சீனாவிடம் சரணடைந்த இந்திய அரசு, வெறுமனே போன ராணுவ வீரர்களின் உயிர்கள்

நேற்று (19-06-2020 ) அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்தவுடன் நாட்டு மக்களுக்கு கூறிய உரையில் பிரதமர் மோடியின் கருத்துக்கள் இந்திய மக்களை மட்டுமல்ல, தெற்காசியாவில் இந்தியாவின் தலைமையை விரும்பிய அனைத்து நாடுகளுக்குமே பேரதிர்ச்சியாக இருந்தது, சீனாவை கட்டி வைக்கும் சக்தி இந்தியாவுக்கு உண்டு என்று எண்ணிய பல உலக நாடுகளுக்கு இது நிச்சயம் ஒரு ஏமாற்றம் தான். எல்லையில் வீரர்கள் தாக்கப்பட்டு கொல்லப்படும் முன்பே சீனாவின் அத்துமீறல்கள் எல்லா முன்னணி ஊடகங்களிலும் தலையங்கமாக இருந்தது, ஆனால் அரசும் ராணுவ தலைமையும் இது குறித்து தொடர்ந்து மறுப்பை தெரிவித்து வந்தது.

05-05-2020 அன்று இந்திய ராணுவத்தின் ரோந்து செல்லும் குழுவினர், இந்திய சீன எல்லைப்பகுதியின் பிங்கர் 8 என்ற பகுதிவரை ரோந்து செல்ல ஆயத்தமானார்கள், இது 1962 போருக்கு பிறகு 04-05-2020 வரை நடக்கும் நிகழ்வு, ஆனால் மே 5 அன்று சீனப்படைகள் இந்திய வீரர்களை பிங்கர் 5 பகுதியில் வைத்து தடுத்து நிறுத்தினார்கள், இதனால் தொடர்ந்து ரோந்து செல்ல இயலாமல் போகவே அப்பகுதியின் ராணுவ காமாண்டிங் அதிகாரி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார், சம்பவம் கைமீறிப்போக துவங்கியதும் இருதரப்பும் சரமாரியாக தாக்கிக்கொண்டனர், இரு நாட்டு வீரர்களுக்கும் காயங்கள் ஏற்பட்டது, காமாண்டிங் அதிகாரி படுகாயமுற்று தற்போதும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் வெறும் லத்தி மற்றும் கற்களை பயன்படுத்தினர், சீனர்கள் முள்கம்பிகளை உருட்டுக்கட்டையில் சுற்றி இந்திய வீரர்களை தாக்கினார்கள். இதனால் இந்திய தரப்புக்கு காயம் அதிகமாகவே இருந்தது.

சீனா இந்திய வீரர்களை தாக்க பயன்படுத்திய முள்கம்பியின் மாதிரி படம்

பிரச்சனையை பேசி தீர்க்க இரு தரப்பு ராணுவ உயரதிகாரிகளும் ஒத்துக்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர், இந்திய தரப்பில் தொடர்ந்து பிங்கர் 8 பகுதி வரை ரோந்து செல்ல ராணுவம் கேட்டது , இதற்கு சீனா மறுப்பு தெரிவித்தது, தொடர்ந்து பல சுற்று பேச்சுவார்த்தை நடந்தும் சீனா மறுப்பு தெரிவித்தது, கூடவே பிங்கர் 4 பகுதியின் மறுபுறம் கட்டுமானங்களை ஆரம்பித்தது, மேலதிக படைகளை குவிக்க துவங்கியது.

 

இந்தியா சீனா ரோந்து செல்லும் பிங்கர் பகுதிகள்

சீனா ரோந்து செல்லும் வீரர்களை தாக்கும் யுக்தியை மேம்படுத்தி முள்ளால் ஆன கட்டைகளை பயன்படுத்துகிறது என்று ராணுவ உயரதிகாரிகளிடம் கூறிய போது ராணுவத்துக்கு புதிதாக கலவரத்தை அடக்கும் காவல்துறைக்கு வழங்கும் கலவரத்தடுப்பு ஆடைகளை வாங்கி வீரர்களுக்கு வழங்க முடிவெடுத்தது.

ஜூன் மாத துவக்கத்தில் பிங்கர் 4 மலையின் மறுபகுதியில் பெரிய அளவு கட்டுமானம் மற்றும் படைக்குவிப்பை சீனா செய்தது, கூடவே சீன வீரர்கள் பிங்கர் 4 மலை உச்சியை அடைந்து அங்கும் நிலைகளை அமைத்து மலையின் கீழ் பகுதியில் உள்ள இந்தோ திபெத் காவல் நிலையை நேரடியாக கண்காணிக்கும் நிலையில் உள்ளது, தற்போதைய சீன நிலைக்கும் இந்திய நிலைக்கும் இடையே உள்ள தூரம் வெறும் 500 மீட்டர் தான். அதுவும் ஒரு மலை சரிவு மட்டுமே,

இந்திய நிலைக்கு மிக அருகே மலை உச்சியில் நிலை கொண்டுள்ள சீனப்படை

சீனாவின் இந்த நில அபகரிப்பு சுமார் 8 கிலோமீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் அதுவும் பாங்காங் ஏரிக்கரையில் பகுதியில் மட்டும்.

இதை அரசோ ராணுவமோ இன்னும் மக்களுக்கு அறிவிக்கவில்லை, ஊடகங்களும், செயற்கைகோள் புகைப்பட வல்லுனர்களும், வெளிநாட்டு நிபுணர்களும் ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளனர். இதை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்திய ராணுவத்தின் படைக்குவிப்பும் ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சுவார்த்தையும் ஊர்ஜிதப்படுத்துகிறது.

அங்கிருந்து சுமார் 100 கிலோமீட்டர் வடக்கே கல்வான் நதியும் நதிக்கரையும் உள்ளது, இந்த நதி சீனாவிலிருந்து பாய்ந்து இந்தியாவின் ஷயாக் நதியுடன் இணைகிறது, கல்வான் நதி இந்திய எல்லைக்குள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது.

கல்வான் பகுதி

லே விமானதளத்திலிருந்து ஒரு சாலை துவங்கி , ஷயாக் நதிக்கரை வழியாக வடக்கே உள்ள தவுலத் பெக் ஓல்டி விமான ஓடுதளத்தை இணைக்கிறது, சுமார் 220 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த சாலையின் பணி 2000-இல் துவங்கி 2019-இல் முடிவடைந்தது. இந்த சாலை இரு விமான தளங்களை இணைப்பதுடன் 200 கிலோமீட்டர் நீள இந்திய சீன எல்லைக்கு ராணுவத்தை சாலை வழியாக எளிதாக அனுப்பவும் முடியும். ஆரம்பம் முதலே இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தும் , இந்தியா தொடர்ந்து இந்த வேலையை செய்து அதை முடித்தும் விட்டது.

சீனாவுக்கு அந்த சாலையை கண்காணிக்க கல்வான் நதிக்கரையை மொத்தமாக கைப்பற்ற வேண்டும், இது சிறிய நிலை அல்ல, ஏற்கனவே சொன்னது போல கல்வான் நதி இந்திய எல்லைக்குள் சுமார் 5 கிலோமீட்டர் தூரம் பாய்கிறது, இது முழுவதும் கைப்பற்றினால் மட்டுமே சீனாவுக்கு எளிதாக இந்த சாலையை அவர்கள் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

அதற்கு ஆரம்பமாக சீனா முதலில் கல்வான் நதியின் மேல் ஒரு தடுப்பணையை கட்டியது, இது ஜூன் 9-ம் தேதிக்கு பின்பு, அதற்கு முன்பாகவே சீனா அப்பகுதியில் படைகளை குவித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன, இந்திய ராணுவமும் அப்பகுதியில் அதிகப்படியான வீரர்களை குவிப்பதாகவும் செய்திகளும் ஆதாரங்களும் கிடைத்தது.

ஜூன் 9-ம் தேதிக்கு பிறகு இந்திய எல்லைக்குள் சுமார் 200 மீட்டர் தூரம் ஊடுருவி கல்வான் ஆற்றின் கரையோரம் ( PP 14 )ஒரு கண்காணிக்கும் கோபுரத்தை கட்டியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள் சீனாவுடன் பேசி அதை நீக்குமாறு வலியுறுத்தினார். மேலும் அப்பகுதியின் காமாண்டிங் அதிகாரி கலோனல் சந்தோஷ் பாபுவும் சீனர்களை எச்சரித்ததோடு அதை இடித்து தள்ளவும் தயாரானார்.

ஜூன் 15 இரவு, இந்திய எல்லைக்குள் இருந்த அந்த சீன கண்காணிப்பு நிலையை காமாண்டிங் அதிகாரி கலோனல் சந்தோஷ் பாபு தலைமையிலான படை இடித்து தரைமட்டமாக்கியது. இது ரியூட்டர்ஸ் செய்தி நிறுவனம் பிளானட் லேப் செயற்கைகோள் நிறுவனத்திடமிருந்து வாங்கிய செயற்கைகோள் புகைப்படத்தில் தெளிவாக தெரிகிறது.

இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சீன கண்காணிப்பு நிலை

மறுநாள் காலை இந்திய ஊடகங்களில் செய்தி பரவ துவங்கியது, கலோனல் உட்பட மூவர் சீனாவுடனான சண்டையில் கொல்லப்பட்டதாகவும், கல்வான் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதாகவும் செய்திகள் வெளியாகின. நேரம் செல்ல செல்ல வீரர்களின் உயிரிழப்பு 20-ஐ தாண்டியதாகவும் செய்திகள் வெளியாகியது.

ஜூன் 16 அன்று மாலை இதற்கு விளக்கமளித்து அறிக்கை வெளியிட்ட இந்திய ராணுவம் சீனாவுடனான மோதலில் 3 வீரர்கள் கொல்லப்படாததாகவும் மேலும் 17 பேர் காயப்பட்டு குளிரால் இறந்ததாகவும் கூறியது, அன்று இரவு நாட்டு மக்களுக்கும் வீரர்களின் இறப்புக்கு ஆறுதலாக செய்தி வெளியிட்ட இந்திய பிரதமர், 20 இந்திய வீரர்கள் சீனாவுடனான சண்டையில் வீர மரணம் அடைந்தார்கள். அவர்களின் தியாகம் வீண் போகாது என்றும் கூறினார்.

இந்திய வீரர்களை தாக்க சீனா பயன்படுத்திய ஆயுதம்

ஜூன் 17 அன்று ஊடகங்களில் இந்திய ராணுவம் சீனாவிடமிருந்து கைப்பற்றிய இரும்பு ராடுகளில் ஆணிகளை வெல்ட் செய்த கம்பிகளின் புகைப்படங்கள் வெளியாகின, இது சீனாவின் கோர முகத்தை காட்டுகிறது, ஏற்கனவே ஒரு மாதத்திற்கு முன்பு பாங்காங் ஏரிப்பகுதியில் இந்திய வீரர்களை முள்கம்பியால் தாக்கியது நினைவிருக்கலாம். அதோடு வீரர்களின் உடல்களை சேதப்படுத்தியதாகவும் பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இது மூர்க்கத்தனமாக தாக்கும் சீனாவுடன் இன்னும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமா என்று பலரின் மனதிலும் கேள்வியை எழுப்பியது ஆனால் தொடர்ந்து இரண்டு நாளாக ராணுவ உயரதிகாரிகள் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் சீனா கைது செய்து வைத்திருந்த ஒரு கலோனல் மற்றும் மூன்று மேஜர் உட்பட 10 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த விடுதலைக்கு பிறகு சீனாவுடன் இந்திய ராணுவ அதிகாரிகள் பேச்சு நடத்தியதாக தெரியவில்லை, ஆனால் வெளியுறவு துறை சார்பில் சீனாவுடன் தொடர் பேச்சுகள் நடந்து வந்தது. அனைத்திலும் சீனா ஒரே நிலைப்பாட்டை தான் வைத்தது, கல்வான் பகுதி சீனாவுக்கு தான் சொந்தம், இந்தியா தான் அங்கு அத்துமீறுகிறது என்று. இந்தியா தரப்பில் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பித்த போதும் சீனா ஒத்துக்கொள்வதாக இல்லை.

இந்திய வீரர்களின் குடும்பத்துக்கு ஆறுதலாக அமெரிக்க, ஜெர்மன், பிரான்ஸ், ஜப்பானிய பிரதிநிதிகளும் இரங்கல் தெரிவித்து சீனாவை கண்டித்தனர்.

அதே நேரம் சீனா மேலதிக படைகளை கல்வான், மற்றும் பாங்காங் எரிப்பகுதியில் குவித்ததோடு, சுஸுல் மற்றும் கோக்ரா பகுதிகளிலும் இந்திய எல்லைக்குள் ஊடுருவியது.

ஜூன் 16 இரவு பிரதமர் மேலும் பேசும் போது, அனைத்து கட்சி கூட்டத்தை 19-ம் தேதி கூட்டினார். ஜூன் 17,18 மற்றும் 19 ஆகிய தினங்களில், இந்திய ராணுவம் தொடர்ந்து மேலதிக படைகளை எல்லைக்கு நகர்த்தியது மட்டுமல்லாமல், விமானப்படை அதி நவீன தாக்கும் ஹெலிகாப்டர்களை ராஜஸ்தானிலிருந்து இந்திய சீன எல்லையான லே -வுக்கு கொண்டு வந்தது.

கலோனல் சந்தோஷ் பாபுவின் மரணத்திற்கு பிறகு கல்வான் பகுதியில் என்ன நடக்கிறது என்று மூன்று நாளாக தெரியவில்லை, சீனாவின் அறிக்கைகளை பார்க்கும் போது கல்வான் பகுதியை கைப்பற்றி ஷயாக் நதிக்கரை வரை சீன படைகள் வந்திருக்க கூடும், இதற்கு ஜூன் 16 அன்று வெளியான செயற்கைகோள் படங்களை ஆதாரமாக வைக்கலாம், அதில் சாரை சாரையாக சுமார் 300 சீன ராணுவ வாகனங்கள் கல்வான் நதிக்கரையோரம் அணிவகுத்து நின்றதை காணலாம்.

ஜூன் 19 இரவு அனைத்து கட்சிக்கூட்டத்தில் அனைத்து தேசிய கட்சிகளுமே சீனாவின் போக்கை கண்டித்ததோடு, இந்திய அரசு சீனாவுக்கு எதிராக எடுக்கும் எந்த முடிவிலும் அரசுக்கு உறுதுணையாக இருப்போம் என்று கூறியது.

ஆனால் அன்று இரவு நாட்டுமக்களுக்கு உரையாற்றிய பிரதமர் ஒரே பல்டியாக இந்திய நிலத்தில் யாரும் ஊடுருவவில்லை, இந்திய நிலைகள் எதுவும் கைப்பற்றப்படவும் இல்லை என்று கூறினார்.

இது ஒட்டுமொத்த தேசத்தையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, எதிர்க்கட்சிகள், முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஊடகங்கள், பாதுகாப்புத்துறை வல்லுநர்கள் ஏன் சர்வதேச பார்வையாளர்கள் வரை பிரதமரின் இந்த அடி பணிந்த அறிக்கையை விமர்சித்தனர், வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு செய்யும் துரோகம் என்று பல முன்னாள் ராணுவ வீரர்கள் கருத்து தெரிவித்தனர்.

இது மட்டுமல்லாது, இந்தியாவின் மீதிருந்த உலக நாடுகளின் மரியாதையையும் இது சிதைத்தது, தெற்காசியாவின் வல்லரசு என்ற பிம்பத்தையும் உடைத்து தரைமட்டமாக்கியது, இந்தியாவை நம்பி களத்தில் குதித்தால் நிச்சயம் காலை வாரிவிடும் என்று நேரடியாக நட்பு நாடுகளுக்கு பிரதமரின் இந்த உரை இருந்தது.

ஏற்கனவே ராணுவமும் வெளியுறவுத்துறையும் பிரதமரின் அறிக்கையும் ஒன்றுக்கொன்று முரணாக இருந்தும் யாரும் எதுவும் கேட்கவில்லை, ஆனால் பிரதமரின் காலை வாரிவிடும் இந்த அறிவிப்பு பேரிடியாகவே இருந்தது.

சீனா கல்வான் பகுதி எங்களுடையது என்றது, இந்திய பிரதமர் அதை உறுதிப்படுத்தினார், அதுதான் நேற்று நடந்தது. இருந்தாலும் கல்வான் பகுதியை காக்க தங்கள் இன்னுயிரை நீர்த்த வீரர்களை இந்தியர்கள் யாரும் மறக்கமாட்டார்கள்.

முன்பெல்லாம் போரிட்டு தோல்வியடைந்தால் தான் நிலங்கள் இழக்கப்படும், ஆனால் தற்போது ..?