புலாவாமா தாக்குதல், இன்னும் விரல் சூப்பிக்கொண்டிருக்கும் அரசு

புலாவாமா தாக்குதல் நடந்து 48 மணி நேரம் ஆகிவிட்டது, பொதுமக்களும் சகஜ நிலைக்கு மெதுவாக திரும்பிவிட்டனர். அரசும் ராணுவத்தின் கைகள் அவிழ்த்துவிடப்பட்டுள்ளது என்று அவர்கள் பங்குக்கு கூவி பொதுமக்களை ஆறுதல் அடைய வைத்துள்ளார்கள். பாகிஸ்தான் தொடர்ந்து எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டாலும், அதை தடுக்கும் சக்தி இல்லாத நாம் சூப்பர் பவர் என்று கனவு காண்கின்றோம், உலகின் மாபெரும் ராணுவம் என்று மார் தட்டுகிறோம், ஆனால் அடுத்த நாடு நம் நாட்டிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்துகிறது, ஆனால் அதனுடன் நட்பு பாராட்டி சிறந்த நேச நாடு என்று அங்கீகரித்துள்ளோம்.

காதலர் தினத்தன்று மாலை சுமார் 70 குண்டு துளைக்காத பேருந்துகளில் சுமார் 2500- க்கும் மேற்பட்ட CRPF வீரர்கள் அவந்திப்பூர் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு பயணிக்க துவங்கியிருந்தனர். இந்த படை நகர்வுக்கு தேவையான கவச வாகன பாதுகாப்பு, கன்னி வெடி கண்டறியும் வாகனங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட்டது. இந்த பெரிய படை நகர்வுக்கு முன்பதாக சாலையை கண்காணிப்பது, கூடவே சாலையின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டது.

ஜம்மு போலீஸ் உளவு தகவலான குண்டு வைக்கப்படலாம் என்ற விஷயமும் கையிலெடுக்கப்பட்டு தேவைக்கு அதிகமான கண்ணி வெடி கண்டறியும் வாகனங்களும் கவச வாகனங்களும் பாதுகாப்புக்கு பயன்படுத்தப்பட்டது.

70-க்கும் மேற்பட்ட பேருந்துகள் என்பதால் சாலையில் மற்ற வாகனங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது, பொதுவாக ராணுவ படை நகர்வின் போது இந்தியாவில் பொதுமக்களின் வாகனங்களை ராணுவம் தடுத்து நிறுத்தாது, பல நாடுகளிலும் கூட. அதனால் இந்த படை நகர்வின் போது கூட பொது மக்களின் வாகனங்கள் மிக சாதாரணமாக இதனுடன் பயணித்தன.

ஆனால் பயணம் துவங்கிய சில நிமிடங்களிலேயே வேகமாக முன்னேறிய ஒரு ஸ்கார்பியோ 4-வதாக வந்த பேருந்தின் மீது மோதியது. மோதிய அக்கணமே பெரும் சத்தத்துடன் வெடித்தது. ஸ்கார்பியோவும் பேருந்தும் மோதி வெடித்த மாத்திரத்தில் இரண்டும் சுக்கு நூறாக உடைந்தது. முன்னால் மற்றும் பின்னால் சென்று கொண்டிருந்த பேருந்துகளும் கடும் சேதத்துக்கு உள்ளானது.

VBIED – என்று அழைக்கப்படும் தாக்குதல் யுக்தியை புதிதாக இந்தியாவில் அறிமுகப்படுத்தியது பாகிஸ்தான் அரசு மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் செயல்படும் ஜெய்ஷ் ஏ முஹமது அமைப்பு. சிரியா ஆப்கான் மற்றும் இராக் நாடுகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் இந்த தாக்குதல் முறை தற்போது இந்தியாவிலும் வந்துவிட்டது.

இந்த தாக்குதலில் 60 கிலோவுக்கு அதிகமான RDX வெடிபொருள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 300 கிலோ என்று பல ஊடகங்கள் முன்பு கூறியது தவறு, 300 கிலோ RDX என்றால் விளைவு மிக கடுமையாக இருந்திருக்கும்.  60 கிலோ RDX  வெடிபொருளுடன் ஒரு பெரிய டாங்கி மீது மோதினால் கூட டாங்கி சுக்கு நூறாகிவிடும், சாதாரண புல்லட் துளைக்காத பேருந்து எம்மாத்திரம்.

பொதுவாக VBIED தாக்குதல் நடத்த அதிக அளவு வெடிபொருள் தேவைப்படும், அதோடு வெடிக்க வைக்கவும் அதை ஒழுங்காக செய்யவும் அதிக அளவு பயிற்சி மற்றும் அறிவு தேவை, இந்த தாக்குதலை நிகழ்த்தியவன் 21 வயதே ஆன அடில் தார் என்னும் இஸ்லாமிய தீவிரவாதி என்றாலும், தாக்குதலை நடத்தவும் காரில் வெடிகுண்டை நேர்த்தியாக வைத்து அதை செய்து கொடுத்தவன் அப்துல் காசி என்ற பயங்கரவாதி என்று இந்திய உளவு தகவல்கள் கூறுகின்றது.

தாக்குதல் நடந்தாகிவிட்டது, 42-க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தோம், அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வக்கற்று நிற்கிறோம், அரசு இதுவரை என்ன செய்துள்ளது என்று பார்த்தால்

  1. பாகிஸ்தான் சிறந்த நேச நாடு என்று 2 வருடங்களுக்கு முன்பு கொடுத்த அங்கீராத்தை ரத்து செய்துள்ளது.
  2. இந்திய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி விவாதித்தது.
  3. படை தளபதிகள் தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் விவாதித்தது.
  4. பாகிஸ்தானுக்கான இந்திய தூரத்தை அழைத்து கலந்தாலோசிக்கிறது.
  5. இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து கண்டனத்தை பதிவு செய்தது.
  6. சுமார் 25 நாட்டு பிரதிநிதிகளை அழைத்து நிலைமையை எடுத்து கூறியது
  7. அனைத்து கட்சி கூட்டத்தை கூடி நிலைமையை விளக்கி கூறியது

ஆக 48 மணி நேரத்தில் இந்தியா கொடுத்த பதிலடி மேற்கூறிய அவ்வளவும் தான். தற்போதும் பாகிஸ்தானுடன் நடந்து கொண்டிருக்கும் உறவுகள்

  1. வாகா எல்லையில் இன்றும் இந்திய வீரர்களும் பாகிஸ்தான் தீவிரவாதிகளும் அணிவகுப்பு மற்றும் கொடி இறக்க நிகழ்வில் ஈடுபடுவார்கள்.
  2. இன்றும் எல்லை வழியாக வர்த்தகம் நடை பெறும்.
  3. இன்றும் எல்லையில் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தும்

நாம் வல்லரசு நாடா

கனவில் கூட அப்படி நினைத்து பார்க்க வேண்டாம், 48 மணி நேரமாக விரல் சூப்பிக்கொண்டு தானே இருக்கிறோம். பாகிஸ்தானை எப்படி தாக்கலாம் என்று இனி தான் விவாதித்து திட்டங்கள் வகுக்க வேண்டுமா. சர்ஜிக்கல் தாக்குதலால் என்ன பயனை அடைந்தோம்.

நம்மை நிம்மதியாக தூங்க விடாமல் தினமும் எல்லையில் துப்பாக்கியால் சுட்டு நம் வீரர்களை கொல்லும் பாகிஸ்தானை எதிர்த்து நாம் என்ன செய்தோம். வீணாக நான் பெரியவன் என்று நெஞ்சை நிமிர்த்து கொண்டு நடந்தது தான் மிச்சம், இழந்த வீரர்களின் குடும்பத்தை எப்படி எண்ணி பார்ப்போம்.

கடைசியாக எனக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் பாகிஸ்தான் மீது விமானப்படை வைத்து தாக்குதல் நடத்த அரசு உத்தேசித்துள்ளதாம், அந்த தாக்குதல் எப்படி இருக்கும், சுமார் 4 ஜாகுவார் அல்லது 4 மிராஜ் விமானங்கள் இந்திய எல்லை அருகே உள்ள பாகிஸ்தானின் கண்காணிப்பு நிலைகள் மீது குண்டுகளை வீசும், இந்தியா இப்படி செய்யும் என்று பாகிஸ்தான் உஷாராக அப்பகுதியில் உள்ள ராணுவத்தை அப்புறபடுத்தும், நாமும் வெற்றி வெற்றி என்று முழங்குவோம், இது தான் நடக்கும் நடக்க போகிறது.

இவ்வளவு வெத்து வேட்டாக நாம் இருக்கிறோமே, இதில் சூப்பர் பவர் என்ற பந்தா வேறு, 48 மணி நேரமாக ஒரு குண்டூசி மூலம் கூட பாகிஸ்தானை காயப்படுத்த இயலவில்லை, இனி வாய் வார்த்தைகளை வைத்து காலம் தள்ளலாம், இல்லை மேலே சொன்னது போன விமான தாக்குதல் நடத்தினோம் என்று பீத்திக்கொள்ளலாம் அவ்வளவே.

ராணுவத்தின் கை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது என்று பிரதமர் டுவீட் செய்துள்ளார், அதற்கு என்ன அர்த்தம் என்று கூடதெரியவில்லை, ராணுவத்தின் ஒரு வீரனுக்கு எல்லை தாண்டி சென்று சுட அனுமதி இல்லை, இருக்கும் இடத்தை விட்டு அல்லது குறிக்கப்பட்ட பணியை தாண்டி வேறு எதுவும் செய்ய கூட அனுமதி இல்லை. மக்களை முட்டாளாக்கவே பிரதமர் அப்படி டுவீட் செய்துள்ளார்.