தென் கொரியாவின் K 9 ஹோவிட்சர் பீரங்கிகளை வாங்குகிறது இந்திய ராணுவம்

 

இந்திய ராணுவம் தனது தாக்கும் திறனை மேம்படுத்த பல முயற்சிகளை எடுத்து வருகிறது, அதன் ஒரு பகுதியாக பல்வேறு வகையான ஆர்ட்டிலரிகளை வாங்கி வருகிறது, அதன் ஒரு பகுதியாக ஹோவிட்சர் ரக பீரங்கிகளை வாங்க முடிவெடுத்திருந்தது, இதை மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் நிறைவேற்ற திட்டமிட்டிருந்து, அதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து பீரங்கிகளின் மாடல்கள் பரிசோதிக்கப்பட்டன, இறுதியில் ரஷ்யாவின் MSTA-S ரக ஹோவிட்சரும் கொரியாவின் K9 Thunder ஹோவிட்சரும் வெற்றி பெற்றது

இது இரண்டிலும் சிறந்ததை தேர்வு செய்ய கடந்த ஆறு மாதமாக, ராணுவம் இரண்டு ஹோவிட்சரையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியது, பல கட்ட சோதனைகளின் முடிவில் கொரியாவின் K 9 ஹோவிட்சரே சிறந்தது என்று முடிவு செய்தது, இதை அடுத்து K 9 வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் வருவதால், குறிப்பிட்ட நிறுவனம் இந்தியாவின் ஒரு தனியார் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, தயாரிக்கும் முறைகளை அதற்கு சொல்லிக் கொடுத்து இந்தியாவிலேயே அதை தயாரிக்க வேண்டும், தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் தான் இந்த K 9 ஹோவிட்சர் பீரங்கியை தயாரித்து வருகிறது, இது தென் கொரியாவின் முதன்மை ஹோவிட்சராக இருந்து பல சண்டைகளில் கலந்து கொண்டுள்ளது, மேலும் போலந்து மற்றும் துருக்கி நாடுகளுக்கும் இதை ஏற்றுமதி செய்துள்ளது,

சமீபத்தில் தான் சாம்சங் நிறுவனம் இந்தியாவின் தனியார் நிறுவனமான L&T- யுடன் கூட்டு சேர்ந்து K9 தயாரிக்கும் முறைகளை L&T-க்கு கொடுத்தது, மேலும் இந்திய ராணுவத்தின் பல கேள்விகளுக்கு சாம்சங் நிறுவனமும் L&T நிறுவனமும் திருப்திகரமாக பதில் அளித்தது,

மேலும் ராணுவ குறிப்புகளின் படி, இன்னும் ஆறு மாதத்திற்குள் இந்தியா ராணுவம் L&T நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து இந்த K 9 ஹோவிட்சரை வாங்கும், முதல் கட்டமாக சுமார் $750 மில்லியன் செலவில் 100 ஹோவிட்சரை இந்தியா ராணுவம் வாங்கவுள்ளது, மேலும் L&T இந்த ஹோவிட்சரை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் உரிமையையும் பெற்றுள்ளது.

சுமார் 47 டன் எடை உள்ள இந்த ஹோவிட்சர் 67 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது, 155mm/52 கலிபர் திறனுள்ள இதன் துப்பாக்கி சுமார் 30 கிலோமீட்டர் முதல் 52 கிலோமீட்டர் வரை சுடும் திறன் கொண்டது, ஒவ்வொரு 5 நொடிக்கும் ஒரு குண்டை சுடும் அளவு திறன் வேகம் உடையது, மேலும் இதனால் 450 கிலோமீட்டர் தூரம் வரை தனியாக சென்று தாக்குதல் நடத்த முடியும்,

இதன் தற்காப்பிற்காக புகை வீசும் அமைப்பு மற்றும் ஒரு கன ரக தானியங்கி துப்பாக்கியும் இதனுடன் உள்ளது. இதற்கு குண்டுகளை உடனுக்குடன் நிரப்ப இன்னொரு ஆயுதம் நிரப்பும் பீரங்கியும் உள்ளது, இது தானாகவே குண்டுகளை ஹோவிட்சர் பீரங்கியினுள் செலுத்தி தொடர்ச்சியாக சுட வழி வகுக்கும், இதனால் வீரர்கள் கஷ்டப்பட்டு எடை அதிக குண்டுகளை சுமக்கவோ செலுத்தவோ தேவை இல்லை.