ரபேல் விமான ஒப்பந்தம், ஊழல் உள்ளதா இல்லையா

திடீரென காங்கிரசால் கையிலெடுக்கப்பட்டு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு விஷயம் ரபேல் போர் விமான ஒப்பந்தம், முக்கியமாக அவர்கள் கூறும் காரணங்களாக 600 கோடி பெறுமானமுள்ள போர் விமானத்தை 1600 கோடி ரூபாய்க்கு வாங்கியது, அதோடு 30,000 கோடி பெறுமான முதலீட்டை அனில் அம்பானிக்கு வழங்க பிரதமர் பரிந்துரை செய்தது, இது இரண்டுமே முக்கிய காரணமாக இருந்தாலும் அம்பானி விமானம் தயாரிக்க போகிறார், அரசு நிறுவனமான HAL புறம் தள்ளப்பட்டது, மாபெரும் ஊழல் என்று பலரும் அவர்களுக்கு விருப்பம் போல பேசுகிறார்கள். ஆனால் உண்மை நிலவரம் கொஞ்சம் வேறு தான்,

மற்ற ஒப்பந்தங்களை விட பாதுகாப்புத்துறை ஒப்பந்தங்கள் கொஞ்சம் சிக்கலானவை. அதோடு ஒப்பந்தம் ஒரு நிறுவனத்தோடு மட்டும் நின்று விடாது, மிக வேகமாக வளர்ந்து வரும் பாதுகாப்பு துறையில் நவீன ஆயுதங்களோடு போருக்கு எப்போதுமே தயார் நிலையில் இருக்க ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் படை கருவிகளை கூராக்க வேண்டியுள்ளது. இனி மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை பார்க்கலாம்.

600 கோடி பெறுமானமுள்ள விமானம் எப்படி 1600 கோடி என்று ஆனது,

குறுக சொன்னால் வெறும் விமானத்தின் விலை 670 கோடி ரூபாய் தான், இதை நாடாளுமன்றத்தில் அமைச்சர் சுபாஷ் பாமரோ தெரிவித்தார். இது ஒப்புக்கொள்ளும் விலை தான், டாலர் விலை ஏற்றம் மற்றும் சில காரணங்களால் சுமார் 70 கோடி வரை விலை அதிகரித்துள்ளது. உலக அளவில் ஒப்பீட்டளவில் பார்த்தால் இந்த விலை சரியாக தான் உள்ளது. இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்.

புதிதாக இது குறித்து படிப்பவர்கள் உடனே கணக்கிடுவது 36×670 என்றால் வெறும் 25,000 கோடி ரூபாய் தானே வருகிறது, ஆனால் மோடி போட்ட ஒப்பந்தம் சுமார் 60,000 கோடி ரூபாய் அல்லவா. இங்கு சில விஷயங்களை புரிந்து கொள்ள வேண்டும், வெறும் போர் விமானம் போரில் பங்கு கொள்ளாது. 670 கோடி ரூபாய்க்கு வெறும் போர் விமானம் தான், அதாவது  பல்லும் நகங்களும் இல்லாத சிங்கம் மட்டுமே. ஏவுகணைகள், குண்டுகள், உளவு பார்க்கும் கருவிகள் ஆகியவற்றுக்கு மேலும் அதிக பணம் நாம் கொடுக்க வேண்டும்.

ரபேல் போர் விமானம் சுமார் ஆறு ஏவுகணைகள், ஆறு 250 கிலோ குண்டுகள் அதோடு ஒரு உளவு பார்க்கும் கருவியையும் எடுத்து செல்லும். அந்த ஆறு ஏவுகணைகள் மட்டுமே சுமார் 120 கோடி ரூபாய்க்கு மேல் வரும், உளவு பார்க்கும் கருவி ஒன்றின் விலை சுமார் 100 கோடி ரூபாய் வரை இருக்கும். ஆக ஒரு முழுமையடைந்த ரபேல் விமானம் சுமார் 1000 கோடி ருபாய் வரை ஆகிறது. இது மிக எளிதான கணக்கு தான்.

சிறிய உதாரணமாக இதற்கு மிராஜ் நவீனப்படுத்தும் ஒப்பந்தத்தை கூறலாம், 51 பழைய விமானங்களை நவீனப்படுத்த சுமார் 11,000 கோடி ரூபாவும், வெறும் வான் தாக்கும் ஏவுகணைகள் வாங்க சுமார் 6600 கோடி ரூபாவும் செலவிட்டது இந்திய விமானப்படை.

இன்னொன்றும் கூறலாம், தற்போது படையில் சேர்க்கப்பட்டுள்ள அதி நவீன ஸ்கார்பியன் நீர்மூழ்கி கப்பலுக்கு இதுவரை புதிய டார்ப்பீடோக்கள் வாங்கப்படவில்லை. சுருக்கமாக சொன்னால் பல்லும் நகமும் இல்லாத சிங்கம். இந்த நிலையில் தான் படையின் பாதி ஆயுதங்கள். துப்பாக்கிகளுக்கு குண்டு இல்லை என்று முன்னாள் ராணுவ தளபதி VK சிங் சும்மாவா சொன்னார் என்று யோசித்து பார்க்க வேண்டும்.

மோடி போட்ட ஒப்பந்தம் வெறும் விமானம் மற்றும் ஆயுதங்களோடு நின்றுவிடவில்லை, இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் இரு விமான தளங்களை நவீனப்படுத்தவும் ஒரு பராமரிக்கும் மற்றும் ரிப்பேர் செய்யும் இடத்தை கட்டவும் டஸ்ஸால்ட் ஒத்துக்கொண்டுள்ளது. மேற்கு வங்கத்திலுள்ள ஹசிம்ரா மற்றும் ஹரியானாவின் அம்பாலாவிலுள்ள விமான தளங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு வேலைகள் நடைபெற்று வருகிறது. அம்பாலாவில் உள்ள விமான தளம் நல்ல நிலையில் தான் உள்ளது, ஆனால் ஹசிம்ரா விமான தளமோ மிக பாழடைந்த நிலையில் உள்ளது. இதை நவீன தலைமுறை விமானங்கள் பயன்படுத்தும் வகையில் மாற்றம் செய்யப்போகிறது டஸ்ஸால்ட். இரு விமான தளங்களையும் கூகுள் மேப்பில் பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இதோடு 10 வருடங்களுக்கான பராமரிப்பு செலவையும் டஸ்ஸால்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. அதாவது எந்த நேரமும் 75% விமானங்கள் பறப்பதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதே. இதற்கான முழு பொறுப்பும் டஸ்ஸால்ட் தான். உதிரி பாகங்கள் இல்லை ஏரி பொருள் இல்லை விமானம் ரிப்பேர் அடைந்துள்ளது என்று கூற இயலாது.

முக்கியம் என்னவென்றால், விமானம் வாங்குவது மட்டும் போதாது அது எந்நேரமும் போர் செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும். முன்பு ஒரு தடவை தணிக்கை குழு கூறும் போது இந்திய விமானப்படையின் 250 சுகோய் போர் விமானங்களில் வெறும் 90 சுகோய் விமானங்களே செயல்பாட்டில் உள்ளது மற்றவை உதிரி பாகங்கள் இல்லாமல் தளத்தில் ஓரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வெறுமனே பணம் கொடுத்து விமானத்தை வாங்கிவிட்டு அதை காட்சிப்பொருளாக வைப்பதா.

முந்தைய ஒப்பந்தங்கள் இப்படித்தான், முதலில் விமானம் வாங்க ஒப்பந்தம் போடுவார்கள், பிறகு ஆயுதம் வாங்க, பிறகு உதிரி பாகங்கள் வாங்க, இப்படி தனி தனியே ஒப்பந்தம் போடும் போது சாதனங்கள் குறித்த நேரத்தில் வந்து சேராது, முன்பு விமான பராமரிப்பு பணிகளை விமானப்படையும் மத்திய அரசு நிறுவனமான HAL-ம் செய்து கொண்டிருந்தது. விமானத்தின் பகுதி பொருட்கள் ரஷ்யாவிலிருந்து வரும், அதை பொருத்தி விமானப்படைக்கு HAL வழங்கும், பிறகு பராமரிப்பு மற்ற வேலைகள் எல்லாமே விமானப்படையும் HAL-ம் தான், இதில் உதிரி பாகங்கள் இல்லை, HAL ஆட்கள் சரியாக வேலை செய்யவில்லை இது போன்ற காரணங்களினால் மூன்றில் இரண்டு விமானங்கள் பறக்காது.

இந்த பிரச்னையை சமாளிக்கவே பராமரிப்பு ஒப்பந்தம், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் இதை அமெரிக்காவிடம் செய்து கொண்டது கப்பல் படையும் விமானப்படையும், இந்திய கப்பல் படை தற்போது அதிகம் பயன்படுத்தும் P8I உளவு விமானம் விமானப்படை பயன்படுத்தும் C17, C130J ஆகிய விமானங்கள் எல்லாமே அமெரிக்காவுடன் 10 வருட பராமரிப்பு ஒப்பந்தத்தில் உள்ளது. இந்த விமானங்கள் எப்பதுமே பறப்பதற்கு தயார் நிலையில் தான் இருக்கும். பராமரிப்பு ஒப்பந்தம் இல்லை என்றால் இந்த வேலையை HAL நிறுவனங்களும் படை அதிகாரிகளும் தான் கையாள வேண்டும், அப்படி ஆகும் போது பாதிக்கு மேல் விமானங்கள் காட்சி பொருளாக தரையில் தான் இருக்கும்.

இதற்கு உதாரணமாக கடந்த வருடம் சுமார் 6100 கோடி ரூபாய்க்கு வெறும் 41 ஹெலிகாப்டர்களை வாங்கியது ராணுவம், இதை கொடுத்தது வேறு யாரும் இல்லை மத்திய அரசு நிறுவனமான HAL தான். ஒரு ஹெலிகாப்டரின் விலை ஏறக்குறைய 150 கோடி ருபாய், ஆனால் உண்மையாக ஒரு துருவ் ஹெலிகாப்டரின் விலை 40 அல்லது 50 கோடியே, ஏன் இவ்வளவு விலை என்றால் இங்கும் ஹெலிகாப்டர் தயாரிக்கும் நிறுவனத்துடன் 10 வருட பராமரிப்பு ஒப்பந்தத்தில் இந்திய ராணுவம் கையெழுத்திட்டுள்ளது, அதாவது 75%ஹெலிகாப்டர் எப்போதுமே பறக்க தயார் நிலையில் இருக்கும்.இதற்கு உத்திரவாதம் ஹெலிகாப்டரை தயாரித்த HAL நிறுவனம்,

இதுபோல தான் டஸ்ஸால்ட் நிறுவனத்துடன் 10 வருட பராமரிப்பு ஒப்பந்தமும்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் கூடவே இந்திய விமானப்படை பயன்படுத்தும் இஸ்ரேலிய தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ரபேல் விமானங்கள் தொடர்பு கொள்ள விஷேஷ கருவிகளை இந்தியாவிற்கென செய்யப்படும் ரபேல் விமானத்தில் பொருத்த வேண்டும். அந்த கருவிகளை இஸ்ரேலிடமிருந்து டஸ்ஸால்ட் வாங்கி இந்திய ரபேல் விமானத்தில் பொருத்தும், அதற்கும் பணம் செலவாகும்.

இது போன்ற காரணங்களினாலேயே 600 கோடி பெறுமானமுள்ள விமானம் 1600 கோடியாக அதிகரித்துள்ளதாக ஒரு பிம்பம் மக்கள் மத்தியில் பரவியுள்ளது. காரணம் யாருமே கட்டுரையின் உள்ளே என்ன உள்ளது என்று படிக்க மாட்டார்கள், தலைப்போடு போய் விடுவார்கள்.

அடுத்ததாக 30,000 கோடி பெறுமானமுள்ள முதலீடு அம்பானிக்கு வழங்கப்பட்டது.

பாதுகாப்பு துறையில் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படும் போது சம்பந்தப்பட்ட நாடு அல்லது நிறுவனம் ஒப்பந்தத்தில் பாதி பணத்தை இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும், முந்தய காலங்களில் அது 30 சதவீதமாக இருந்தது, 2016- முதல் 50 சதவீதம். அதன் அடிப்படையில் சுமார் 60,000 கோடி பெறுமானமுள்ள இந்த ரபேல் ஒப்பந்தத்தை பெற்ற டஸ்ஸால்ட் மற்றும் சில பிரஞ்சு நிறுவனங்கள் சுமார் 30,000 கோடி பெறுமானமுள்ள தொகையை இந்திய நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும். காங்கிரசின் குற்றச்சாட்டு என்னவென்றால் அந்த மொத்த 30,000 கோடி ரூபாவும் அம்பானியின் DRAL Dassault Reliance Aerospace Limited – நிறுவனத்துக்கு செல்கிறது என்பது தான். இங்கு இருக்கும் குறைகளை பார்க்கலாம்.

டஸ்ஸால்ட் விமானம் தயாரித்தாலும் அந்நிறுவனமும் ஒரு சில பிரஞ்சு நிறுவனங்களை சார்ந்தே உள்ளது, முக்கியமாக எஞ்சின் தயாரிக்க செனிக்மா, ராடார் தயாரிக்க தேல்ஸ், ஆயுதங்களுக்கு MBDA மற்றும் விமானத்தின் கம்ப்யூட்டர் மற்றும் மென்பொருளுக்கு சகேம், அதோடு மேலும் பல சிறிய சிறிய நிறுவனங்கள் உதிரி பாகங்களுக்கு. மொத்தத்தில் மேற்கண்ட நிறுவனங்களிடமிருந்து பொருட்களை வாங்கி பொருத்தும் வேலையை செய்வதே டஸ்ஸால்ட் நிறுவனத்தின் வேலை.

ஆக டஸ்ஸால்ட்டோடு சேர்ந்து ஒப்பந்தம் செய்து கொண்டவை மேற்கண்ட மற்ற பிரஞ்சு நிறுவனங்களுமே,

இங்கு தான் காங்கிரஸ் விளையாடியுள்ளது பிரஞ்சுக்கு டஸ்ஸால்ட் என்பது போல இந்தியாவுக்கு HAL நிறுவனம், ஆனால் HAL நிறுவனத்தை தேர்வு செய்யாமல் அம்பானியின் DRAL நிறுவனத்தை அதுவும் புதிதாக துவங்கப்பட்ட நிறுவனத்தை எப்படி தேர்வு செய்ய முடியும், ஆகவே இது மாபெரும் ஊழல் என்று முடிவு செய்துவிட்டது.

உதாரணமாக ஆப்செட் அல்லது மறுமுதலீடு நிறுவனத்தை தேர்வு செய்ய டஸ்ஸால்ட்டுக்கு முழு உரிமை உள்ளது. அதை அவர்கள் எங்கு வேண்டுமாலாலும் முதலீடு செய்யலாம். தகவல்கள் படி அம்பானியின் நாக்பூரில் உள்ள விமான பூங்காவை தேர்வு செய்து அவர்களோடு ஒரு நிறுவனம் ஆரம்பித்து டஸ்ஸால்ட் தயாரிக்கும் இன்னொரு பயணிகள் விமானமான பால்கன் விமானத்தின் உதிரி பாகங்களை நாக்பூரில் தயாரிக்கிறது அம்பானியின் DRAL நிறுவனம்.

இந்த ஒரு ஒப்பந்தத்தை தான் HAL நிறுவனத்துக்கு கொடுக்கவில்லை என்று காங்கிரஸ் குற்றம் சுமத்துகிறது, இந்த முதலீட்டு தொகை 30,000 கோடியா என்றால் நிச்சயமாக இல்லை, வெறும் 5000 கோடிக்கு உள் தான் இருக்கும்.

இங்கு ஒரு உதாரணத்தை கூற முடியும், முன்பு காங்கிரஸ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட P8 விமான ஒப்பந்தத்திலும் போயிங் நிறுவனம் இந்தியாவின் டாடா நிறுவனத்தை தெரிவு செய்து ஹெலிகாப்டர் உதிரி பாகங்களை தயாரித்து வருகிறது. டாட்டாவின் TASL நிறுவனமும் புதிய நிறுவனம் தான் ஏன் அவர்களுக்கு கொடுத்தார்கள், அரசு நிறுவனமான HAL-க்கு ஹெலிகாப்டர் தயாரிக்க தெரியாதா, அவர்கள் இதற்கு முன்பு ஹெலிகாப்டர் தயாரிக்கவில்லையா என்று நீங்கள் கேட்க வேண்டாம். அன்று போயிங் நிறுவனம் செய்தது பிறகு லாக்ஹீட் நிறுவனம் செய்தது, இப்போது டஸ்ஸால்ட் செய்கிறது, இப்போது மட்டும் ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி.

ஏற்கனவே கூறியது போல ரபேல் ஒப்பந்தத்தில் ரபேல் போர் விமானங்களுக்கு எஞ்சின்களை செய்யும் செனிக்மா நிறுவனம் தல் நிறுவனத்துடன் சேர்ந்து எஞ்சின் உதிரி பாகங்களை தயாரிக்கவுள்ளது, அதோடு மேலும் ஒரு மத்திய அரசு நிறுவனமான GRTE உடன் இணைந்து இந்தியா தயாரித்த காவேரி எஞ்சினை மேம்படுத்தி அதை உபயோகமுள்ளதகா மாற்றவுள்ளது. இந்த முதலீட்டு தொகை டஸ்ஸால்ட் ரிலைன்ஸ் செய்து கொண்ட தொகையை விட மிக அதிகம். இதை பேசுவோர் யாருமில்லை.

அதோடு தேல்ஸ் நிறுவனம் மத்திய அரசு நிறுவனமான பெல் நிறுவனத்துடன் இணைந்து ராடாரின் உதிரி பாகங்களை தயாரிக்கவுள்ளது, இதன் விலையும் டஸ்ஸால்ட் ரிலைன்ஸ் செய்து கொண்ட தொகையை விட மிக அதிகம்.

இது கூடவே, மற்ற தனியார் நிறுவனங்களான கோத்ரெஜ், மச் , மைனி , HCL, அஸ்த்ரா L&T நிறுவனங்களுடனும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் உள்ள பிரஞ்சு நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன.

ஆனால் இதை எல்லாம் மறைத்து மொத்த முதலீடும் அம்பானிக்கே வழங்கப்பட்டதாக பொய்யான தகவல் பரவி வருகிறது.

இதிலும் சந்தேகம் உண்டென்றால் கீழே கமெண்ட்டில் தெரிவிக்கலாம், பதில் கூற தயாராக உள்ளேன்.