விமானப்படையை சீரமைக்க யோசிக்குமா அரசும் விமானப்படையும்

பாகிஸ்தானின் சமீபத்திய எல்லை மீறிய தாக்குதல் பலமுள்ள விமானப்படையின் தாக்கும் சக்தி குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது, 250 சுகோய் போர் விமானங்களை வைத்துக்கொண்டு, பாகிஸ்தானின் விமானப்படையை தடுத்து நிறுத்த இயலவில்லை, 20 ஆண்டு பழைய விமானங்களுடன் தான் இன்னும் சண்டையிட வேண்டிய நிலை, பாகிஸ்தானுடன் வானில் சண்டை போட போதிய ஆயுதங்கள் இருக்கிறதா என்பதை கூட ஒருமுறை யோசித்து பார்க்க வேண்டியுள்ளது.

இந்திய எல்லைக்குள் புகுந்து, இந்திய ராடார்களை ஏமாற்றி , இந்திய விமானப்படைக்கு தண்ணி காட்டிவிட்டு இந்திய ராணுவ நிலைகள் மீது குண்டுகளை வீசி சென்றுள்ளது பாகிஸ்தான் விமானப்படை, விமானப்படையின் வட்டாரத்தில் கேட்கும் போது பாகிஸ்தான் இவ்வளவு சீக்கிரம் எதிர்த்து தாக்கும் என்றும், அதுவும் பட்டப்பகலில் தாக்கும் என்றும் நினைத்து பார்க்க முடியவில்லை என்கின்றனர்.

உண்மையில் போர் விமானங்கள் இருக்கும் அளவுக்கு ஏவுகணைகள் உள்ளதா, பாகிஸ்தான் நீங்கள் கொடுத்த ஏவுகணைகளை எங்கள் மீது பயன்படுத்திவிட்டது என்று அமெரிக்காவிடம் அழும் நிலையில் உள்ளோமா நாம், மாபெரும் ராணுவ பட்ஜெட் இருந்து என்ன பிரயோஜனம், பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் தாக்கிக்கொண்டு தானே இருக்கிறது, நாமும் வீரர்களை இழந்துகொண்டுதானே இருக்கிறோம்,.

பாகிஸ்தான் விமானப்படை சிறியது தான், ஆனால் அதன் திறன் மிக அதிகம், இந்தியாவுடன் போட்டி போட்டு கடும் சண்டையிடும் வகையில் அதை தயார்படுத்தியுள்ளது பாகிஸ்தான், மறுபுறம் நாமோ பாகிஸ்தான் தானே சுண்டைக்காய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

பாகிஸ்தானின் விமானப்படையின் பலனை பார்த்தல் சற்று மிரட்ச்சியூட்டும் நிலை, கூடவே நல்ல பராமரிப்பு, தேவைக்கு அதிகமான ஏவுகணைகள். குறிப்பாக அதன் F 16 விமானங்கள், சுமார் 50-க்கும் அதிகமான F 16 விமானங்கள் பாகிஸ்தானிடம் உள்ளது , அனைத்துமே அதி நவீன AMRAAM எனப்படும் தொலைதூர வான் தாக்கும் ஏவுகணைகளை ஏவ வல்லது, சுமார் 100-130 கிலோமீட்டர் வரை சென்று இலக்கை துல்லியமாக தாக்கும், நம்பிக்கை மிகுந்தது,

அமெரிக்கா ஆயுதம் மற்றும் விமான உதிரி பாகங்கள் தராத போதும் துருக்கியுடன் நல்லுறவை பேணி அவர்களின் உதவியுடன் அனைத்து விமானங்களையும் எப்போதும் சண்டையிடும் நிலைக்கு தயார் படுத்தி வைத்துள்ளது.

அதற்கு அடுத்தது சீன பாகிஸ்தானிய கூட்டு தயாரிப்பான JF 17 விமானம், இதுவும் F16 விமானத்துக்கு நிகரான சக்தி கொண்டது, பேருக்கு வேண்டுமானால் சீன தயாரிப்பு என்று கிண்டல் செய்யலாம், ஆனால் போர் என்று வந்தால் போன மாதம் நடந்த சண்டை போல மூக்குடைபட தான் செய்யும்.

இதிலும் ஒரு படி மேலாக சீனாவிடமிருந்து தொலை தூர வான் தாக்கும் ஏவுகணையான PL 15 -ஐ வாங்கியுள்ளது, அதன் முதல் தொகுதியான 100 ஏற்கனவே பாகிஸ்தானுக்கு கிடைத்துவிட்டது, இந்த PL 15 ஏவுகணையின் தாக்கும் தூரம் சுமார் 150 கிலோமீட்டருக்கு மேல், இந்தியாவில் இதற்கு ஈடாக எந்த ஏவுகணையும் இதுவரை இல்லை ( ஆனால் சீக்கிரமே மீட்டார் ஏவுகணை இந்திய விமானப்படையில் இணையும் )

இதனுடன் கூடவே, ஒரு மணி நேரம் பறக்கும் செலவு மற்றும் ஒரு நாள் எத்தனை தடவை விமானம் பறக்கும் என்ற தகவலையும் பார்த்து விடலாம். பாகிஸ்தானிய F16 விமானத்தை ஒரு மணி நேரம் பறக்க வைக்க சுமார் 7000 டாலர் செலவாகும், அதே நேரம் JF  17 விமானத்திற்கு சுமார் வெறும் 4000 டாலர் செலவாகும்.

பாகிஸ்தானை பொறுத்தமட்டில் ஒரு F16 விமானத்தை ஒரு நாளில் அதிகபட்சமாக மூன்று முறை பறக்க வைக்க முடியும், அதே நேரம் JF 17 அதிகபட்சமாக இரு முறை பறக்கும்.

அவ்வளவு தான் பாகிஸ்தான் விமானப்படை என்று எண்ணும் அதே நேரம் மாபெரும் இந்திய விமானப்படையின் சக்தியையும் கூட பார்த்துவிடலாம்.

இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என்று அழைக்கப்படும் சுகோய் விமானம் உண்மையின் விமானப்படையின் முதுகெலும்பை உடைக்கத்தான் செய்கிறது, சுகோய் விமானத்தின் முக்கிய வான் பாதுகாப்பு ஏவுகணையான R77 நம்பிக்கை அற்றது, கூடவே வெறும் 100 கிலோமீட்டர் தான் செல்லும், இதன் நம்பிக்கை குறித்து விமானப்படையும் தணிக்கை துறையும் பல முறை கேள்வியெழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது உக்ரைனிடமிருந்து வாங்கிய R 27 EP  ஏவுகணைகளைத்தான் பயன்படுத்தி வருகிறோம். இதன் அதிகபட்ச தாக்கும் தூரம் 80 கிலோமீட்டர் தான், மேலும் இது மிக பழைய ரக ஏவுகணை, இந்த ஏவுகணைகளிலிருந்து எதிரி விமானங்கள் எளிதில் தப்பித்து விடும்.

சுகோய் விமானம் ஒரு மணி நேரம் பறக்க ஆகும் தொகை சுமார் 14,000 டாலர், ஒரு நாளில் அதிக பட்சமாக இரு முறை பறக்கும், பொதுவாக ஒரு நாளுக்கு ஒரு முறை தான் பறக்கும்.

அடுத்து MiG 29 விமானம், இதுவும் சுகோய் விமானத்தை போலவே கடினமான பராமரிப்பு பணிகள், உதவாத ஏவுகணை அமைப்பு, ஒரு மணி நேரம் பறக்க சுமார் 10,000 டாலர் செலவு, மேலும் ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தலாம். அவ்வளவே, சமீபத்திய சண்டையின் போது இதை இந்திய விமானப்படை பயன்படுத்தவே இல்லை, உதிரி பாகங்கள் இல்லாதது, நம்பகத்தன்மை இல்லாமை போன்ற காரணங்களுக்காக இதை ஒதுக்கி வைத்திருக்கலாம்.

மிராஜ் 2000 விமானத்தில் நவீன மைக்கா ஏவுகணைகள் உண்டு, கூடவே அதன் தாக்கும் திறனும் நம்பகத்தன்மையும் மிக அதிகம், சுமார் 60 கிலோமீட்டர் வரை சென்று எதிரியை தாக்கும், ஆனால் ஏவுகணையை வீசும் போது நிச்சயம் விமானமும் ஆபத்தில் சிக்கும் வாய்ப்பு மிக அதிகம், உதாரணமாக பாகிஸ்தானின் போர் விமானங்கள்  மிராஜ் விமானத்தை கண்டவுடன் ஏவுகணைகளை வீசி தாக்கும், ஆனால் மிராஜ் விமானம் எதிரி விமானத்தை ராடாரில் கண்டுபிடித்தாலும் அதன் அருகே சென்று தான் தாக்க வேண்டும், நம்பகத்தன்மை மிக்க ஏவுகணை என்றாலும், எதிரியின் கூண்டுக்கு உள்ளே சென்று யார் தாக்குவார்கள், ஆக இதுவும் பயனற்றது. கூடவே ஒரு நாள் மூன்று முறை பறக்கும், அதன் ஒரு மணி நேர பறக்கும் செலவும் சுமார் 15,000 டாலர் வரை செலவாகும்.

அதற்கு அடுத்து உண்மையான இந்திய விமானப்படையின் முதுகெலும்பான MiG 21, MiG 21 விமானத்துக்கு பிறகு உண்மையில் விமானப்படைக்கு நல்ல விமானங்கள் கிடைக்கவில்லை என்றே கூறலாம் செலவும் குறைவு, ஒரு நாள் சுமார் 5 முறை பறக்கும், வெறும் 4000 டாலர் தான் ஒரு மணி நேரம் பறக்க செலவாகும். விமானப்படையால் அதிக முறை பயன்படுத்தப்பட்ட விமானம்

ஒரே பின்னடைவு என்ன என்றால், குறைந்த ராடார் தூரம், நம்பகத்தன்மை அற்ற ஏவுகணைகள். வேறு வழியில்லாதாலும் சரியான விமானங்கள் இல்லாததாலும் தான் மிக் 21 விமானங்களை விமானப்படை பயன்படுத்துகிறது

இந்த காரணங்களால் தான் பாகிஸ்தான் படை சிறியதாக இருந்தாலும், இவ்வளவு வலிமை மிக்க இந்திய விமானப்படையை துணிந்து எதிர்கொள்கிறது.

இந்திய விமானப்படைக்கு ஒத்து போகும் ஒரே விமானம் சுவீடனின் கிரிப்பன் போர் விமானம் தான், சிறந்த ராடார், 150 கிலோமீட்டர் தூர மீட்டார் ஏவுகணை( உலகின் தலை சிறந்த வான் பாதுகாப்பு ஏவுகணை)  நம்பத்தன்மை மிக்க அமெரிக்காவின் AMRAAM ஏவுகணையும் வீசும் திறன், குறைந்த செலவு, வெறும் 4700 டாலர்கள் ஒரு மணி நேரம் பறக்க, ஆச்சர்யமூட்டும் விதமாக ஒரு நாளில் 5 முறை பறக்கும் ஆற்றல் கூடவே வெறும் 30 நிமிடத்தில் பறக்க தயாராகும் நிலை. இந்திய விமானப்படைக்கு தேவையான ஒரே விமானம் கிரிப்பன் தான்.

பாகிஸ்தானை தாக்க வேண்டும் அவனுடன் சண்டையிட வேண்டுமென்றால் உறுதியான போரிட வேண்டிய விமானங்கள் தேவை, ஷோவுக்கு பயன்படுத்தும் விமானங்கள் அல்ல.