புதிய சேடக் ஹெலிகாப்டர்களை பெருமையுடன் வழங்கிய HAL நிறுவனம், வாங்கிய கப்பல் படை என்ன முட்டாளா ?

இந்த கேள்விக்கு ஆம் என்று சொல்லவதா இல்லை என்று சொல்வதா என கப்பல்படைக்கே குழப்பம் வந்திருக்கலாம் காரணம், கப்பல்களில் ஹெலிகாப்டர் இல்லாததால் பழைய குப்பைக்கு போக வேண்டிய ஹெலிகாப்டரையாவது வாங்கி சிறிது நாட்கள் பயன்படுத்தலாமே என்ற கப்பல் படையின் சிந்தனையாக கூட இருக்கலாம், அதை விட சிறப்பம்சம் 1960-களில் பிரான்ஸ் தயாரித்த அலூட்டி ஹெலிகாப்டரை 2019-இல் தயாரித்து அதை நவீன தொழில்நுட்பம் என்று விளம்பரம் செய்தது தான், 2000-லிருந்து 2019 வரை 17 அலூட்டி ( சேடக் ) ஹெலிகாப்டர்கள் விபத்தை சந்தித்துள்ளன, இறந்த வீரரகளின் எண்ணிக்கை சுமார் 30-க்கு மேல் இருக்கலாம்.

இதிலும் தற்பெருமையாக HAL கூறிய விஷயம் டெலிவரி கொடுக்க சொன்ன நாட்களுக்கு முன்னரே ஹெலிகாப்டரை கப்பல்படைக்கு வழங்கியது தான், 2017-இல் HAL நிறுவனத்துடன் இந்திய கப்பல் படை சுமார் 58 மில்லியன் டாலர் தொகைக்கு 8 அலூட்டி ஹெலிகாப்டர்களை வாங்க ஒப்பந்தம் செய்தது. ஒப்பந்தத்தின் படி முதல் இரண்டு ஹெலிகாப்டர்கள் 2019 ஆகஸ்ட் மாதத்திற்குள்ளும் அடுத்த ஆறு ஹெலிகாப்டர்கள் 2020 ஆகஸ்டுக்குள்ளும் வழங்கப்படும். ஆனால் ஒப்பந்தத்தில் சொல்லப்பட்ட நாளுக்கு முன்னரே அதாவது இரண்டு நாளுக்கு முன்னரே இதில் ஒரு ஹெலிகாப்டரை வழங்கியதால் தான் மாபெரும் விழா எடுத்து அந்த 1960 மாடல் அலூட்டி ஹெலிகாப்டரை கப்பல் படைக்கு வழங்கியது.

1960 களில் வெளிவந்த ஹெலிகாப்டருக்கும் 2010-க்கு பிறகு வெளிவந்த ஹெலிகாப்டர்களுக்கும் மிகப்பெரிய ஒரு தொழில்நுட்ப இடைவெளி உள்ளது, இதை தொடக்கப்பள்ளி செல்லும் குழந்தைகள் கூட நன்கு அறியும், ஆனால் HAL நிறுவனமும் கப்பல்படையும் அறிந்திருக்கவில்லை. தற்போது வாங்கப்பட்டுள்ள இந்த ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கினால் இதை வாங்க அறிவுறுத்திய கப்பல் படை அதிகாரிகள் சிறை செல்வார்களா, விபத்துக்கு காரணம் அவர்கள் தான் என்று ஒத்துக்கொள்வார்களா ?

யாருக்கு இங்கு அதிகாரம் அதிகம், ஒரு கப்பல் படையின் அட்மிரலுக்கா இல்லை ஒரு IAS அதிகாரிக்கா, ஆம் படை தளபதிகளை விட அதிகாரமிக்கவர் தான் பாதுகாப்புத்துறை செயலர், இவர்கள் வெறும் IAS அதிகாரிகளே,  ” கப்பற்படையை அரசு ஒரு டாக்சி கம்பனி போல நடத்துகிறது, பேசாமல் பாதுகாப்புத்துறை செயலர் நேரடியாகவே கப்பல்படைக்கு தலைமை தாங்கலாம் “. கூறியவர் முன்னாள் கப்பற்படை தளபதி விஷ்ணு பகவத்.

கடந்த 19 ஆண்டுகளில் 17 விபத்தை சந்தித்துள்ள அலூட்டி ஹெலிகாப்டர்களை மீண்டும் வாங்க காரணம் என்ன, பாதுகாப்பு துறை செயலர்களோ அல்லது மற்ற அரசு அதிகாரிகளோ இந்த ஹெலிகாப்டர்களை பயன்படுத்துவார்களா,’

நவீன பல்திறன் ஹெலிகாப்டர் EC135

 

அலூட்டி ஹெலிக்கப்பட்டார்கள் ஏன் மோசமானவை என்றால், அதை விட நவீன நம்பகத்தன்மை மிக்க செயல்திறன் மிக்க ஹெலிகாப்டர்கள் வந்ததே காரணம், 1960-இல் அதை வைத்து தான் ஓட்டி ஆக வேண்டும், ஆனால் அதை விட நவீன ஹெலிகாப்டர் வந்த பின்னும் அதை தான் ஓட்ட வேண்டுமா.

 

கப்பற்படையிடம் வெறும் எட்டு ஹெலிகாப்டர்கள் தான் பறக்க தகுதியான நவீன அல்லது ஓரளவு சொல்லும்படியான ஹெலிகாப்டர், இது HAL தயாரித்த துருவ் ஹெலிகாப்டர் தான், மற்றபடி உள்ள Sea King ஹெலிகாப்டர்கள், அலூட்டி ஹெலிகாப்டர்கள் அனைத்துமே 1970-களில் உள்ள மாடல் தான், இது அனைத்தையும் நீக்கி புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, 2001-லிருந்து இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த பின்னும் இதுவரை ஒன்றை கூட மாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை,

ASW ஹெலிகாப்டர்கள்

கப்பல்படையில் உள்ள பழைய Sea King  ஹெலிகாப்டர்களை நீக்கி புதிய ஹெலிகாப்டர் வாங்க பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டது, அமெரிக்காவின் S 70 ஹெலிகாப்டர் தேர்வு செய்யப்பட்டு இதுவரை கையெழுத்தாகவில்லை.

பல்திறன் ஹெலிகாப்டர்கள் (NMRH)

கப்பல் படையில் உள்ள பழைய வெஸ்ட்லாண்ட் Sea King  ஹெலிகாப்டர்களை மாற்றி புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு பிரான்ஸ் நாட்டின் ஏர்பஸ் நிறுவனத்தின் கராக்கல் தேர்வு செய்யப்பட்டது, ஒப்பந்தம் குறித்து இதுவரை ஒரு பேச்சுமே இல்லை.

சாதாரண வேலைக்கான ஹெலிகாப்டர்கள் (NUH)

பழைய அலூட்டி ஹெலிகாப்டர்களை நீக்கி புதிய ஹெலிகாப்டர்கள் வாங்க 2019 பிப்ரவரியில் டெண்டர் விடப்பட்டது, இது ஒப்பந்தமாக மாற எத்தனை வருடம் ஆகும் என்று யாருக்கு தெரியும்.