PTI செய்திக்கு கொடுத்த தகவலில் கூறியுள்ளார்.

இருதரப்பும் எல்லையில் அமைதியே விரும்புவதால் இது போன்ற சம்பவங்கள் இன்னும் விபரீதமாகாமல் தடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

இந்திய ராணுவமும் சீன ராணுவமும் சந்திப்பதற்கு லடாக் பகுதியில் நிரந்தர முகாம் இருப்பதாகவும், அது போல இன்னொரு முகாம் அமைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார், இந்த முகாம்களில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் கலந்து பேசி எல்லையில் ஏற்படும் பதற்ற சூழல்களை குறைக்க முற்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு சரியாக வரையறை செய்யப் படாததாலேயே இது போன்ற நிகழ்வுகள் நடப்பதாகவும், இருப்பினும் இது போன்ற சூழல்களில் பேசி பதற்றதத்தை குறைத்து அமைதியை நிலை நாட்டி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார், இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் நடை பெற்றுள்ளதாகவும் இருப்பினும் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் கூட நடைபெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்