ரஷ்யாவுடனான ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலக அமெரிக்கா முடிவு

ரஷ்யாவும் அமெரிக்காவும் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் படி இரு நாடுகளும் 500 கிலோமீட்டர் முதல் 5500 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் தரையிலிருந்து ஏவ வல்ல ஏவுகணைகளை தயாரிக்க கூடாது என 1987 -இல் இரு நாடுகளும் பரஸ்பரம் ஒத்துக்கொண்டு அது போன்ற இடைத்தர தூரம் செல்லும் ஏவுகணை தயாரிப்பை கைவிட்டன. ஆனால் கப்பல் மற்றும் வானிலிருந்து இது போன்ற ஏவுகணைகளை வீச எந்த தடையும் இல்லை, தற்போது இந்த ஒப்பந்தத்தை மீறி ரஷ்யா தரையிலிருந்து ஏவ வல்ல இடைத்தர ஏவுகணைகளை தயாரித்து அதை படைகளில் சேர்த்து விட்டது என்பதை அமெரிக்கா ஆதாரத்துடன் நிரூபித்து விட்டதால் , அமெரிக்காவும் இது போன்ற ஏவுகணை தயாரிப்பை துவங்க மேற்கூறிய இந்த ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

ராணுவ வாகனங்கள் மூலம் எளிதில் கொண்டு செல்லவும் மறைத்து வைத்து திடீரெனெ தாக்கவும் இது போன்ற ஏவுகணைகள் பயன்படுத்தப்படலாம் என்று அஞ்சிய அமெரிக்க மற்றும் ரஷ்ய நாடுகள் பரஸ்பரம் சுமார் 1500 இது போன்ற ஏவுகணைகளை 1987 உடன்படிக்கையின் படி அழித்தனர். ஐரோப்பிய எல்லைகளில் இரு நாடுகளும் குவித்து வைத்திருந்த இது போன்ற ஏவுகணைகளால் உலகம் அணு ஆயுத தாக்குதலின் விளிம்பில் இருந்தது. அதை தடுத்து கால அளவை நீடிக்கவே இந்த உடன்படிக்கை அமெரிக்காவால் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் இது ரஷ்யாவுக்கு தற்போது எந்த பலனையும் தராது என்று 2014-இல் இடைத்தர தூரம் செல்லும் தரையிலிருந்து தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்க அதிபர் புதின் உத்தரவிட்டார். இதை கண்டித்த அப்போதைய அமெரிக்கா அதிபர் ஒபாமா ஐரோப்பிய தலைவர்களின் தலையீட்டால் மவுனம் காத்தார். அமெரிக்கா உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பட்சத்தில் ரஷ்யாவுக்கு எதிராக மீண்டும் ஆயுத போட்டியில் ஈடுபடும் என்று ஐரோப்பிய தலைவர்கள் அஞ்சினார்கள்.

ஆனால் தற்போது இரண்டு தொகுதிகள் நோவதார் காலிபர் ஏவுகணைகளை ஏற்கனவே  ரஷ்யா தனது படைகளில் இணைத்து விட்டது. இவற்றின் தாக்கும் தூரம் சுமார் 3000 கிலோமீட்டர் வரை இருக்கும் என்று அமெரிக்க மற்றும் மற்ற பாதுகாப்பு நிபுணர்களும் கருதுகிறார்கள். இந்த ஏவுகணை ரஷ்யா தனது கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிகளில் பயன்படுத்தும் காலிபர் ஏவுகணையின் மற்றொரு வடிவம். சிரியாவில் தொடர்ச்சியாக இந்த ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இதில் சுமார் 1 டன் அளவு வெடி பொருளை சுமந்து செல்ல முடியும். அணு குண்டு அல்லது மற்ற வெடி பொருளையோ இது பயன்படுத்தும்.

அதிபர் ட்ரம்ப் கூறுகையில் ரஷ்யா தொடர்ந்து பல உடன்படிக்கைகளை மீறி வருகிறது, ரஷ்யா உடன்படிக்கைகளை மீறும் போது அமெரிக்கா இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது என்றார். இது புதிய ஆயுத போட்டியை ஐரோப்பிய எல்லைகளில் உருவாக்க வழிவகை செய்யும் என உலக பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

ஆனால் அதிபர் ட்ரம்பின் இந்த முடிவு சீனாவையும் தனது கட்டுக்குள் கொண்டுவரும் யுக்தியாக இருக்கலாம் என்றும் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சீனா தொடர்ந்து இடைப்பட்ட தூரம் வரை செல்லும் ஏவுகணைகளை தயாரித்து வருகிறது, இது சீன எல்லையில் உள்ள அமெரிக்காவின் நேச நாடுகளான இந்தியா தைவான் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறது. அதோடு சீனாவுடன் இதுவரை இல்லாத அளவு மிக கடினமாக அமெரிக்கா நடந்து கொண்டு வருகிறது. சீனாவின் ஆயுத உற்பத்தியையும் அதின் ராணுவ படைகளின் தாக்கும் திறனை கட்டுக்குள் கொண்டு வரவும் அமெரிக்கா விரும்புவதாக பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சீனாவையும் ரஷ்யாவையும் ஒரே கூட்டில் கொண்டு வந்து இரு நாடுகளின் குறுகிய மற்றும் இடைப்பட்ட தூர ஏவுகணை தயாரிப்பை நிறுத்துவதன் மூலம் இரு நாடுகளுமே தங்களது எல்லையில் உள்ள நாடுகளை மிக குறுகிய கால அளவில் மிக கடுமையாக தாக்காது. 500 கிலோமீட்டருக்கு குறைவான ஏவுகணைகள் மூலம் மட்டுமே தாக்கும் போது அதற்கு மேல் தூரம் உள்ள இலக்குகள் கொஞ்சம் நேரம் தாக்கு பிடிக்கும், அதற்குள் அமெரிக்கா தனது விமானப்படை மூலம் முன்னேறும் ரஷ்யா அல்லது சீன படைகளை தடுத்து நிறுத்தும். இதன் மூலம் ஐரோப்பிய மற்றும் இந்திய எல்லைப்பகுதிகளில் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் ரஷ்யா மற்றும் சீனாவால் தாக்க முடியாது.

ட்ரம்பின் இந்த முடிவை பல ராணுவ வல்லுநர்கள் வரவேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.