தொலைதூர ஸ்மார்ட் டார்ப்பீடோ, கப்பல் படைக்கு புதிய சக்தி

இந்திய நாட்டின் பாதுகாப்பு என்று வரும்போது மற்ற படைகளை விட கப்பல் படை பல படிகள் முன்னே தான் நிற்கிறது, ஒரு திட்டம் தோல்வியடைந்தால் அடுத்த நொடியே அடுத்த திட்டத்தை நிறைவேற்றுவதும், எதிரியின் தொழில்நுட்பம் அல்லது தாக்கும் திறனை முறியடிக்க அவர்களுக்கு முன்பே திட்டமிட்டு அதை செயல்படுத்துவதும் என முன்னோடியாக இருக்கிறது, அதன் புதிய திட்டமே தொலைதூர ஸ்மார்ட் டார்ப்பீடோ, எதிரி நீர்மூழ்கி மற்றும் போர் கப்பல்களை துல்லியமாக தாக்கி அழிக்க அதுவும் சுமார் 1500 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள இலக்கை தாக்கி அழிக்க இந்த டார்ப்பீடோ பெரிதும் உதவும்.

இதன் தொழில்நுட்பம் மிக எளிது தான், அதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் அதி நவீன தொழில்நுட்பங்களை கப்பல் படை பயன்படுத்தியதே ஆகும், முக்கியமாக அமெரிக்காவின் அதி நவீன நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு விமானமான P8I, இன்னும் சில மாதங்களில் படைகளில் இணையவுள்ள MH 60R ரோமியோ ஹெலிகாப்டர், பேச்சுவார்த்தையில் இருக்கும் சீ கார்டியன் உளவு விமானங்கள், அதோடு இஸ்ரேலின் அதி நவீன MF STAR  ரேடார்கள்,இதன் மூலம் இந்திய கப்பல்படைக்கு பரந்து விரிந்த இந்திய பெருங்கடலை துல்லியமாக கண்காணிக்க முடியும், அதோடு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய கப்பல் படைகளுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி, அவர்களின் கப்பல்களோ உளவு விமானங்களோ சீன கப்பல்களையோ நீர்மூழ்கிகளையோ கண்டால் அதை நிகழ் நேரத்தில் இந்திய கப்பல்களுக்கும் உளவு விமானங்களுக்கும் தெரிவிக்கும்.

இதனால் இந்திய பெருங்கடல், அரேபிய மற்றும் வங்காள கடலிலும் சீன மற்றும் பாகிஸ்தானிய கப்பல்களை மிக துல்லியாமாக கண்காணித்து அதை குறி வைக்க முடியும்.

ஆனால் அக்கப்பல்களை எவ்வாறு தாக்கி அழிப்பது, அதற்காக ஒன்று ரெண்டல்ல பல வழிகளை இந்திய கப்பற்படை பயன்படுத்தி வருகிறது, ஆனால் அதிகபட்சம் அதன் தாக்கும் தூரம் சுமார் 500 கிலோமீட்டர்களே, அதுவும் நீர்மூழ்கி என்றால் வெறும் 50 கிலோமீட்டர் தான்.

ஆனால் ஒரு ஏவுகணை சுமார் 1500 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் நீர்மூழ்கியையோ போர் கப்பலையோ தாக்கி அழிக்கும் என்றால் எப்படி இருக்கும். அதை தற்போது செய்து முடித்துள்ளது இந்திய கப்பல்படையும் DRDO-வும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 1000 முதல் 32,000 அடி வரை உளவு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பறக்கும், அவை சோனார், உலோகங்களை கண்டறியும் ராடார், தொலைதொடர்பை கண்காணிக்கும் உணரிகள், கடலில் தென்படும் எண்ணெய் படிவுகளை கண்டறியும் உணரிகள், வெப்பத்தை கண்டறியும் உணரிகள், மற்றும் சோனோபாய் இவற்றை கொண்டு நீருக்கடியில் சில நூறு அடிகள் ஆழத்தில் இருக்கும் நீர்மூழ்கிகளை கண்டறியும், பின்பு தன்னிடம் இருக்கும் நீர்மூழ்கி எதிர்ப்பு டோர்ப்பீடோக்களை வீசும், பொதுவாக இவற்றின் தாக்கும் தூரம் சுமார் 30 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவே.

ஆனால் கீழ்கண்ட ஒரு நிலையை யூகித்து பாருங்கள்

ஒரு P8I ரோந்து விமானம் கடலின் ஒரு குறிப்பிட்ட அதாவது இந்திய எல்லையிலிருந்து சுமார் 1000 கிலோமீட்டருக்கு அப்பால் கடலில் சுமார் 2000 சதுர கிலோமீட்டர் பரப்பை சுமார் 20 சோனோபாய் மூலம் கண்காணிக்க சோனோபாய்களை கடலில் போட்டுவிட்டு அப்பகுதியை விட்டு சென்று விடுகிறது, சோனோபாயின் தகவல்கள் அதி ரகசியம் என்றாலும் உத்தேசமாக அவை 8 மணி நேரம் கடலில் செயல்பாட்டில் இருந்து கொண்டு சுமார் 500 கிலோமீட்டர் அல்லது அதற்கு மேல் தொலைவில் உள்ள இந்திய கப்பல் அல்லது உளவு விமானத்துக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பிக்கொண்டே இருக்கும்.

சோனோபோய் செயல்படும் விதம்

அந்த கண்காணிப்பு வளையத்துக்குள் சீன நீர்மூழ்கி வந்தால் உடனே கப்பல் படைக்கு தெரிந்து விடும், சீன நீர்மூழ்கிக்கும் தெரியும் அந்த சுற்று வட்டாரத்தில் அல்லது சுமார் 500 கிலோமீட்டருக்கு அருகே எந்த இந்திய கப்பலோ விமானமோ இல்லை என்று.

ஆனால் திடீரென அதை பல டோர்ப்பீடோக்களை கொண்டு தாக்கினால், சீனாவால் யூகிக்க முடியாது, நிச்சயம் அது தாக்கி அழிக்கப்பட்டு விடும். இதை இந்த ஸ்மார்ட் டோர்ப்பீடோ மட்டும் தான் செய்யும்,

டோர்ப்பீடோக்களின் தாக்கும் தொலைவை ஒருக்காலும் அதிகரிக்க முடியாது, காரணம் உப்பு நீர் உணரிகளின் செயல்பாட்டை வெகுவாக குறைத்து விடும், ஆனால் டோர்ப்பீடோவை ஒரு ராக்கெட்டில் வைத்து செலுத்தி அதை தொலை தூரம் வரை அனுப்ப முடியும்.

ஜப்பானின் ASROC

குறிப்பாக அமெரிக்காவின் ASROC நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட், ஒரு ராக்கெட்டில் வைத்து செலுத்தப்படும் மிக்க 4 இலகுரக டார்ப்பீடோ தான், ஜப்பானின் TYPE 07 நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டும் மேற்கண்ட ASROC போலத்தான், ஆனால் இவற்றின் தாக்கும் தூரம் 50 கிலோமீட்டர் அல்லது அதற்கும் குறைவே. இவை அனைத்தையும் கப்பலிலிருந்து அவை வீசும்.

 

இந்தியாவின்  இந்த ஸ்மார்ட் டார்ப்பீடோ, சவுரியா ஏவுகணை மூலம் வீசப்படும் ஷைனா டோர்ப்பீடோ ஆகும், இந்திய கப்பற்படை இந்த ஷைனா டோர்ப்பீடோக்களை 2012 முதலே பயன்படுத்தி வருகிறது, மேலும் சவுரியா ஏவுகணை 2010 முதலே படையில் உள்ளது.

சவுரியா ஏவுகணை ஷைனா டோர்ப்பீடோவுடன்

சவுரியா ஏவுகணை ஒரு குவாசி பாலிஸ்டிக் ஏவுகணை இதனால் மணிக்கு சுமார் 9000 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும், இதனால் 7 நிமிடத்தில் 1000 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இலக்கை தாக்க முடியும், அல்லது தகவல் மற்றும் உத்தரவு கிடைத்த 10 நிமிடத்தில் 1000 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள எதிரி நீர்மூழ்கியை தாக்கி அழிக்க முடியும், இது மிக குறைந்த நேரத்தில் எதிரியை நிலை குலைய செய்ய முடியும்,

 

1000 கிலோமீட்டருக்கு தொலைவில் உள்ள நீர்மூழ்கியை கண்டு பிடிப்பது எப்படி என்பதை மேலே கூறியிருந்தேன்.

 

குறிப்பிட்ட அந்த 2000 சதுர கிலோமீட்டர் வளையத்தில் சீன நீர்மூழ்கி கண்டுபிடிக்கப்பட்டதும், தகவல் உடனடியாக ரோந்து விமானம் மூலம் இந்திய சவுரியா ஏவுகணைக்கு கிடைக்கும், அந்த குறிப்பிட்ட இடத்தை நோக்கி சவுரியா செல்லும், அங்கு சென்றதும் தன்னுள் இருக்கும் ஷைனா டோர்ப்பீடோவை கடலில் போடும்.

ஷைனா டோர்ப்பீடோ

ஷைனா டோர்ப்பீடோ உணரிகள் அங்குள்ள சோனோபாய்களுடன் தொடர்பு ஏற்படுத்தி குறிப்பிட்ட இடத்தை நோக்கி செல்லும், ஷைனா டோர்ப்பீடோ ஒலியை பயன்படுத்தி இலக்கை தேர்ந்தெடுக்கும், இதிலும் சில சிக்கல்கள் உள்ளது. அதாவது டோர்ப்பீடோவை எதிரி நீர்மூழ்கி கண்டறிந்தால் நீர்மூழ்கியில் சத்தம் வரும் அனைத்து உபகரணங்களையும் நிறுத்தி விடும். அல்லது நீர்மூழ்கியை விட அதிகம் சத்தம் எழுப்பும் உபகரணங்களை நீரில் செலுத்தி டோர்ப்பீடோவை அதை நோக்கி போக செய்யும். இப்படி பல வழிகள்.

ஷைனா டோர்ப்பீடோவின் தாக்கும் தூரம் சுமார் 15 கிலோமீட்டர், அல்லது சுமார் ஆறு நிமிடங்கள். அதற்குள் இலக்கை தாக்கினால் இலக்கு அழிக்கப்படும் அல்லது இலக்கு தப்பித்து விடும், ஒன்றுக்கு மேல் ஏவுகணைகள் வீசும்போது இலக்கை அழிக்கும் தகவு அதிகரிக்கும்.

சீனா மற்றும் பாகிஸ்தான் தொடர்ந்து அதி நவீன நீர்மூழ்கிகள் மற்றும் சிறப்பு நீர்மூழ்கிகளை பயன்படுத்தி வருகிறது, குறிப்பாக பாகிஸ்தான் இந்தியாவை விட நவீன நீர்மூழ்கிகளை கொண்டுள்ளது, சீனா பல படிகள் முன்னே உள்ளது. இந்தியாவிடம் வெறும் ஆறு ஸ்கார்பியன் நீர்மூழ்கி மற்றும் கற்கால நீர்மூழ்கிகள் சில உள்ளது, அதனால் சீன பாகிஸ்தானிய நீர்மூழ்கிகளை தாக்கி அழிக்க பல்வேறு யுக்திகளை இந்திய கப்பல் படை பயன்படுத்திவருகிறது.

இந்த ஸ்மார்ட் டோர்ப்பீடோவை கப்பலில் சேர்ப்பது என்பது கடினம் காரணம் இதன் அளவு மற்றும் எடை, அதனால் குறிப்பாக நிலத்திலிருந்து ஏவுமாறு தான் இவை இருக்கும்.

நிச்சயம் இந்த ஸ்மார்ட் டோர்ப்பீடோ இந்திய கப்பல் படைக்கு ஒரு புதிய சக்தியை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.