பழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ள ரஷ்யா

சமீபத்தில் ரஷ்யாவுடன் சுமார் 25,500 கோடி ருபாய் மதிப்பில் நான்கு போர் கப்பல்களை வாங்க இந்தியா கையெழுத்திட்டது. ஒரே ஒப்பந்தமாக முடிக்காமல் மூன்று தடவையாக ரஷ்யாவுடன் கையெழுத்திட்டுள்ளது. முழுமையாக இந்த ஒப்பந்தத்தை பார்க்கும் போது பழைய ரக போர் கப்பல்களை அதிக விலைக்கு மீண்டும் இந்தியாவின் தலையில் கட்டியுள்ளது ரஷ்யா, தற்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில் உள்ள தல்வார் ரக போர் கப்பல்களை விட அதி நவீன ஷிவாலிக் ரக போர்கப்பல்களை மும்பையை சேர்ந்த மசகான் நிறுவனம் பாதி விலைக்கு கட்டி தந்துள்ளது. அதுவும் நவீன இஸ்ரேலிய மற்றும் ரஷ்ய ராடர்களுடன்.

இந்தியா ஏற்கனவே ஆறு தல்வார் ரக போர் கப்பல்களை பயன்படுத்தி வருகிறது, 1997-இல் முதலில் ஒப்பந்தம் போடப்பட்டது, சுமார் 1 பில்லியன் டாலர் தொகைக்கு மூன்று கப்பல்கள் வாங்க ஒப்பந்தம் போடப்பட்டது, இந்த மூன்று கப்பல்களும் 2003 இறுதியில் படையில் சேர்க்கப்பட்டது. அதன் பிறகு மீண்டும் 2006-இல் மேலும் மூன்று தல்வார் ரக போர் கப்பல்களை வாங்க சுமார் 1.4 பில்லியன் டாலர் தொகைக்கு ஒப்பந்தம் போடப்பட்டு, கப்பல்கள் 2013 வாக்கில் படையில் இணைக்கப்பட்டது.

இந்த விலை உயர்வுக்கு கடைசி மூன்று கப்பல்களிலும் பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டது மற்றும் சாதாரண விலை உயர்வு காரணம் கட்டப்பட்டது, எனினும் அது ஒத்துக்கொள்ள வேண்டிய விஷயம் தான்.

இரண்டாவது ஒப்பந்தம் போட்ட நேரத்தில் தான் மும்பையை சேர்ந்த மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் 1 பில்லியன் டாலர் தொகைக்கும் குறைவாக தல்வார் ரக போர் கப்பல்களை விட நவீன ஷிவாலிக் ரக போர் கப்பல்களை கட்டியது. ஆனால் எவ்வித காரணமும் கூறாமல் வெறும் மூன்று கப்பல்களோடு நிறுத்திவிட்டது கப்பல் படை.

தல்வார் ரக போர் கப்பல்களை காட்டிலும், திறனில் அதி உன்னதமாகவும் அதிக ஏவுகணைகளையும் ஷிவாலிக் ரக போர் கப்பல்கள் கொண்டுள்ளது. ஆனால் அதே ரக கப்பல்களை மேலும் அதிகமாக வாங்காமல் நேரடியாக அடுத்த தலைமுறை கப்பல்களை வாங்க போவதாக அறிவித்தது.

இது நல்ல முடிவு என்றாலும், மிக காலம் கடத்தி 2017 டிசம்பரில் ஒரு கப்பல் கட்ட மசகான் நிறுவனத்துக்கும் , நவம்பர் 2018-இல் கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் நிறுவனத்துக்கும் அனுமதியளித்தது அரசு. இந்த கப்பல்கள் 2023 வாக்கில் படையில் சேரும். நவீன ஷிவாலிக் அல்லது  P17 A என்று அழைக்கப்படும் இந்த கப்பல்கள் ஒவ்வொன்றும் சுமார் 1 பில்லியன் டாலர் மதிப்புடையவை. இந்த P17A  திட்டத்தின் கீழ் சுமார் 7 கப்பல்களை வாங்க கப்பல் படை திட்டமிட்டுள்ளது.

இந்த கப்பல்கள் நவீன பாரக் 8 ஏவுகணைகள், இஸ்ரேலிய ராடார்கள் மற்றும் இந்திய மின்னணு பொருட்களுடன் கட்டப்படும். ஆனால் வடிவமைப்பு நவீன ஐரோப்பிய கப்பல்களுக்கு ஈடாக இருக்கும். கப்பல் கட்டும் கொல்கத்தாவை சேர்ந்த கார்டன் ரீச் நிறுவனம் இத்தாலியை சேர்ந்த பின்காண்டீரி நிறுவனத்தின் உதவியுடன் கப்பலை வடிவமைத்துள்ளது. ஆனால் மசகான் நிறுவனம் யாருடன் கூட்டணி வைத்துள்ளது என்பது குறித்த தகவலை வெளியிடவில்லை.

இப்படி நவீன உள்நாட்டு உற்பத்தியில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பழைய ரக போர் கப்பல்களை வாங்க எதற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போட்டுள்ளது அரசு என்பது தெரியவில்லை. அது குறித்த தகவல்களை பார்க்கையில்,

ரஷ்ய கப்பல் படைக்கு அந்நாட்டின் யாந்தர் கப்பல் கட்டும் நிறுவனம் சுமார் ஆறு அட்மிரல் கிரிகோரோவிக் போர் கப்பலைகளை கட்ட 2010-இல் ஆயத்தமாகி முதல் மூன்று கப்பல்களை 2015 வாக்கில் ரஷ்ய கப்பல் படைக்கு கொடுக்கிறது. அதே நேரம் மேலும் இரண்டு கப்பல்கள் ஏறத்தாழ கட்டுமான முடிவில் இருக்கிறது. 2014-இல் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை படைபலத்தையும் அணு ஆயுத பலத்தையும் காட்டி அபகரித்தது ரஷ்யா. இதனால் மேற்கொண்டு ரஷ்ய கப்பல்களுக்கு எஞ்சின்களை வழங்கப்போவது இல்லை என்று உக்ரைன் அறிவித்தது. இதனால் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் இருந்த இரண்டு கப்பல்கள் எஞ்சின் இல்லாமல் கேட்பாரற்று கிடந்தது.

மேலும் கப்பல் வடிவமைப்பில் பெரிய மாறுதல்களை செய்தால் தான் வேறு மாடல் எஞ்சின்களை பொருத்த முடியும், அதற்கு அதிக அளவில் செலவு ஏற்படும், அதற்கு பேசாமல் கப்பல் கட்டுவதையே நிறுத்தி விடலாம்.

இந்த நிலையில் தான் இந்த எஞ்சின் இல்லாத கப்பல்களை இந்தியாவில் தலையில் கட்ட தீர்மானித்தது ரஷ்யா, அதோடு இந்தியாவுக்கு இந்த எஞ்சின்களை தர உக்ரைனுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை,

ஆனால் ரஷ்யாவுக்கு உபயோகம் இல்லாத இந்த கப்பல்களை குறைந்த விலைக்கு வாங்கி பின்பு இந்தியாவில் வைத்து உக்ரைன் உதவியுடன் எஞ்சின்களை பொருத்தலாம். ஒரு கப்பலுக்கு நான்கு எஞ்சின்கள் தேவை, ஒரு எஞ்சின் விலை வெறும் 65 கோடி ருபாய் தான்.

ஆனால் நடந்த விஷயமே வேறு, இந்தியாவின் தலையில் இந்த கப்பல்களை கட்டி, அதிக தொகையை வசூலித்துள்ளது ரஷ்யா. அதை ஒரே நேரத்தில் செய்யாமல் இரு மாதத்தில் சுமார் மூன்று ஒப்பந்தங்களாக போட்டுள்ளது. இதன் மூலம் ஒப்பந்த விலை குறைவாக தெரிவதோடு, இது குறித்து யாரும் அதிகம் பேசமாட்டார்கள் என்பதும் அரசின் நம்பிக்கை. ஒப்பந்தம் எவ்வாறு போடப்பட்டுள்ளது என்றால்.

அக்டோபர் 23-இல் ரஷ்யாவுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தில், யாந்தர் கப்பல்கட்டும் தளத்தில் கேட்பாரற்று கிடைக்கும் இரண்டு அட்மிரல் கிரிகோரோவிக் போர் கப்பல்கள் இந்தியாவுக்கு கொடுக்கப்படும். இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 8000 கோடி ருபாய். இது நல்ல லாபகரமான ஒப்பந்தம் தான். ஆனால் ரஷ்யா இதற்கிடையில் தான் அதன் லாபத்தை பார்த்துள்ளது, அப்படியா, இல்லை இந்தியாவாக சென்று வேண்டுமென்றே பணத்தை அடுத்த ஒப்பந்தத்தில் கொடுத்துள்ளதா என்பது விளங்கவில்லை.

மேற்கொண்டு இரண்டு அட்மிரல் கிரிகோரோவிக் ரக கப்பல்களை கட்ட கோவா கப்பல் கட்டும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது யாந்தர் நிறுவனம். கப்பலை எப்படி கட்டுவது வடிவமைப்பது மற்றும் உதவிகளுக்காக சுமார் 3500 கோடி ரூபாய்க்கு கடந்த நவம்பர் 20-இல் ஒப்பந்தம் போட்டது, அதன் படி மேலும் இரண்டு போர் கப்பல்களை கோவா கப்பல் கட்டும் நிறுவனம் கட்டும். இந்த இரண்டு கப்பல்களை கட்ட கோவா கப்பல் கட்டும் நிறுவனம் கேட்கும் தொகை 13,000 கோடி ரூபாய். கூட நான்கு கப்பல்களுக்கு சேர்த்து எஞ்சின் விலை 1000 கோடி ருபாய்.

இதில் விஷயம் என்னவென்றால் அட்மிரல் கிரிகோரோவிக் ரக போர் கப்பலும் தல்வார் ரக போர் கப்பலும் ஒரே தொழில்நுட்பம் தான். ரஷ்யாவில் அதன் பெயர் அட்மிரல் கிரிகோரோவிக் , இந்தியாவில் அதன் பெயர் தல்வார் ரக போர்க்கப்பல், அவ்வளவு தான்.

ஒட்டு மொத்தமாக நான்கு போர் கப்பல்களுக்கு சுமார் 25,000 கோடி ரூபாயை செலவளித்துள்ளது இந்திய அரசு, அதுவும் 1997-களில் வடிவமைக்கப்பட்ட கப்பலுக்கு. எளிதாக அதன் விலைப்பட்டியலை பார்த்தால்

1. கட்டி முடிக்கப்பட்ட இரண்டு கப்பலுக்கு – 8000 கோடி ருபாய்
2. இந்தியாவில் இரண்டு கப்பலை கட்ட தொழில்நுட்ப உதவி – 3500 கோடி ருபாய்
3. இரண்டு கப்பலை கட்ட கோவா நிறுவனத்துக்கு – 13,000 கோடி
4. உக்ரைனிலிருந்து என்ஜின்களுக்கு – 1000 கோடி ருபாய்

ஆக மொத்தம் சுமார் 25,500 கோடி ருபாய் அல்லது 3.6 பில்லியன் டாலர்.

சொல்லப்போனால் ஒரு கப்பலுக்கு சுமார் 6250 கோடி ருபாய், இதை விட நவீன ரக ஷிவாலிக் போர் கப்பல் ஒன்றின் விலை 2300 கோடி ருபாய், ஷிவாலிக்கை விட அதி நவீன P17 A போர் கப்பலுக்கு 7200 கோடி ருபாய்.

ரபேல் போர் விமானத்தில் ஊழல் என்று அலறும் காங்கிரஸ், ரஷ்யாவுடன் ஒப்பந்தங்கள் போடும் போது அது குறித்து வாய் திறப்பதே இல்லை. காரணம் ரஷ்யா அந்த அளவுக்கு இந்திய அரசியல் கட்சிகளில் செல்வாக்கு வைத்துள்ளது.

கூடவே ரஷ்ய நாட்டுடன் செய்து கொள்ளும் ஒப்பந்தங்களில் அரசியல் கட்சிகளுக்கு நல்ல லாபம் வேறு, விலை குறைந்த ஆயுதங்களை அதிக விலைக்கு விற்கும். ஆனால் போதிய தொகையை வசூலித்துவிட்டு மீதியை திரும்ப அரசியல் கட்சிகளுக்கும் பாதுகாப்பு படையின் அதிகாரிகளுக்கு திரும்ப வழங்கும். சட்டப்படி இரு நாட்டு சட்டமும் ஒன்றும் செய்ய இயலாது.

கேள்வி கேட்பார் யாருமில்லை.