கையை விரித்த அரசு, ராணுவ செலவினத்திலிருந்து ஸ்பைக் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளை வாங்க முடிவு

டாங்கிகளை தாக்கி அழிக்கும் நான்காம் தலைமுறை ஏவுகணைகளை வாங்க 2006-லிருந்தே ராணுவம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் அதற்கு முட்டுக்கட்டையாக அதிகாரிகள், அரசு, ரஷ்ய அழுத்தம் மற்றும் DRDO இருந்து வருகிறது, அதற்கும் ஒரு படி மேலாக இந்த டாங்கி எதிர்ப்பு ஏவுகணை வாங்கும் திட்டத்தையே ரத்து செய்தார் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மாமேதை மனோகர் பாரிக்கர். அதன் பிறகு அதில் முன்னேற்றம் எதுவும் இல்லாததால், ராணுவம் தனது சொந்த செலவினத்திலிருந்து சுமார் 240 ஸ்பைக் ஏவுகணைகளை நேரடியாக இஸ்ரேலிடமிருந்து கொள்முதல் செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கு அரசோ வேறு அதிகாரிகளின் அனுமதியோ தேவையில்லை.

கடந்த நவம்பரில் ராணுவ கட்டளை அதிகாரிகள் சொந்தமாக ஆயுதங்கள் வாங்க செலவிடும் தொகையை 100 கோடியிலிருந்து 500 கோடியாக அதிகரித்து அரசு ஆணை பிறப்பித்தது, அதனால் ராணுவத்தின் குறிப்பிட்ட சில மேலதிகாரிகள் சுமார் 500 கோடி வரை ஆயுதங்களை அரசு மற்றும் அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல் வாங்கலாம், அந்த தொகையை ஸ்பைக் ஏவுகணை வாங்க செலவிடுகிறது ராணுவம் .

தற்போது இந்திய ராணுவத்தில் பிரான்ஸ் மற்றும் ரஷ்ய தயாரிப்பு டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன, இவை அனைத்துமே இரண்டாம் மூன்றாம் தலைமுறை டாங்கி அழிக்கும் ஏவுகணைகள், இந்த ஏவுகணைகளை செலுத்தும் போது செலுத்தும் வீரர் ஏவுகணையை இறுதி வரை வழி நடத்த வேண்டும், கூடவே இதன் தாக்கும் தொலைவும் குறைவு, டாங்கியை கண்ணால் பார்த்தல் மட்டுமே வீழ்த்த முடியும்.இந்திய ராணுவத்தில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட இது போன்ற ஏவுகணைகள் தற்போது பயன்பாட்டில் உள்ளது.

ஆனால் நான்காம் தலைமுறை டாங்கி அழிக்கும் ஏவுகணைகள் தானாகவே இலக்குகளை தேர்ந்தெடுத்து தாக்கி அழிக்கும், இதன் தாக்கும் தொலைவும் அதிகம், வீரர்கள் மறைந்திருந்து எதிரி டாங்கியை தாக்கி அழிக்க முடியும். இதனால் தாக்கும் வீரர் பாதுகாப்பாக இருப்பார்.

இந்த வகை ஏவுகணைகளை இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தயாரித்து வருகிறது, இரண்டுமே இந்தியாவுக்கு இந்த ஏவுகணைகளை தர சம்மதித்தது. ஆனால் இதன் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு தர முடியாது என்று அமெரிக்கா மறுத்ததால், இஸ்ரேலின் ஸ்பைக் ஏவுகணை தான் ஒரே தீர்வாக இருந்தது.

முதல்கட்டமாக சுமார் 8000 ஏவுகணைகளை வாங்க ராணுவம் திட்டமிட்டிருந்தது, அதன் பிறகு தொழில்நுட்ப உதவி மூலம் மேலதிக ஏவுகணைகளை இந்தியாவின் அரசு நிறுவனமான BDL-இல் தயாரிக்கவும் திட்டமிட்டிருந்தது, இதன்மூலம் படிப்படியாக ராணுவத்தின் அனைத்து பழைய ஏவுகணைகளையும் மாற்றி நவீன ஸ்பைக் ஏவுகணையை சேர்க்க ராணுவம் திட்டமிட்டிருந்தது.

இந்த எண்ணிக்கை 50,000-க்கு மேல் போகும், எனவே இது ஒரு மாபெரும் ஆர்டர். இதன் வீரியத்தை அறிந்த அதிகாரிகளும் அரசும் உடனடியாக இதில் புகுந்து விளையாட துவங்கினர், 2006-லிலிருந்து துவங்கிய விளையாட்டு இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

முதல் முட்டுக்கட்டையாக ரஷ்யா, ஒருவேளை இஸ்ரேலின் ஸ்பைக் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டால், ரஷ்யாவிடமிருந்து மேலதிக ஏவுகணை கொள்முதல் நடக்காது, அதனால் ரஷ்யாவின் பண வரவில் தட்டுப்பாடு ஏற்படும்.

இரண்டாவது DRDO- நாக் என்ற பெயரில் வெற்றிகரமாக ஏவுகணை செய்த போதும் அதன் எடை காரணாமாக அவற்றை தோளில் ஏந்தி செல்ல முடியாது, வாகனங்களிலும் டாங்கிகளிலும் தான் கொண்டு செல்ல முடியும், ஆனாலும் எங்களால் எடை குறைத்து செய்து தரமுடியும் என்று என்னென்னெவோ செய்து உருண்டு கொண்டிருக்கிறது DRDO, இருந்தாலும் அவர்களால் ஒழுங்காக இதுவரை ஒன்றயும் சோதனை செய்ய முடியவில்லை, இன்னும் அவர்கள் முயற்சி செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.

மூன்றாவது அதிகாரிகள் மற்றும் அரசு, இதிலும் ரஷ்ய மற்றும் DRDO உள்ளீடு இருந்ததால் சோதனை செய்யும் போது கடுமையான நடக்கவே இயலாத இலக்குகளை நிர்ணயித்து ஸ்பைக் ஏவுகணைகளை வீச செய்தனர், வேண்டுமென்றே இது போன்ற இலக்குகளை கொடுத்து ஸ்பைக் ஏவுகணை நல்லதல்ல என்று அரசுக்கு அறிக்கை அளித்தனர்.

ராணுவத்தின் தொடர் அழுத்தம் காரணமாக இந்த விஷயம் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் காதுக்கு சென்றது, விஷயம் அறிந்து அவர் விசாரணைக்கு உத்தரவிட்டார், விசாரணைக்குழுவில் ராணுவ அதிகாரிகளுடன் DRDO அதிகாரிகளும் பங்கேற்றனர், விசாரணை முடிவில் DRDO அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்டது, DRDO கொடுத்த விளக்கம் என்னவென்றால், DRDO-வால் அது போன்ற ஏவுகணைகளை தயாரித்து கொடுக்க முடியும் அதனால் ஸ்பைக் ஏவுகணைகளை வாங்க வேண்டாம், இதை பாதுகாப்பு அமைச்சர் ஏற்றுக்கொண்டு ஸ்பைக் கொள்முதல் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

தற்போது வரை DRDO-வால் உருப்படியாக எதுவும் செய்து கொடுக்க முடியாத காரணத்தால், வேறு வழியில்லாமல் இருக்கும் பணத்தில் வெறும் 12 ஏவுகணை வீசும் அமைப்புகளும் 240 ஏவுகணைகளையும் நேரடியாக இஸ்ரேலிடமிருந்து வாங்க ராணுவம் முடிவு செய்து, ஒப்பந்தம் செய்யவுள்ளது.

சிவந்த முகத்துடனே, தற்போது அனைத்து அதிகாரிகளும் இருப்பார்கள், தடைகளை தகர்த்த அந்த ராணுவ அதிகாரிக்கு நன்றிகள். அரசு இது போன்ற வெளிநாட்டு அழுத்தம், அதிகாரிகளின் அலட்சிய போக்குகளுக்கு செவி சாய்க்காமல், ராணுவத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

அடுத்த கட்டமான ராணுவத்துக்கு விமான எதிர்ப்பு ஏவுகணை பிரச்னையும் இது போல தான் செல்கிறது, அதற்கும் என்று விடிவு வருமோ