சுகோய் விமானங்கள், முதுகெலும்பா இல்லை முதுகுவலியா

இந்திய விமானப்படையின் அஸ்திவாரமாக இருப்பது, சுகோய் விமானங்கள், ஆனால் எத்தனை காலமாக இருந்துள்ளது, அது விமானப்படையில் செய்த மாற்றங்கள் என்ன என்று சற்றே கவனித்தால், அது விமானப்படைக்கு பெரும் முதுகு வலியாகவே இருந்துள்ளது. யூகங்களை வலிமையாக்கும் விதமாக விமானப்படை விமானிகளின் கருத்துக்களும் பிரதிபலிக்க, விமானப்படை எவ்வளவு ஆபத்தில் உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

1997-இல் முதல் ஒப்பந்தம் கையெழுத்தாகி 2002-இல் முதல் முறையாக படையில் சுகோய் இணைந்தது, அதி நவீன ராடார், ஏவுகணைகள், தாக்கும் தொலைவு என்று இந்திய விமானப்படையை ஒரு உயரத்துக்கு கொண்டு சென்றது இந்த சுகோய் விமானங்கள். சுகோய் விமானத்தின் திறனை பார்த்து அதிகமாக ஆர்டர் செய்தது கூடவே அதன் பகுதி பொருட்களை வாங்கி இந்தியாவில் கட்டவும் ஒப்பந்தம் இடப்பட்டது.

வாங்கிய மூன்று வருடங்களியிலேயே, விமானம் அதன் போக்கை காட்டியது, உதாரணமாக ரஷ்யா தயாரிப்புகள் அனைத்துமே வாங்கும் சில காலங்களுக்கு தான் சரியாக வேலை செய்யும், பிறகு சர்வீஸ் என்று வரும் போது மொத்த பட்ஜெட்டையும் காலி செய்து விடும்.

முதலில் கண்டறிந்த பிரச்னை எஞ்சின் மற்றும் அதன் முக்கிய அஸ்திவாரமான தொலை தூர தாக்கும் ஏவுகணை, 2005- லேயே இந்த பிரச்னை கண்டறியப்பட்டு ரஷ்யாவிடம் அறிக்கை அளிக்கப்பட்டது, ஏவுகணைகளில் பிரச்னை என்பதால் கூடுதல் ஏவுகணைகள் வாங்காமல் ஒப்பந்தங்களை ரத்து செய்தது, 2005 முதல் 2014 வரை சுகோய் விமானங்கள் பெயரளவில் தான் இருந்துள்ளது, மொத்த 220 சுகோய் விமானங்களில் வெறும் 90 விமானங்கள் தான் பறக்க தகுதியானது என்று தணிக்கை துறையும் விமானப்படையும் அறிக்கை வெளியிட்டது.

அமெரிக்கா பாகிஸ்தானுக்கு Blk 52 விமானங்களுடன் AMRAAM ஏவுகணைகளையும் விற்றது, 2010-இல் பாகிஸ்தான் விமானப்படையில் இணைந்த இந்த புதிய வரவு ஆயுதமும் விமானமும், இந்தியாவின் வான் ஆதிக்கத்தை பறித்துக்கொண்டது. அதாவது வான் சண்டையில் பாகிஸ்தானின் கை ஓங்கியது, வெறும் 70 F16 விமானத்தை வைத்திருந்தும், அதி நவீன தொலை தூர AMRAAM ஏவுகணையால் அதன் பலம் உயர்ந்தது.

விஷயத்தின் வீரியத்தை புரிந்து கொண்ட விமானப்படை வேறு வழியில்லாமல் ரஷ்யாவின் R77  ஏவுகணைகளுக்கு மாற்றாக சில நூறு R27 ஏவுகணைகளை உக்ரைன் நாட்டிடமிருந்து வாங்கியது, அதன் திறன் பற்றியோ பலம் பற்றியோ இதுவரை உறுதியான அறிக்கையோ தகவல்களோ இல்லை. ஆனாலும் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா விற்ற AMRAAM ஏவுகணைகளை விட திறன் குறைவு தான்.

உதாரணமாக இந்திய விமானப்படையின் சுகோய் விமானங்களால், பாகிஸ்தானிய விமானங்களை மிக தொலைவில் வரும்போதே கண்டறிய முடியும், அதாவது சுமார் 300 கிலோமீட்டருக்கு அப்பால், ஆனால் அதனால் 70 கிலோமீட்டருக்கு அருகில் இருக்கும் இலக்கை தான் தாக்க முடியும், காரணம் ஆயுதத்தின் தாக்கும் தூரம் வெறும் 70 கிலோமீட்டர் தான்.

அதே நேரம் பாகிஸ்தான் F 16  விமானத்தால் இந்திய விமானங்களை சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் வரும்போது தான் கண்டு பிடிக்க முடியும், அதே நேரம் 100 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்க முடியும், இதனால் சுகோய் விமானத்தின் கைகளுக்கு அருகில் வராமலே F 16 விமானத்தால் தாக்கி விட்டு திரும்பி செல்ல முடியும்.

நவீன போர் முறையும் இது தான், மத்திய கிழக்கை ஆட்டி படைக்கும் இஸ்ரேலிய விமானப்படையும் சரி, உலகையே ஆட்டிப்படைக்கும் அமெரிக்க விமானப்படையும் சரி, தொலை தூர தாக்கும் ஏவுகணை தான் அஸ்திவாரமே,

பாகிஸ்தானின் F16  கொள்முதல் இந்திய விமானப்படையின் சக்தியை கீழிறக்கியது என்றதும், இந்திய விமானப்படை சுகோய் விமானங்களை நவீனப்படுத்த முடிவெடுத்தது, சூப்பர் சுகோய் என்ற இந்த திட்டத்தின் மூலம் சுமார் 200 கோடி ருபாய் ஒரு விமானத்துக்கு செலவிட திட்டமிட்டது. கவனிக்கவும் புது விமானம் செய்ய வெறும் 350 கோடி ருபாய் தான், அதே நேரம் அதை நவீனப்படுத்த 200 கோடி ருபாய் வரை செலவிட விமானப்படை தயாரக இருந்தது,

இதன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் 2010-லேயே துவங்கியது, முக்கியமாக எஞ்சினை மாற்றம் செய்வது, புதிய ராடாரை சேர்ப்பது, தொலை தூர ஏவுகணை சேர்ப்பது மற்றும் அதிக சக்தியுள்ள ஜாமர்களை சேர்ப்பது.

ஆனால் இன்று வரை வெறும் காகிதத்திலேயே இருக்கும் இந்த நவீனப்படுத்தும் திட்டம் ஒரு சென்டிமீட்டர் கூட நகராதது வேதனையே.

கூடவே, இப்போதும் புதிதாக நாசிக் தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் சுகோய் விமானங்கள் அதே 2000-இல் உள்ள தொழில்நுட்பம், கடந்த 20 வருடங்களில் தொழில்நுட்ப வளர்ச்சி அசுர வேகத்தில் இருக்கிறது, ஆனால் படைகள் மட்டுமே இன்றும் பழைய தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டிய கட்டாயம்.

மிக எளிதாக, இந்திய விமானப்படை இன்றும் நோக்கியா 6600 போனை வைத்துள்ளது, நமது எதிரிகள் ஐபோன் 7 வைத்துள்ளனர், இது தான் எதார்த்தமான நிலை.