நெருங்கி வந்த போர், தனக்கு சாதகமாக்கிய பாகிஸ்தான்

40 வீரர்களை உடல் சிதற பலி கொடுத்தது இந்தியா, பாகிஸ்தானில் அரசின் உதவியோடு இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை பரப்பும் ஜெய்ஷ் முஹம்மது தீவிரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது, தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக தீவிரவாதிகளின் முகாம் மீது விமான தாக்குதல் நடத்த அரசு உத்தரவிட்டது, அதன் பிறகு நடந்தவை அனைத்துமே மிக தீவிரமாக மாறின, முன்னர் ஒரு கட்டுரையில் பாகிஸ்தானுக்குள் தாக்குதல் நடத்த எந்த அளவு வலிமை வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தேன், தற்போது சொல்லப்போகும் உண்மைகள் கொஞ்சம் கசக்கலாம், ஏற்றுக்கொள்வதும் இல்லாததும் அவரவர் விருப்பம்.

பாலக்கோட் தாக்குதல், விமானப்படையின் 12 மிராஜ் விமானங்கள் அதிகாலை நேரத்தில் பாகிஸ்தானின் சர்வதேச எல்லைக்கோட்டை கடந்து சென்று Spice 2000 குண்டுகளை வீசின, இந்த குண்டில் சுமார் 1000 கிலோ வெடிபொருள் இருக்கும், இலக்கை துல்லியமாக தாக்கும், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. இந்திய விமானங்கள் சர்வதேச எல்லையை தாண்டியதும், பாகிஸ்தானுக்குள் குண்டு வீசியதும் பாகிஸ்தான் ராணுவ தகவல் தொடர்பாளர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

12 மிராஜ் விமானங்களில் ஒன்று மட்டுமா குண்டு வீசியது என்றால் இல்லை, 4 அல்லது 6 விமானங்கள் இதே போன்ற குண்டுகளை வீசியிருக்கலாம், மற்ற 6-8 மிராஜ் விமானங்கள் பாதுகாவலுக்கு சென்றிருக்கலாம், தாழ்வாக பறந்து இலக்கில் மேல் குண்டுவீசி விட்டு உடனே திரும்பிவிட்டது, குண்டு விழுந்த மற்ற இடங்கள் குறித்த தகவல் எதுவும் இல்லை, விமானப்படை கூறிய தகவலை வைத்து பார்த்தல் நிச்சயம் தீவிரவாத முகாம்கள் ஒன்றிரண்டாவது குண்டுவீச்சில் அழிக்கப்பட்டிருக்கும்.

தீவிரவாதிகளின் முகாமை தாக்கியதுமே பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைப்பகுதிகளில் ரோந்து வர துவங்கிவிட்டது, எல்லைப்பகுதிக்கு மிக அருகே பாகிஸ்தான் ரோந்து வருவதால், அவர்கள் எப்போது தாக்குவார்கள் என்பதை யாராலும் யூகிக்க முடியாது, முதலில் யார் தாக்கினாலும் அடுத்தவருக்கு நிச்சயம் இழப்பு ஏற்படும்.

தீவிரவாத முகாம்களை தாக்கியதற்கு பதிலடியாக, பாகிஸ்தான் தனது விமானப்படையின் பாதி விமானங்களை இந்தியாவை எதிர்த்து தாக்க தயார்படுத்தியது, அதோடு இந்திய ராணுவத்தின் நிலைகளை தாக்க பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டது.

பாகிஸ்தான் அரசின் உத்தரவின்படி, சுமார் 24 விமானங்கள் கொண்ட பல்முனை தாக்குதலை காஷ்மீர் மீது ஏவியது பாகிஸ்தான் விமானப்படை, அதன் நான்கு போர் விமானங்கள் குண்டுகளுடன் இந்திய எல்லைக்குள் வந்து ராணுவத்தின் முகாம் அருகே குண்டுகளை வீசியது, ராணுவத்தின் தரப்பில் குண்டுவீச்சில் சொல்லும்படியான சேதாரம் இல்லை என்று அறிக்கை வெளியிடப்பட்டது.

மேற்கூறிய அந்த 24 விமானங்களை எதிர்க்க காஷ்மீரில் உள்ள மூன்று விமானப்படை தளங்களிலிருந்தும் விமானங்கள் புறப்பட்டன, செலவை கட்டுப்படுத்தும் பொருட்டு, வானில் ஏற்கனவே இரண்டு MiG 21 போர் விமானங்களை ரோந்து பணிகளுக்காக அனுப்பியிருந்தது விமானப்படை. இந்த போர் விமானங்களின் கண்காணிக்கும் தொலைவு வெறும் 60 கிலோமீட்டர் தான், பாகிஸ்தான் போர் விமானங்கள் தளத்திலிருந்து மேலெழும்பும் போது இந்த விமானங்களால் கண்டறிய இயலாது.

இந்த விமானங்களுக்கு பெரிய பாகிஸ்தான் படை வருகிறது என்று தரையில் இருக்கும் கண்காணிக்கும் ராடார்கள் இல்லையெனில் வானில் பறந்து கண்காணிக்கும் AEWCS விமானம் தான் உணர்த்தியிருக்க வேண்டும், ஆனால் AEWCS விமானங்கள் பறந்ததற்கான எவ்வித ஆதாரமும் இல்லாததால், தரையிலிருந்து கண்காணிக்கும் ராடார்கள் தான் இதை அறிந்து வானில் ரோந்து செல்லும் MiG 21 விமானங்களுக்கு உணர்த்தியிருக்க வேண்டும்,

இப்படையை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தரப்பில் வெறும் 4 சுகோய் விமானங்கள் அவந்திப்பூர் விமான தளத்திலிருந்தும், உதம்பூர் விமான தளத்திலிருந்து மேலும் 2 மிராஜ் விமானங்களும் அனுப்பப்பட்டது, இது விமானப்படையால் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இந்தியாவின் குறுக்கிடும் படை வானில் செல்வதற்கு முன்னரே பாகிஸ்தானிய படை இந்திய எல்லைக்குள் நுழைந்து குண்டுகளை வீசிவிட்டு சென்று விட்டது, இப்படையை எதிர்க்க வெறும் இரண்டு MiG 21 விமானங்கள் தான் வானில் இருந்தன, காரணம் ஒரு QRA ( Quick reaction Alert ) படை வானில் சென்று எதிரியை எதிர்கொள்ள சுமாராக 2 நிமிடம் எடுத்துக்கொள்ளும், மேலும் பாகிஸ்தானின் அப்பெரும் படை 5 நிமிடத்தில் மொத்த வேலையையும் முடித்து திரும்பி சென்றிருக்க வேண்டும்.

வேறு வழியில்லாமல், பறக்கும் சவப்பெட்டியில் சென்ற விங் கமாண்டர் எல்லையை காக்கும் பொருட்டு பாகிஸ்தானிய போர் விமானங்களை விரட்டி சென்றுள்ளார், இதில் இரண்டு முரண்பட்ட கருத்துக்கள் உண்டு,

1. பாகிஸ்தானிய விமானம் சுட்டு வீழ்த்தியிருக்கலாம்
2. அதிக வேகம் மற்றும் அதிகமான G-லிமிட்டை தாக்கு பிடிக்காமல் விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்திருக்கலாம்.

2 வது கூற்றுக்கு, விமானத்தில் ஏவுகணை மோதியது போல தெரியவில்லை, அதோடு எதிரி F16 விமானம் ராடாரில் நமது MiG 21 விமானத்தை லாக் செய்திருக்க வேண்டும், அதை உடைக்க நமது MiG 21 கடும் வேகத்தில் சுழன்றிருக்க வேண்டும், கட்டுப்பாட்டை இழந்தோ அல்லது விமானம் அந்த கடும் சுழற்சியை தாங்காமல் பல கருவிகள் செயலிழந்து விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம்,

இதில் விமானப்படையை தான் குறை கூற வேண்டும், காரணம் பாகிஸ்தானுடன் சண்டை போடப்போகிறோம் என்றதும், நிச்சயம் மற்ற தளங்களிலிருந்து விமானங்களை பாகிஸ்தான் எல்லையை நோக்கி முன்னரே நகர்த்தியிருக்க வேண்டும், வான் பாதுகாப்பு ஏவுகணைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், எதுவும் செய்யாமல் சாதாரண நேரம் போல வானில் MiG 21 விமானங்களை ரோந்துக்கு அனுப்பி விளையாடிக் கொண்டிருந்துள்ளது, அவர்கள் தாக்கி விட்டு சென்ற பின்னரே நமது விமானங்கள் அப்பகுதியை அடைந்தது,

அதில் சொதப்பிய விமானப்படை, வீரர் ஒருவரை பாகிஸ்தானிடம் இழந்தது,

வீரர் எதிரியின் நிலப்பகுதியில் விழுந்து விட்டால், அமெரிக்கா இஸ்ரேல் போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் CSAR ( Combat Search and Rescue )என்னும் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கும், கமாண்டோ வீரர்கள் மூலம் எதிரி நாட்டில் விழுந்த வீரரை மீட்கும், எப்பெரும் படை வந்தாலும் சமாளிக்கும் அளவுக்கு ராணுவத்தையும் முன்னிறுத்தும், அதெல்லாம் வேற மாதிரி, இங்கு அது நடக்கும் என்று கனவு கூட காண வேண்டாம், அது வல்லரசு மற்றும் வேறு சில நாடுகளால் மட்டுமே முடியும். நம்மால் முடியாது ஒத்துக்கொள்ள வேண்டியது தான்,

ஆனால் படைகளின் வேண்டுகோளுக்கிணங்க, அதிகப்படியான படைகளையும் ஆயுதங்களையும் எல்லைக்கு அனுப்ப அரசு சம்மதித்தது, வீரர் எதிரியின் கையில் அகப்பட்டதும், விமானப்படையின் சரக்கு விமானங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரர்களையும் ஆயுதங்களையும் எல்லையில் குவித்தது,

கப்பல் படையை முன்னுக்கு செல்ல அரசு அனுமதியளித்தது, ஏறத்தாள போர் என்னும் நிலையை இந்தியா எட்டியதும் பாகிஸ்தான் மெதுவாக பணிய துவங்கியது, முதலில் சீக்கிரம் விடுவிப்போம் என்றது,

சில மணி நேரம் கழித்து இந்தியாவில் பாதுகாப்பு அமைச்சக கூட்டம் முடிந்ததும் மாலை 5 மணிக்கு முப்படை தளபதிகள் செய்தியாளர்களை சந்தித்து அறிக்கை அளிப்பார்கள் என்றும், செய்தியாளர்கள் கேள்வி கேட்கலாம் என்றும் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது,

விமானப்படை நகர்வுகள், ராணுவ நகர்வுகள் குறித்த தகவல்கள் வந்த வண்ணமே இருந்தது, பாகிஸ்தானும் தனது படைகளை நகர்த்தியது, வான் பகுதியை மூடியது, போர் குறித்த தகவல்கள் நிச்சயம் செய்தியாளர் சந்திப்பில் இருக்கும் என்று பலர் கணித்தனர்.

பாகிஸ்தானும் இதை கணித்தது, கூடவே பல நாட்டு நடுநிலையாளர்களும் உள்ளே வந்து இரு நாடுகளிடமும் பேச்சு  நடத்தினர், ஆனால் செய்தியாளர் சந்திப்புக்கு 10 நிமிடம் முன்னால் வீரரை நாளை மாலை விடுவிக்கிறோம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்தது, உடனே செய்தியாளர் சந்திப்பையும் மாலை 7 மணிக்கு ஒத்திபோட்டது பாதுகாப்பு படை.

செய்தியாளர் கூட்டமும் கேள்விகளும் குறிப்பிடத்தகும் படி இல்லை, காரணம் வீரர் நாடு திரும்பும் வரை தாக்குதலுக்கு வாய்ப்பே இல்லை என்று அனைவரும் முன்கூட்டியே கணித்து விட்டனர்,

மறுநாள் இரவு செஞ்சிலுவை சங்கம் மற்றும் இந்திய தூதரகம் மூலம், வீரர் வாகா எல்லை வழியாக இந்தியா வந்தார்.

வந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே, இந்திய பாகிஸ்தான் படைகள் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டின் எல்லா பகுதிகளிலும் மிக கடுமையாக தாக்கின, இருபக்கமும் உயிரிழப்புகள் ஏற்பட்டன, பின்பு நேற்று காலை மார்ச் 1 முதல் எல்லாம் பழைய நிலைக்கு திரும்பியது. நேற்று இரவு குறிப்பிடத்தகும் படியான தாக்குதல் எல்லையில் இல்லை, சாதாரணமாக எல்லையில் நடக்கும் துப்பாக்கி சூடு மட்டுமே நேற்றும் நடந்தது. ( அதை சாதாரணமாக எடுக்க பழகிவிட்டது அரசு )

இன்று பழைய நிலைக்கு திரும்பி விட்டது இந்திய பகுதிகள்,

மீண்டும் விரல் சூப்பும் அரசு என்று முடித்துக்கொள்கிறேன், காரணம் இந்திய ராணுவ நிலைகள் மீது பாகிஸ்தான் போர் விமானம் குண்டு வீசியதற்கு என்ன நடவடிக்கை எடுக்க அரசு ஆணையிட்டது,

ஒரு அரசியல் பார்வையாக, இது அனைத்தும் தேர்தலுக்காக அரசு செய்யும் நாடகம் என்பதும், இம்ரான்கான் நல்லவர் என்று கூறும் அனைவருமே 5 அறிவு ஜீவிகள் தான், உங்களுக்கு 6-வது அறிவான சிந்திக்கும் திறன் இல்லை, ஒத்துக்கொள்ளுங்கள், இல்லையெனில் ஒரு முறை அந்த 40 வீரர்களின் குடும்பங்களை நினைத்து பாருங்கள், ஒவ்வொரு வாரமும் உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் வரும் வீரரின் உடலை போய் பாருங்கள்.