அமெரிக்காவிடமிருந்து எடை குறைந்த M 777 பீரங்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்

இந்திய ராணுவத்தின் அதிரடிப்படை பிரிவிற்கு ஹெலிகாப்டர் மூலம் எளிதில் எடுத்து செல்லும் எடை குறைந்த ஆர்ட்டிலரி பீரங்கிகளை வாங்க பாதுகாப்பு துறை முன்பே முடிவெடுத்திருந்தது, இருப்பினும் 2012-லேயே முடிக்கப்பட வேண்டிய இந்த ஒப்பந்தம் இன்னும் கையெழுத்தாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்தது, ராணுவத்தின் அவசிய தேவைப்பாடு காரணமாக அந்த ஒப்பந்தத்தை முடிக்க பாதுகாப்பு துறை தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அதன் முதல் கட்டமாக எழுத்து வடிவில் நிபந்தனைகளையும், இரு நாட்டு அதிகாரிகளின் ஒப்புதல் கடிதத்தையும் தயாரித்து ஒப்பந்தத்தை முழு வடிவில் உருவாக்கும் பணியில் தற்போது அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தை இந்திய பாதுகாப்பு அமைச்சகமும் அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகனும் இறுதி செய்தால், இரு நாட்டு அதிகாரிகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு முறைப்படி செயல் முறையை தொடங்குவார்கள்.

இக்கடிதத்தில், பட்டுவாடா செய்யும் கால அளவு, உத்திரவாத குறிப்புகள், விற்பனைக்கு பின்பு செய்யப்படும் சேவைகள், பயன்படுத்தும் முறைகளுக்கான பயிற்சிகள், மற்றும் உதிரி பாகங்கள் வழங்கும் முறைகள், காலதாமத பிரச்சனைகள் குறித்து தெளிவாக விவாதிக்கப்பட்டிருக்கும்,

இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் $700 மில்லியன் ஆகும், அதில் சுமார் $233 மில்லியன் அளவு பணத்தை இந்தியாவின் ஏதாவது துறையில் அமெரிக்கா முதலீடும் செய்யும், முதல் கட்டமாக மொத்தம் 145 பீரங்கிகளை வாங்கவுள்ளது இந்தியா.

155mm/39 Cal ரகத்தை சேர்ந்த இந்த ஆர்ட்டிலரி பீரங்கி சுமார் 4 டன் எடை மட்டுமே கொண்டது, சிறப்பான டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்டுள்ளதால் மற்ற இதே வகை பீரங்கிகளுடன் ஒப்பிடும் போது இது சுமார் 40% எடை குறைவே, மேலும் இதை ஹெலிகாப்டர்களின் மூலம் ஒரு இடத்திலிருந்து மற்ற இடத்துக்கு எளிதில் கொண்டு செல்ல முடியும்.

7 பேர் கொண்ட குழுவால் இயக்கப்படும் இந்த ஆர்ட்டிலரி பீரங்கி சுமார் 40 கிலோ மீட்டர் தூரம் வரை குறிபார்த்து தாக்கக் கூடியது,

சீன ராணுவத்தை கிழக்கே உள்ள மலைத்தொடர்களில் இருந்து எதிர்க்க இந்த ஆர்ட்டிலரி பீரங்கி அதிகமாக பயன்படும், இந்தியா எளிதில் இந்த ஆர்ட்டிலரி பீரங்கியை மலைகளின் மேல் கொண்டு சென்று அங்கு நிறுத்தி எதிரி நிலைகளை சுடும், சீனாவிடம் இது போன்ற எடை குறைந்த ஆர்ட்டிலரி பீரங்கிகள் கிடையாது, இதானால் மலை மேல் ஏறி சென்று போரிட வெறும் தரைப் படை வீரர்களை மட்டுமே அது நம்பியிருக்க வேண்டும்.

அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது