இந்தியாவின் Su 30 MKI சீனாவின் J-16 , எது சிறந்தது

ரஷ்ய தயாரிப்பான சுகோய் போர் விமானத்தை இந்தியாவும் பயன்படுத்துகிறது, இந்தியாவின் உற்ற தோழன் என்ற அழைக்கப்படும் ரஷ்யா அதே விமானத்தை சீனாவுக்கும் கொடுத்துள்ளது, இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் முக்கிய எதிரிக்கு ரஷ்யா அதே விமானத்தை கொடுத்து அவர்கள் தேவைக்கு மாறுதல்கள் செய்யவும் அனுமதித்தது, ஆனால் அதே அனுமதியை இந்தியாவுக்கு தரவில்லை, சிறிது காலம் கழித்து சுகோய் குடும்பத்தின் நவீன விமானமான Su 35 S விமானத்தையும் சீனாவுக்கு விற்றது, இரண்டிலிருந்தும் நன்கு கற்றுக்கொண்ட சீனா ரஷ்யா உதவியுடன் உள்நாட்டிலேயே J-16 என்னும் விமானத்தை தயாரித்தது, இது மற்ற சுகோய் விமானங்களை விட நவீனமானது, கூடவே அதி உயர இடங்களில் சண்டையிடுமாறு மாற்றி வடிவமைக்கப்பட்டது.

தொழில்நுட்ப அடிப்படையில் பார்த்தால் சீனாவின் J-16 மிக நன்கு முன்னேறியுள்ளது, இந்தியாவின் சுகோய் விமானமோ 2002-இல் எப்படி இருந்ததோ அப்படியே உள்ளது, இதற்கு முக்கிய காரணம் இந்தியாவுக்கு விற்ற சுகோய் விமானங்களில் எவ்வித மாறுதல்கள் செய்யவும் ரஷ்யா அனுமதிக்கவில்லை, அதே நேரம் சீனாவுக்கு தொழில்நுட்ப உதவிகள் மேலதிக உதவிகள் என்று ரஷ்யா தொடர்ந்து உதவிகள் செய்தது, அதனால் சீனாவால் வெற்றிகரமாக ஒரு சுகோய் காப்பியை உருவாக்க முடிந்தது.

குறிப்பாக இந்திய சுகோய் விமானத்தின் தொழில்நுட்ப தகவல்களையும் சீனாவின் சுகோய் காப்பியான J-16 விமானத்தின் தொழில்நுட்ப தகவல்களையும் பார்க்கலாம்.

விமானத்தின் உடற்கூறு

இந்தியாவின் சுகோய் விமானம் டைட்டானியம் மற்றும் அலுமினிய பகுதிபொருட்களால் ஆனது, இது விமானத்துக்கு உறுதியை கொடுக்கும், அதே நேரம் விமானத்தின் எடையை அதிகரிக்கும், இந்த உலோகங்களின் விலையும் அதிகம், அதேநேரம் ராடாரால் எளிதில் இதை கண்டுபிடிக்கவும் உதவும், பொதுவாக 4-ம் தலைமுறை விமானங்கள் எல்லாமே இந்த உலோகங்களால் தான் தயாரிக்கப்படுகிறது.

சீனாவின் J-16  போர் விமானம் நவீன உலோக கலவைகள் மூலம் செய்யப்படுகிறது, இதன் எடை குறைவு, டைட்டானியத்தை விட உறுதிவாய்ந்தது, இந்த உலோகக்கலைவையின் விலையும் குறைவு, மேலும் ராடாரில் அவ்வளவு எளிதில் சிக்கவும் செய்யாது, நவீன 4-ம் தலைமுறை, 5-ம் தலைமுறை போர்விமானங்கள் அனைத்துமே உலோகக்கலைவையால் தான் செய்யப்படுகிறது, முக்கியமாக இந்தியாவின் தேஜாஸ், பிரான்சின் ரபேல் போன்றவை இது போன்ற உலோகக்கலைவையால் தான் செய்யப்படுகிறது.

விமானத்தின் ராடார்

இந்திய சுகோயின் ராடர் பழைய BARS N011M ஆகும், இது ஒரு ஹைபிரிட் ராடார், அதாவது மேம்படுத்தப்பட்ட PESA ராடார், மற்ற 4-ம் தலைமுறை ராடார்களை விட சிறிது செயல்திறன் மிக்கது, இந்த ராடாரால்

வான் இலக்குகளை கண்டறியும் தூரம் – 400 கிலோமீட்டர்
ஏவுகணைகளை வான் இலக்கு மீது வழிகாட்டும் தூரம் – 200 கிலோமீட்டர்
போர் விமானங்களை இலக்கு வைக்கும் தூரம் – 140 கிலோமீட்டர்

அதோடு ஒரே நேரத்தில் சுமார் 15 வான் இலக்குகளை குறித்து துல்லிய தகவலை தரும், அதே நேரம் நான்கு வான் இலக்குகளை ஒரே நேரம் குறிவைத்து நான்கு ஏவுகணைகளுக்கு வழிகாட்டும்.

சீனாவின் J 16 விமானத்தில் நவீன KLJ-7A  நவீன AESA ராடார் உள்ளது , மற்ற ஹைபிரிட் ராடார்களை விட அதி நவீனமானது, மேலும் அதிக தூரம் ஏவுகணைகளை வழிகாட்டும், கூடவே இவ்வகை ராடார்களை ஜாமிங் செய்வது மிகக்கடினம், அதோடு அதிக இலக்குகளை ஒரே நேரத்தில் குறிவைக்கும். இந்த ராடாரால்

வான் இலக்குகளை கண்டறியும் தூரம் – 400 கிலோமீட்டர்
ஏவுகணைகளை வான் இலக்கு மீது வழிகாட்டும் தூரம் – 250 கிலோமீட்டர்
போர் விமானங்களை இலக்கு வைக்கும் தூரம் – 250 கிலோமீட்டர்

இதனால் ஒரே நேரம் 20 வான் இலக்குகளை குறிவைக்க முடியும், அதே நேரம் 8 வான் இலக்குகளுக்கு ஏவுகணைகளை வழிகாட்ட முடியும்.

ஏவுகணைகள்

சுகோய் விமானத்தின் ராடாரால் 140 கிலோமீட்டர் தொலைவு வரை உள்ள விமானங்களை மட்டுமே குறிவைக்க முடியும், சுகோய் விமானத்தால் 10 வான் தாக்கும் ஏவுகணைகளை சுமக்க முடியும் ஒரே நேரம் நான்கு ஏவுகணைகளை வெவ்வேறு இலக்குகளை நோக்கி செலுத்த முடியும், ஏவுகணைகளின் தாக்கும் தூரம்

1. R27EA – தாக்கும் தூரம் 130 கிலோமீட்டர்
2. R77M- தாக்கும் தூரம் 80 கிலோமீட்டர்

J-16 விமானத்தின் ராடாரால் சுமார் 250 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் இருக்கும் வான் இலக்குகளை கூட சரியாக குறி வைக்க முடியும், அதே நேரம் அந்த இலக்கு மீது ஏவுகணைகளை வீசி சரியாக வழிகாட்டவும் முடியும், இதன் AESA ராடார் ஏவுகணைகளை தொலை தூரம் வரை மிகத்துல்லியமாக வழிகாட்டும். ஏவுகணைகளின் தாக்கும் தூரம்

1. PL 15- 250 கிலோமீட்டர்
2. PL 21- 300 கிலோமீட்டர்

எச்சரிக்கை செய்யும் கருவிகள்

இந்தியாவின் சுகோய் விமானத்தை எதிரி ராடார் குறிவைத்தாலோ அல்லது எதிரி ஏவுகணை குறிவைத்தாலோ, இதிலுள்ள ராடார் அலைகளை உணரும் கருவிகள் (RWR-Radar Warning Receiver ) விமானத்தை எச்சரிக்கை செய்யும், இதனால் தான் குறிவைக்கப்பட்டுள்ளதை விமானியால் முன்கூட்டியே உணர முடியும்.

சீனாவின் J-16  விமானத்திலும் இந்த ராடார் உணரும் கருவிகள் உள்ளது, மேலதிகமாக ஏவுகணை எத்திசையிலிருந்து வருகிறது, எவ்வளவு தொலைவிலிருந்து வருகிறது என்பதை குறித்த எச்சரிக்கை செய்யும் அமைப்பும் உள்ளது, இதன் ஆங்கில பெயர் MAWS ( Missile Approach warning Receiver )

இது போன்ற ஏவுகணை வரும் தொலைவை அறியும் உணரிகளை சுகோய் விமானத்தில் பொருத்த இந்தியா ரஷ்யாவிடம் கேட்டது, ஆனால் விமானத்தில் மாறுபாடுகள் எதுவும் செய்யக்கூடாது என்று ரஷ்யா மறுத்துவிட்டது, இந்தியாவின் தாக்கும் ஹெலிகாப்டர்கள், ருத்ரா ஹெலிகாப்டர், தேஜாஸ் விமானத்தில் கூட இது போன்ற (MAWS) எச்சரிக்கை செய்யும் அமைப்புகள் உள்ளது, ஆனால் சுகோய் விமானத்தில் அது இல்லை.

எஞ்சின்

சுகோய் விமானத்தில் ரஷ்யா தயாரிப்பான AL-31FP  என்ற எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது, இது சுமார் சுமார் 122 கிலோ நியூட்டன் அளவு சக்தியை வெளிப்படுத்தும், அதே நேரம் இந்த எஞ்சின்கள் விமானத்தின் உயரம் மற்றும் திரும்பும் வேகத்தை துரிதப்படுத்த இதன் எஞ்சின் வெளிப்புற அமைப்பு வளையும் தன்மை கொண்டது (TVC- Thrust Vectoring Control ), இது இதன் சிறப்பம்சம் ஆகும், மேலும் AL-31FP  எஞ்சின் நம்பத்தன்மை குறைந்த எஞ்சின், சுகோய் விமானத்தில் அமெரிக்க அல்லது பிரிட்டனின் எஞ்சினை பொருத்த விமானப்படை கேட்டதற்கு ரஷ்யா மறுத்து விட்டது, அதே நேரம் AL-41 எஞ்சினை தரலாம் என்று ரஷ்யா கூறியது, ஆனால் விலை மிக அதிகமாக இருப்பதால் வேண்டாம் என்று இந்தியா மறுத்துவிட்டது

J-16 விமானத்தில் சீனாவின் தயாரிப்பான WS-10B என்ற எஞ்சின் உள்ளது, இது சுமார் 140 கிலோ நியூட்டன் அளவு சக்தியை வெளிப்படுத்தும், ஆனால் இதன் எஞ்சின்களின் வெளிப்புற அமைப்பு வளையும் தன்மை அற்றது, அதனால் இது ஒரு U-Turn செய்ய இந்திய சுகோய்களை விட சிறிது வினாடிகள் கூட எடுத்துக்கொள்ளும். அதே நேரம் சீனாவின் எஞ்சின் அதிக சக்தியும் எஞ்சினின் மொத்த கட்டுப்பாட்டு அமைப்பும் கணிப்பொறியால் கட்டுப்படுத்தப்படுவதால் சீன எஞ்சின் ரஷ்யா எஞ்சினை விட சிறப்பாகவே செயல்படும், நவீன எஞ்சின்கள் எல்லாமே கணிப்பொறி கட்டுப்பாட்டால் இயங்குபவை.

கூடுதலாக

ராடார்கள் மற்றும் விமானங்கள் தகவல் பரிமாறுவதை செயலிழக்க செய்யும் J-16D மாதிரியையும் சீனா தன் விமானப்படையில் வைத்துள்ளது, இந்த J-16 விமானங்கள் சுமார் 40-க்கும் மேல் இந்திய எல்லையின் அருகே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹோட்டான் விமான தளத்தில் தற்போது நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

சீனாவிடம் தற்போது சுமார் 150-க்கும் மேல் J-16 விமானங்கள் உள்ளது, இந்தியாவிடம் சுமார் 240 சுகோய் விமானங்கள் உள்ளது

சீனாJ-16 விமானங்களை இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்களை எதிர்கொள்ளும் படியே சிறப்பாக வடிவமைத்துள்ளது, அதே நேரம் நவீன தொழில்நுட்பங்களையும் அதற்கேற்றவாறு சேர்த்து வருகிறது. ஆனால் இந்திய சுகோய் விமானம் 2002-இல் வாங்கும் போது எப்படி இருந்ததோ அப்படியே 20 வருட காலமாக இருக்கிறது, இதற்கு முக்கிய காரணம் ரஷ்யா விமானத்தில் எந்த மாறுதல்களையும் செய்யக்கூடாது என்று இந்தியாவை நிர்பந்தித்ததே காரணம், இந்தியாவும் ரஷ்யாவின் மனம் நோகாமல் அப்படியே செய்து வருகிறது.

சீனாவின் J-16 விமானத்தை எதிர்கொள்ள இந்தியா நிச்சயம் ரபேல் போர் விமானங்களை தான் பயன்படுத்தியதாக வேண்டும், இந்திய சுகோய் விமானங்கள் சீன விமானங்களிடம் போட்டியிட தகுதியற்றவை,