உக்ரைன் மற்றும் மேற்கு நாடுகளுடன் போருக்கு தயாராகிறது ரஷ்யா

மூன்று நாட்களுக்கு முன்பு உக்ரைனுக்கு சொந்தமான கெர்ச் நீரிணையை மூடிய ரஷ்ய கப்பல் படை அதன் வழியாக செல்ல முயன்ற உக்ரேனிய கப்பல் படை படகுகளை தாக்கி மூன்றை சிறை பிடித்தது, இரு தரப்புக்கும் அசோவ் கடலில் ஏற்பட்ட சண்டையில் ரஷ்ய சிறப்பு படைகள் ஹெலிகாப்டர் மூலம் படகுகளில் இறங்கி படகுகளை கைப்பற்றியது. உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் ரஷ்யா ஒரு மாபெரும் போருக்கு தயாராகி வருவதை காட்டுவதாக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

இதனிடையே உக்ரைனிய துறைமுகங்களிலிருந்து கெர்ச் நீரிணை வழியாக வெளியே வர முடியாமல் சுமார் 30-க்கும் மேற்பட்ட பெரிய வணிக கப்பல்கள் அசோவ் கடலில் நங்கூரமிட்டுள்ளன, இதனால் உக்ரைனின் கப்பல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதோடு உக்ரைனிடமிருந்து ராணுவத்தை பயன்படுத்தி கைப்பற்றிய கிரிமியா தீபகற்பத்தில் சுமார் 1,50,000 படை வீரர்களையும், வான் பாதுகாப்பு மற்றும் கப்பல்களை அழிக்கும் ஏவுகணைகளையும் ரஷ்யா நிறுத்தியுள்ளது.

இந்த படைகள் உக்ரைனுக்குள் நுழைய சுமார் 96 மணி நேரம் தேவைப்படும் என்று போர் கண்காணிப்பாளர்கள் கருதுகின்றனர், அதோடு நேற்று இரவு முதல் கடும் போர் பயிற்சியிலும் அவை ஈடுபட்டுள்ளது.

நேற்று முன்தினம் ரஷ்ய எல்லையை ஒட்டிய மாகாணங்களில் ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்திய அதிபர் போர்ச்செங்கோ, ராணுவத்தையும் எல்லை அருகே குவித்து வருகிறார், அதோடு 40 வயதுக்குட்பட்ட அனைத்து உக்ரைனிய ஆண்களையும் போருக்கு தயாராகவும் அருகே உள்ள ராணுவ மையத்தை தொடர்பு கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார், முன்னாள் உக்ரைன் ராணுவ வீரர்களையும் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டுள்ளார். CNN நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில்  மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உக்ரைன் எடுத்துள்ளதாகவும், ரஷ்ய படைகள் தாக்க முயற்சித்தால் உக்ரைன் பதிலுக்கு கடுமையாக தாக்கும் என்றும் கூறினார்.

ஆனால் படை பலத்தை பார்க்கையில், தற்போது ஆக்கிரமிப்பு கிரிமீய தீபகற்பத்தில் மட்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை ரஷ்யா நிறுத்தியுள்ளது, இது உக்ரைனுக்குள் முன்னேறி செல்லும் ரஷ்ய படைகளுக்கு மிகப்பெரிய பலமாக அமையும், பெரிய அளவில் விமானப்படை மற்றும் ஏவுகணைகள் இல்லாததால் உக்ரைனால் சமாளிப்பது மிகக் கடினமே.

ரஷ்யாவிடம் இது குறித்து பேசிய ஜெர்மனிய அதிபர் மெர்கல் , கைப்பற்றபட்ட உக்ரைனிய படகுகளையும் வீரர்களையும் விடுவிக்குமாறும், கெர்ச் வளைகுடாவை திறக்குமாறும், படைகளை விலக்கி கொள்ளுமாறும் கூறினார், இதற்கு புதின் மறுப்பு தெரிவித்ததாக ஜெர்மன் அரசு கூறியுள்ளது. அசோவ் கடலை ஒட்டியுள்ள கருங்கடலுக்கு ஜெர்மனிய கப்பல் படையையும் ஜெர்மானிய சிறப்பு படைகளையும் அனுப்ப ஜெர்மனி யோசித்து வருவதாகவும் ஜெர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

உக்ரைனுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ள எஸ்த்தோனிய அதிபர் இது ஐரோப்பாவில் நடக்கும் போர் என்றும், ஐரோப்பிய நாடுகள் உக்ரேனுக்கு ஆதரவாக நடக்க வேண்டும் என்றும் கூறினார்,

ரஷ்யாவை கடுமையாக சாடிய நாட்டோ இது மாபெரும் போருக்கு வழிவகுக்கும் என்றும், ரஷ்ய படைகள் பழைய நிலைக்கு செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளது.

நாட்டோ கப்பல் படை கருங்கடலை கடந்து கெர்ச் நீரிணை வழியாக அசோவ் கடலில் உள்ள உக்ரைன் துறைமுகத்துக்கு வர வேண்டும் என்று உக்ரைன் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்கா பாதுகாப்பு செயலர் மாட்டிஸ், ரஷ்யாவின் இந்த செயல் சர்வதேச விதிமுறைகளை மீறுவதாகும் என்றும் கைப்பற்றிய உக்ரேனிய படகுகள் மற்றும் வீரர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

கெர்ச் நீரிணையில் நடக்கும் இந்த நிலையில்லா தன்மை மற்றும் ரஷ்ய படைக்குவிப்பு ஒரு உலகப்போர் நிலை வரை கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை, எனினும் அடுத்த நான்கு நாள் ரஷ்யாவின் நகர்வு எப்படி இருக்கும் என்பதை பொறுத்தே போர் வருமா இல்லையா என்பதை சரியாக கணிக்க இயலும்