செயற்கைக்கோளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை, உறுதி செய்த அமெரிக்கா

27-03-2019 அன்று காலை சுமார் 10.30 மணி அளவில் அமெரிக்காவின் விண்வெளி கண்காணிக்கும் அமைப்பு விண்வெளியில் ஒரு செயற்கைக்கோளை ஏவுகணை ஒன்று மோதுவதை கண்டறிந்தனர், இந்தியா அமெரிக்காவுக்கு ஏற்கனவே அறிவித்ததை போன்று இது இந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை தான் என்றும் உறுதி செய்தனர், இந்திய பெருங்கடலில் உள்ள டியாகோ கார்சியா விமான தளத்திலிருந்து உளவு விமானமான RC 135 கோப்ரா பால் விமானத்தை அனுப்பி இந்த சோதனையை மிக உண்ணிப்பாக கவனித்தது அமெரிக்கா.

அடுத்த சில நிமிடங்களிலேயே இந்திய பிரதமர், இந்தியா வெற்றிகரமாக புவி வட்ட பாதையில் இருந்த இந்திய செயற்கைகோள் ஒன்றை நாம் ஏவுகணை மூலம் தாக்கி அழித்து சோதனை செய்ததாக நாட்டு மக்களுக்கு அறிவித்தார்,

அமெரிக்கா ரஷ்யா சீனாவுக்கு அடுத்து இந்தியா தான் இது போன்ற சோதனையை செய்துள்ளது என்பதும் விண்வெளி பாதுகாப்பில் இந்தியாவின் உறுதியை இது நிலை நாட்டுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அணு ஆயுத சோதனை போன்று செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனையும் மிக முக்கியத்துவம் வாய்ந்ததே, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் விண்வெளி சார்ந்த பேச்சு வார்த்தையின் போது இரு தரப்பும் பரஸ்பரம் செயற்கைகோள் எதிர்க்கும் ஏவுகணைகளை செய்யக்கூடாது என்று முடிவெடுத்தனர், ஆனாலும் இருவரும் ஒப்பந்தங்களை மீறி செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணைகளை சோதனை செய்தனர், பின்பு மற்ற நாடுகள் யாரும் இதை செய்யக்கூடாது என்று முடிவுக்கு வந்தனர், ஆனாலும் இதுகுறித்த வரைவு இதுவரை முழுமையாக தாயரிக்கப்படவில்லை,

எப்படியெனில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஐந்து சூப்பர் பவர் நாடுகளை தவிர வேறு யாராவது அணு ஆயுத சோதனை நடத்தினால் அவர்கள் மீது பொருளாதாரத் தடை, மற்ற நாடுகள் உறவு வைத்துக்கொள்ளக்கூடாது என்பது போல, செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை வைத்துள்ள அமெரிக்கா ரஷ்யா தவிர வேறு யாரும் இதை செய்யக்கூடாது என்பதே, ஆனால் இதை சரியாக இதுவரை வரையறுக்கவில்லை அமெரிக்காவும் ரஷ்யாவும்,

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2007-ல் சீனா ரகசியமாக செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை ஒன்றை சோதனை செய்தது, பிறகு அடுத்தடுத்த வருடங்களில் தொடர்ச்சியாக ஒன்றிரெண்டு சோதனைகளை செய்து அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு ஈடான இடத்தை அடைந்தது. சீனாவின் சோதனைக்கு பிறகு இந்த தடைக்கான வரைவை துரிதப்படுத்தின அமெரிக்காவும் ரஷ்யாவும்,

2012 வாக்கில் இதற்கான தடை வரைவு இறுதி நிலையில் இருந்தது, இருந்தாலும் ஏனோ பல காரணங்களுக்காக அதை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவால் நிலைப்படுத்த இயலவில்லை,

2012-இல் DRDO-வும் அக்னி ஏவுகணையை கொஞ்சம் மாறுதல்கள் செய்து செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணையாக பயன்படுத்த முடியும் என்றனர், கூடவே இந்தியாவின் பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இதை செய்ய முடியும் என்றனர்.

ஆனால் அதற்கான அரசு அனுமதியோ, பண மற்றும் பொருள் உதவியோ DRDO-வுக்கு கிடைக்கவில்லை, இந்தியாவின் பல ராணுவ பார்வையாளர்கள், சர்வதேச தடை வருமுன்னர் இந்தியா சீக்கிரம் இதை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் கடந்த 7 ஆண்டுகளாக அது குறித்த தகவல்கள் இல்லாததால் இந்தியா அத்திட்டத்தை கைவிட்டிருக்கலாம் என்று பலர் எண்ணினர். ஆனால் அனைத்தையும் உடைத்து இந்தியா சாதித்து காட்டியது.

இந்த சோதனைக்கு இந்தியா எந்தெந்த அமைப்புகளை பயன்படுத்தியது என்று கூறவில்லை, இருந்தாலும் ஒரு சில கிடைத்த தகவல்களை வைத்து நடந்த விஷயத்தை கணக்கிட்டு விடலாம்.

பூமியிலிருந்து சுமார் 2000 கிலோமீட்டர் உயரே பூமியை சுற்றி வரும் செயற்கைகோள்கள் LEO- லோ எர்த் ஆர்பிட் (low Earth Orbit) எனப்படும், இவை சுமார் 1000 கிலோமீட்டர் முதல் 2000 கிலோமீட்டர் உயரே அதிக வேகத்தில் பூமியை சுற்றி வரும், அதாவது ஒரு மணி நேரத்தில் 28,000 கிலோமீட்டர் வேகம், ஒரு நிமிடத்துக்கு சுமார் 450 கிலோமீட்டர் வேகம்,

இந்த குறிப்பிட்ட உயரத்தில் மட்டும் செயற்கைகோள்கள் மற்ற விண்வெளி குப்பைகள் என சுமார் 8500-க்கும் மேற்பட்ட சாதனங்கள் பூமியை சுமார் 28,000 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றி வருகின்றன, இதில் சில நூறு செயற்கைகோள்கள் இந்தியாவின் செயற்கைகோள்கள். அதில் குறிப்பிட்ட ஒன்றை தான் தேர்ந்தெடுத்து துல்லியமாக அடிக்க வேண்டும், ஒரு மைக்ரோ நொடி தவறு ஏற்பட்டாலும் வேறு நாட்டு செயற்கைகோள் வீழ்த்தப்படும், மாபெரும் பிரச்னை ஏற்படும், ஏவுகணையில் பிரச்னை இருந்தாலும் விளைவு மோசம் தான்.

கடந்த ஜனவரி மாதம் இஸ்ரோ அனுப்பிய 100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாக்கி அழிக்க DRDO முடிவு செய்து இஸ்ரோவை அணுகியது, இஸ்ரோ உதவியுடனேயே இந்த சோதனையை செய்துள்ளது DRDO.

ஏவுகணையின் படத்தை அரசு வெளியிட்டது, புதிய வடிவில் உள்ள இந்த ஏவுகணை நேரடியாக செயற்கைகோள் மீது மோதி செயற்கைக்கோளை அழித்தது , விண்ணில் ஏற்பட்ட இந்த மோதலை துல்லியமாக பதிவு செய்து அமெரிக்க அரசுக்கு அறிக்கையும் அளித்தது அமெரிக்க விமானப்படை.

சக்தி என்று பெயர் சூட்டப்பட்ட இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது, இனி விண்வெளி பாதுகாப்பு அமைப்பு குறித்த வரைவு எடுத்தால் இந்தியாவும் அதில் ஒரு முக்கிய பங்காற்றும் என்பதில் சந்தேகமேயில்லை.