புதிய அப்பாச்சி ஹெலிகாப்டர்களுடன் மேற்கு எல்லையில் வலுவுறும் ராணுவத்தின் ரேப்பிட் படை

இந்திய விமானப்படை நவீன அப்பாச்சி தாக்கும் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய பதான்கோட் விமான தளத்தில் முறையாக இன்று படையில் இணைக்கிறது, கார்கில் போரில் முறையான தாக்கும் ஹெலிகாப்டர்களோ ராணுவம் மற்றும் விமானப்படையிடம் போதிய புரிதல் இல்லாத காரணத்தாலும் இராணுவமே முன்னின்று போரை முன்னெடுத்தது, எப்போதும் போலவே விமானப்படை பிரகாசிக்காமல் போனது.

போர் என்று வந்தாலே தீரத்துடன் எந்த எல்லைக்கும் போய் சண்டை போடும் ராணுவத்துக்கு, விமானப்படையின் உதவி ஒரு போதும் கிடைப்பது இல்லை, முக்கியமாக விமானப்படையிடம் ஒழுங்கான திட்டமிடல் இல்லாததும், விமானப்படையின் ஒருவித அகங்காரமுமே இதற்கு முக்கிய காரணம். புதிய தாக்கும் ஹெலிகாப்டர்கள் விமானப்படையிடம் இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை ராணுவத்துக்கு வழங்க வேண்டும் என்பதே பலரின் கருத்து.

மேற்கு எல்லையை காத்து வரும் ராணுவத்திடம் இரண்டு ரேப்பிட் படை பிரிவு உள்ளது, மற்ற படைகளை போல அல்லாது இந்த படைகள் பாகிஸ்தானுக்குள் மிக விரைவில் ஊடுருவி பாகிஸ்தானின் இடங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்படி வடிவமைக்கப்பட்டது, இந்த யுக்தியை வடிவமைத்து கொடுத்தது ராணுவத்தின் முன்னாள் தளபதி சுந்தர்ஜி. அவரின் கருத்துப்படி அடுத்த இந்திய பாகிஸ்தான் போர் கடைசி போராக இருக்க வேண்டும், ராணுவம் அதிரடியாக நுழைந்து பாகிஸ்தானின் பகுதிகளை கைப்பற்ற வேண்டும், மற்ற நாடுகளுடன் பேசி போரை முடிவுக்கு கொண்டு வருமுன், கடும் சேதத்தை பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டும் என்பதே சுந்தர்ஜியின் திட்டம், அதன் அடிப்படையில் தான் இந்த ரேப்பிட் உருவாக்கப்பட்டது,

ஆனால் கார்கில் போரை காஷ்மீரில் மட்டும் தான் நடத்த வேண்டும் என்று அரசு தோகை விரித்ததால் மேற்கு எல்லையில் இந்த படைப்பிரிவு போரின் போது எதுவும் செய்யவில்லை,

தொழில்நுட்ப முன்னேற்றத்தால் தாக்கும் யுக்திகளும் மாறிவிட்டது, ராணுவமும் அதற்கேற்ப முன்னேற வேண்டியுள்ளது, தற்போது ராணுவம் அடுத்த கட்ட மாறுதலான ஒருங்கிணைக்கப்பட்ட படைக்குழு (IBG-Integrated Battle Group ) என்று புதிய தாக்கும் யுக்தியை புகுத்தி வருகிறது, ஆனாலும் இது முழு செயல்பாட்டுக்கு வர இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம், அதே நேரம் விமானப்படையோ எவ்வித அசைவுமின்றி புது விமானங்கள் வாங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டி வருகிறது.

ராணுவத்தின் ரேப்பிட் படை பிரிவு தான் இந்திய ராணுவத்தில் தாக்கும் திறனில் அதிக சக்தியுள்ள பிரிவு, ஒரு ரேப்பிட் படைப்பிரிவில்

1. இரண்டு தாக்கும் தரைப்படை பிரிகேட் ( 2 Infantry Brigade )
2. ஒரு ஆர்மர்ட் பிரிகேட் ( 1 Armoured Brigade )

ஒரு தரைப்படை பிரிகேடில், சுமார் 4000 முதல் 5000 வீரர்கள் இருப்பார்கள், இவர்களிடம் துப்பாக்கி தவிர்த்து, டாங்கிகளை தாக்கும் ஏவுகணைகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், உளவு பார்க்க சிறப்பு பிரிவு, எதிரிகளின் தொலைத்தொடர்பை ஒட்டுக்கேட்கும் பிரிவு, எதிரி நிலைகளை குறித்து தகவல் சொல்லும் அமைப்பு என்று மிகுந்த பலமுள்ள பிரிவுகள் இருக்கும்.

இந்த வீரர்களுக்கு உதவியாக ஒரு ஆர்மர்ட் பிரிகேட் இருக்கும், பொதுவாக இதில் இரண்டு டாங்கி ரெஜிமென்ட் மற்றும் ஒரு BMP ரெஜிமென்ட் உள்ளது என்று சொன்னாலும், இவர்களின் கட்டுப்பாட்டில் தான் பினாக்கா ராக்கெட் வீசும் அமைப்பு, K9 Vajra ஆர்டில்லரி போன்றவை உள்ளது,

மிக வேகமாக முன்னேறி செல்லும் தரைப்படைக்கு பின்னால் இருந்து ராக்கெட் வீசி வழி கொடுக்கவும், டாங்கிகள் மூலம் முன்னால் சென்று பாதை ஏற்படுத்தவும் இந்த ஆர்மர்ட் பிரிகேட் உதவி செய்யும்.

தற்போதைய நிலையில் இந்த படைப்பிரிவுக்கு உதவியாக அம்பாலா விமானதளத்திலிருந்து ஜாகுவார் போர் விமான படையும், பதான்கோட் விமான தளத்திலிருந்து Mi 35 தாக்கும் ஹெலிகாப்டர்களும் ஒருங்கிணைக்கப்பட்டது, ஆனால் இதன் கட்டுப்பாட்டு அதிகாரி விமானப்படை அதிகாரியா இல்லை ராணுவ அதிகாரியா என்று தெளிவான தகவல்கள் இல்லை, ராணுவ அதிகாரி இதற்கு தலைமை தாங்கினால் மட்டுமே இதன் செயல்பாடு திருப்திகரமாக இருக்கும். இல்லையெனில் பயனற்று தான் போகும்.

தற்போது மேற்கூறிய விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மாற்றப்பட்டு, அதி நவீன அப்பாச்சி மற்றும் ரபேல் விமானங்கள் இணைக்கப்படவுள்ளன.

முன்னேறி செல்லும் ரேப்பிட் படைக்கு உதவியாக இந்த அப்பாச்சி மற்றும் ரபேல் விமானங்கள் துணையாக சென்றால், தரைப்படை வீரர்கள் சிறிய இடையூறுகளை மட்டுமே சந்தித்து, பாகிஸ்தானின் பாதுகாப்பு வளையத்தை தகர்த்து தங்களது இலக்குகளை அடைவார்கள், எப்போதும் போல விமானப்படை கோட்டை விட்டால், ராணுவம் கடும் இடர்களை சந்தித்தே இலக்கை அடையும்.

மேலும் இந்த ரேப்பிட் படையிடம் சில ஆயுதங்கள் மட்டுமே நவீனமயமானவை, அவர்களிடம் நவீன டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளோ, வான் பாதுகாப்பு ஏவுகணைகளோ இல்லை, அவற்றை மாற்றி நவீன ஸ்பைக், பிகோ, மற்றும் வான்பாதுகாப்பு ஏவுகணைகள் கொடுக்கும் பட்சத்தில் இந்த அதிரடி ரேப்பிட் பிரிவு எதிர்த்து வரும் எதையும் துவம்சம் பண்ணும் என்பதில் ஐயமில்லை.

புதிய ஹெலிகாப்டரை படையில் இணைப்பதால் மட்டும் படை பலம் பெறாது, அதை பயன்படுத்தும் யுக்தியை விமானப்படை ராணுவம் இணைந்து செயல்படுத்தினால் தான் அதன் மொத்த திறனும் வெளிப்படும், இல்லை இன்னும் விமானப்படை நான் தான் பெரியவன் என்ற அகந்தையோடு இருந்தால் அப்பாச்சி ஹெலிகாப்டர்களும் தொடர்ந்து கண்காட்சியில் மட்டும் தான் இடம்பெறும், போரில் அல்ல.