பாரக் 8 வான் எதிர்ப்பு ஏவுகணையின் தாக்கும் தூரத்தை அதிகரிக்க முடிவு.

இந்திய இஸ்ரேலிய கூட்டு தயாரிப்பில் உருவான பாரக் 8 ஏவுகணையின் தாக்கும் தூரத்தை அதிகரிக்கும் பணிகள் ஏறத்தாழ முடிந்து விட்டதாகவும், இந்த தூரம் அதிகரிக்கப்பட்ட ஏவுகணைகளையே இந்திய கப்பல் படையின் போர்க்கப்பல்களில் சேர்க்கப் போவதாக இஸ்ரேலிய நிறுவனமும் இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாட்டு ஆராய்ச்சி துறையும் தெரிவித்துள்ளது. முதலில் 70 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் விதமாக இந்த ஏவுகணை வடிவமைக்கப்பட்டு இஸ்ரேலிய போர்க்கப்பல்களில் முதல் கட்டமாக சேர்க்கப்பட்டது, தற்போது இதன் தாக்கும் தூரத்தை 20 கிலோமீட்டர் அதிகரித்து 90 கிலோமீட்டராக மாற்றியுள்ளது.

இதனுள் இருக்கும் ராக்கெட் மோட்டார் என்ஜின் இந்தியாவின் DRDO-வால் தயாரிக்கப்பட்டது ஆகும், இதன் உந்து அமைப்பில் கொஞ்சம் மாறுதல்களை சேர்த்து எடையைக் குறைத்து அதன் தாக்கும் தூரத்தை அதிகரித்துள்ளதாக DRDO அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதன் அடிப்படையில் இஸ்ரேலிய நிறுவனம் மேலும் சில மாறுதல்கள் செய்து தனது சொந்த தயாரிப்பில் 150 கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் புதிய ரக ஏவுகணையை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது, இதில் இந்தியாவின் பங்களிப்பு எதுவும் இல்லை என்றும், இருந்தாலும் இதை இந்தியாவிற்கு தருவதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்தியாவும் இதன் அடிப்படயில் தொலை தூர வான் எதிர்ப்பு ஏவுகணையை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதை வரும் காலத்தில் விமானப்படைக்கு வழங்க இருப்பதாகவும் DRDO அதிகாரிகள் தெரிவித்தனர், இதை எதிரிகளின் Cruise ரக ஏவுகணைகளை மனதில் வைத்து உருவாக்குவதாகவும், சீனா மற்றும் பாகிஸ்தானின் Cruise ஏவுகணைகளை அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கும் முன்பே தொலை தூரத்தில் வைத்து தாக்கி அழிக்க முடியும் என்றும் தெரிவித்தனர், இதன் தாக்கும் தூரமும் சுமார் 150 கிலோ மீட்டருக்கு மேல் இருக்கும்.

பாரக் 8 ஏவுகணையை இந்தியாவின் போர்க் கப்பல்களில் முதல் கட்டமாகவும், விமானப்படைக்கு இரண்டாம் கட்ட உற்பத்தி நிலையிலும், ராணுவத்திற்கு மூன்றாவது தயாரிப்பிலும் வழங்க DRDO திட்டமிட்டுள்ளது, இவை அனைத்தையும் 2025 க்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளது.