சேவ் சிரியா, இப்போது ஐட்லிப் நகரம்

சரியாக சுமார் 2 வருடங்களுக்கு முன்பு சேவ் சிரியா என்ற வார்த்தை உலகம் முழுவதும் எதிரொலித்தது, தமிழகத்திலும் அதன் தாக்கம் அதிகமாகவே இருந்தது, அதற்கு காரணம் சிரிய கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கவுத்தா நகரை கைப்பற்ற ரஷ்ய, சிரிய படைகளோடு ஹெஸ்புல்லா தீவிரவாதிகள் நடத்திய மிக கடுமையான போரே, பல மக்களை கொன்று சிரிய கிளர்ச்சி படைகளை விரட்டியடித்து கவுத்தா பகுதியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது சிரியா. இப்படி அலெப்போ, ஹோம்ஸ் இன்னும் பல முக்கிய நகரங்களை கிளர்ச்சியாளர்களிடமிருந்து ரஷ்ய விமானப்படை உதவியுடன் மீட்டது சிரியா, இங்கு மீதம் இருந்த அனைத்து கிளர்ச்சி படைகளும் அங்கிருந்து தப்பி கிளர்ச்சியாளர்களின் கடைசி புகலிடமான இடிலிப் நகரில் தஞ்சமடைந்தனர். இப்போது இந்த நகரை கைப்பற்ற தான் சிரியாவும் ரஷ்யாவும் கூடவே ஈரானிய படைகள் மற்றும் ஹெஸ்புல்லா தீவிரவாதிகளும் கடும் தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர்.

ஐட்லிப் நகரம் தான் சிரிய கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரம், இதை கைப்பற்றிவிட்டால் சிரிய உள்நாட்டு போர் முடிவுபெற்றது என்றே கருதலாம், 2015-இல் சிரிய அரசு படைகளிடமிருந்து இந்த முக்கியத்துவம் வாய்ந்த நகரை கைப்பற்றி தங்கள் கோட்டையாக வைத்துள்ளது சிரிய கிளர்ச்சி படைகள், அதோடு பல இடங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட கிளர்ச்சியாளர்களின் கடைசி அடைக்கலமும் இந்த ஐட்லிப் நகரம் தான்.

சிரிய உள்நாட்டுப்போரின் போது பல சிரிய நாட்டவர் அங்கிருந்து பெயர்ந்து வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்தனர், ஐரோப்பா மீது சிரிய நாட்டு மக்கள் கூட்டம் கூட்டமாக குடி பெயர துவங்கினர், கூடுதல் சிரிய மக்கள் ஐரோப்பா நோக்கி அடைக்கலம் தேடாமல் இருக்கவும் அவர்களை அருகிலேயே மீள் குடியமர்த்தவும் துருக்கியுடன் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா ஒப்பந்தம் போட்டனர், அதன்படி துருக்கியில் தஞ்சமடையும் சிரிய மக்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதே, அதன்படி இதுவரை துருக்கி நடந்து வருகிறது.

இதுவரை துருக்கியில் தஞ்சமடைந்துள்ள சிரிய மக்களின் எண்ணிக்கை சுமார் 40 லட்சத்தை தாண்டும், இதனால் துருக்கிக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்ற துருக்கியின் கூற்று சரியே, மேலும் கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரை அரச படைகள் கைப்பற்றும் போது அங்கிருக்கும் மக்கள் புலம் பெயர்ந்து துருக்கியில் அல்லது கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் தான் தஞ்சமடைவார்கள்.

இதை தடுக்கவே மற்ற இடங்களிருந்து இடம்பெயரும் மக்களை சிரியாவுக்குளேயே கிளர்ச்சி படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள நகரில் தங்க வைக்க துருக்கி திட்டமிட்டது, அதன்படி துருக்கி எல்லையில் உள்ள ஐட்லிப் நகரம் தேர்வு செய்யப்பட்டு அந்த நகரை சுற்றி துருக்கிய ராணுவம் நிலை நிறுத்தப்பட்டது, கூடவே அப்பகுதியின் எல்லைகளை துருக்கிய ராணுவமும் ரஷ்யா ராணுவமும் ரோந்து செல்லலாம் என்ற உடன்படிக்கையும் ரஷ்யாவின் சொச்சி நகரில் கடந்த வருடம் கையெழுத்தானது.

ஐட்லிப் நகரில் தற்போது கணக்குப்படி சுமார் 30 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள், இதில் சுமார் 1 லட்சம் வரை கிளர்ச்சி படை வீரர்களும் இருப்பார்கள், இதில் வெளிநாட்டை சேர்ந்த கிளர்ச்சியாளர்களும் தீவிரவாதிகள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட சில தீவிரவாத குழுக்களும் இங்கே அடைக்கலம் புகுந்துள்ளனர்.

இந்த நகரை கட்டியாள்வது துருக்கி தான், சொச்சியில் கையெழுத்தான ஒப்பந்தத்தை கிழித்தெறிந்துவிட்டு இட்லிப் நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவோடு சிறிய அரசுப்படை ஐட்லிப் நகருக்கு வெளியே முகாமிட்டு கடந்த பெப்ருவரி 20-ம் தேதி முதல் தாக்குதலை துவக்கியது, ஆரம்பத்தில் சிறியதாக இருந்த இந்த போர் கடந்த சில தினங்களாக விஸ்வரூபமெடுத்துள்ளது.

ஐட்லிப் நகருக்கு காவலாக இருந்த துருக்கிய படைகள் மீதும் ரஷ்ய விமானப்படை குண்டு வீசியது, இதில் சுமார் 3 துருக்கி வீரர்கள் இறந்தனர் பலர் காயமுற்றனர். இதற்கு பதிலடியாக ஆளில்லா உளவு விமானங்கள் மூலம் சிரிய ராணுவத்தின் முகாம்கள் சிலவற்றை தாக்கியது, அதோடு சிரிய டாங்கிகள் ஆர்டிலரியையும் குண்டு வீசி அழித்தது இந்த ஆளில்லா தாக்கும் விமானங்கள்.

அடுத்த சில நாட்களில் ஐட்லிப் நகரை நோக்கி சென்று கொண்டிருந்த துருக்கிய ராணுவ வாகனங்கள் மீது ரஷ்ய விமானப்படை தாக்கியது, இதனால் கோபமுற்ற துருக்கி இன்னும் பல சிரிய ராணுவ காமாண்டிங் நிலைகளை தாக்கியது, இதிலும் பல சிரிய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர், கூடவே ஒரு காமாண்டிங் அதிகாரியும் கொல்லப்பட்டார்.

இதற்கு மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கூறிய துருக்கி அரசு, பெப்ருவரி மாதத்திற்குள் தாக்குதலை நிறுத்தி படைகளை விலக்காவிட்டால் துருக்கி சிரியா மீது நேரடியாக போர் செய்யும் என்று அறிவித்தது. இதை பொருட்படுத்தாமல் நேற்று முன்தினம் (27-02-2020) அன்று சிரியாவின் ஐட்லிப் நகரில் உள்ள துருக்கிய ராணுவ நிலை ஒன்றை ரஷ்ய விமானப்படை குண்டுவீசி அழித்தது, இதில் சுமார் 40 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதற்கு விளக்கமளித்த ரஷ்யா, குண்டு வீசுமிடத்தில் தீவிராவதிகள் இருந்தார்கள் அவர்களோடு துருக்கிய ராணுவ வீரர்களும் இருந்தார்கள் என்று துருக்கி அரசிடம் கூறியது, இதற்கு பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்தனர், அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளோடு இஸ்ரேலும் இறந்த துருக்கி வீரர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்தது.

இது குறித்து ரஷ்ய அதிபர் புதனுடன் துருக்கிய அதிபர் எர்டோகன் தொலைபேசியில் பேச்சு நடத்தினார், கூடவே அமெரிக்காவுடனும் நாட்டோ அமைப்புடனும் எர்டோகன் தொடர்பு கொண்டு பேசினார்.

நேற்று இரவு முதல் தாக்குதலை மிகவும் தீவிரமாக்கியது துருக்கி, பல சிரிய ராணுவ நிலைகள், ஆயுத கிடங்குகள், டாங்கிகள், ஆர்டிலரி நிலைகள், வான்பாதுகாப்பு ஏவுகணைகள் ,ராணுவ வீரர்கள் தங்குமிடங்கள் என சுமார் 200-கும் மேற்பட்ட நிலைகள் நேற்று மாலை முதல் தாக்குதலுக்கு உள்ளாகின,

இந்த தாக்குதலுக்கு ஆளில்லா தாக்கும் விமானங்கள் மற்றும் TRG 300  என்னும் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டது. இன்று அதிகாலை வரையும் தாக்குதல்கள் நடைபெற்றது, தற்போதும் தாக்குதல்கள் நடப்பதாக சிரிய மற்றும் துருக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

ஐட்லிப் நகரை தனி ஆளாக காப்பதாகவும், புலம் பெயரும் சிரிய மக்களை ஐரோப்பாவுக்குள் செல்ல விடாமல் ஒப்பந்தத்தை இதுவரை காப்பதாகவும் ஐநா வில் நேற்று தெரிவித்தது துருக்கி,

நாட்டோ உறுப்பினராக உள்ள துருக்கிக்கு உடனடியாக உதவ வேண்டும் என்று துருக்கி சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது கிரீஸ் இதை எதிர்த்தபோதும் மற்ற அனைத்து நாடுகளும் துருக்கிக்கு உதவ ஒப்புக்கொண்டன.

அதே நேரம் துருக்கிக்கு அவசரகால உதவியாக ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது, கூடவே உளவு தகவல்களையும் பகிர்ந்து வருகிறது.

ஐட்லிப் நகரை தாக்கும் முயற்சியை கைவிடாவிட்டால் ரஷ்யா மீதும் துருக்கி தாக்குதல் செய்ய தயங்காது என்று துருக்கிய கேபினட் அமைச்சர் ஒருவரும் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.