இந்திய விமானப்படைக்கு பயிற்சி விமானங்களை வழங்கும் பிளாட்டஸ் நிறுவனத்தை தடை செய்தது பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய விமானப்படையின் ஒவ்வொரு விமானியும் மூன்று வித பயிற்சி விமானங்களில் முதலில் பயிற்சி எடுத்துவிட்டு தான் முன்னணி போர் விமானங்களை இயக்க முடியும். அடிப்படை பயிற்சி சுவீடன் நாட்டு தயாரிப்பில் உருவான பிளாட்டஸ் விமானத்திலும், இடைமட்ட பயிற்சிக்கு HAL தயாரித்த கிரண் பயிற்சி விமானத்திலும், இறுதியாக பிரிட்டன் நாட்டில் தயாரான ஹாக் நவீன பயிற்சி விமானத்திலும், இந்திய போர் விமானிகள் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

சுவீடனின் இந்த பிளாட்டஸ் விமானம் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு இந்திய விமானப்படையில் 2012-இல் இணைக்கப்பட்டது, மாபெரும் விமானப்படை என்று பல்வேறு நபர்களால் கூறப்படும் விமானப்படைக்கு அடிப்படை பயிற்சி விமானங்களை வாங்க பெரும் பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது, அடிப்படை பயிற்சி விமானங்களை HAL தயாரித்து தருகிறோம் என்று சொல்லி சொல்லியே காலம் தாழ்த்தி வந்தது, இதனால் படிப்பு முடித்து வரும் விமானப்படை வீரர்களுக்கு ஓட்ட பயிற்சி விமானம் கூட இல்லாத நிலை ஏற்பட்டது, விமானப்படை அதுவரை பயன்படுத்தி வந்த HAL தீபக் விமானம் 17 விபத்துகளை சந்தித்து 19 இளம் விமானப்படை வீரர்களின் உயிர்களை காவு வாங்கியுள்ளது .

19 இளம் விமானிகளை கொன்ற HAL நிறுவனத்தின் தீபக் பயிற்சி விமானம்

அடிப்படை பயிற்சி விமானம் இல்லாததை சுட்டிக்காட்டிய முன்னாள் விமானப்படை அதிகாரிகள், அரசுக்கும் விமானப்படைக்கும் கொடுத்த அழுத்தத்தை அடுத்து, பல்வேறுகட்ட சோதனைகளுக்கு பிறகு, சுவீடனின் பிளாட்டஸ் விமானம் தேர்வு செய்யப்பட்டது. இந்திய விமானப்படைக்கு மொத்தம் 181 அடிப்படை பயிற்சி விமானம் தேவை இருந்தது, 2012-இல் சுவீடனின் பிளாட்டஸ் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி 3200 கோடி ரூபாய் செலவில் 75 விமானங்கள் வாங்கப்பட்டது, அதோடு அதே விலையில் கூடுதலாக 38 விமானங்கள் விற்பனை செய்யலாம் என்றும் பிளாட்டஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டது.

மேலதிகமாக விமானத்தின் பராமரிப்பு மற்றும் உதிரிபாகங்கள் சப்ளை ஆகியவற்றுக்கும் வாரண்ட்டி-க்கும் சேர்த்தும் ஒப்பந்தம் கையெழுத்து ஆனது, நான்கு வருட பராமரிப்பு ஒப்பந்தம் 2016 டிசம்பரில் நிறைவு பெற்றது, அடுத்த நான்கு அல்லது ஐந்து வருட பராமரிப்பு ஒப்பந்தத்தை விலையை காரணம் காட்டி நிராகரித்தது பாதுகாப்புத்துறை அமைச்சகம், அதோடு மேற்கொண்டு 38 விமானங்கள் வாங்கும் திட்டத்தையும் ரத்து செய்தது, இதற்கு 2017-இல் மத்திய அரசு கூறிய காரணங்கள்,

1. மேற்கொண்டு அடிப்படை பயிற்சி விமானங்கள் HAL நிறுவனத்திடமிருந்து வாங்கப்படும் ( HTT 40 என்னும் அடிப்படை பயிற்சி விமானத்தை 2012-லிருந்தே HAL உருவாக்கி வருகிறது வருகிறது, ஆனால் இதுவரை முக்கிய சோதனைகளை அது தாண்டவில்லை, விமானப்படை கல்லூரியிலிருந்து வெளியில் வரும் இளம் வீரர்களை வைத்து உயிர் கொல்லி சோதனை நடத்தவே HAL இந்த HTT 40 விமானத்தை தயாரித்து வருகிறது )

2. பிளாட்டஸ் நிறுவனம் பராமரிப்பு செலவுக்காக அதிக அளவு தொகையை கேட்கிறது, அதனால் உதிரிபாகங்களை விமானப்படை உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்தே வாங்கிக்கொள்ளலாம்.

என்று பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது, அதிக இந்தியர்களால் விரும்பப்படும் மனோகர் பாரிக்கர் தான் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர், அவர் தான் இந்த முடிவுகளை எடுத்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்திய விமானப்படை தனது சார்பிலும் கருத்துகளை முன்வைத்தது,

1. HAL தயாரித்து வரும் HTT 40 பயிற்சி விமானம் பிளாட்டஸ் விமானத்தை விட அதிக விலை,
2. அதோடு HAL தயாரிக்கும் விமானம் இயக்குவதற்கு கடினம் அதோடு எடையும் அதிகம் என்றது.

இந்த பிரச்சனைகள் ஒரு புறம் இருக்க, 2012-இல் பிளாட்டஸ் நிறுவனம் ஒப்பந்தத்தை கைப்பற்ற இடைத்தரகர்களை சுமார் 60 கோடி ரூபாய் வழங்கியது என்று CBI விசாரணையில் தெரியவந்துள்ளது, இந்த பிரச்னை தற்போது விசுவரூபம் எடுத்து, மேற்கொண்டு அடுத்த ஒரு வருடம் வரை அல்லது பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து மறு உத்தரவு வரும் வரை பிளாட்டஸ் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று பாதுகாப்பு அமைச்சகம் விமானப்படைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பிளாட்டஸ் விமானத்துக்கு உதிரி பாகங்கள், மற்ற தொழில்நுட்ப உதவிகள் ஆகியவற்றுக்கு வேறு வழிகளை தேட வேண்டியுள்ளது, இதனால் குறைந்த தரமுள்ள உதிரி பாகங்கள் அதோடு திறனற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் தான் இனி பிளாட்டஸ் விமானத்தை இயக்க முடியும். அதோடு, இதற்கு அதிக செலவும் ஆகும், இதனால் அடிப்படை பயிற்சி விமானங்கள் இயக்குவதற்கும் பயிற்சி மேற்கொள்ளவும் பெரும் பிரச்னை உண்டாகியுள்ளது.

சுமார் 600-க்கும் மேற்பட்ட விமானங்களை கொண்ட இந்திய விமானப்படையிடம் வெறும் 78 பயிற்சி விமானங்கள் தான் உள்ளது என்பது கொஞ்சம் வேதனையாக தான் உள்ளது, இது தேவையை விட 60% குறைவு.