டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகளை அமெரிக்காவிடமிருந்து வாங்க மத்திய அரசு முடிவு

தலைநகர் டெல்லியை எதிரிகளின் ஏவுகணை மற்றும் விமான தாக்குதலிலிருந்து பாதுகாக்க அமெரிக்க மற்றும் நார்வே நாட்டு கூட்டு தயாரிப்பில் உருவான அதி நவீன NASAMS 2 – Norwegian Advanced Surface to Air Missile System  என்கிற வான் பாதுகாப்பு ஏவுகணைகளை சுமார் 7000 கோடி ரூபாய் செலவில் வாங்க மத்திய பாதுகாப்பு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார், அமெரிக்காவிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படும் இந்த ஏவுகணைகள் ஏற்கனவே தலைநகரில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலின் ஸ்பைடர் ஏவுகணைகளுக்கு மாற்றாக இருக்கும்.

தலை நகரை தற்போது பாதுகாத்து வரும் ஸ்பைடர் ஏவுகணைகளும் அதி நவீன ஏவுகணைகளே, அவை நிறுவப்பட்டு சுமார் 5 அல்லது அதற்கும் குறைவான வருடங்களே ஆகும், மேலும் அவை இன்னும் சுமார் 10 ஆண்டுகள் வரை திறமையுடன் செயல்பட வல்லவை. இருப்பினும் திடீரென சுமார் 7000 கோடி ருபாய் செலவில் புதிய ஏவுகணைகளை வாங்க அரசு முடிவெடுத்திருப்பது ஆச்சர்யம் அளிக்கிறது.

குறிப்பாக இந்திய தயாரிப்பான ஆகாஷ் ஏவுகணை மற்றும் தற்போது தயாரிப்பு மற்றும் சோதனையில் இருக்கும் DRDO-வின் QR-SAM ஏவுகணை இவற்றின் மீது அரசு மற்றும் விமானப்படை எந்த அளவு நம்பிக்கை வைத்துள்ளது என்பதையே காட்டுகிறது. உண்மையில் இவை நம்பத்தகுந்த அல்லது நவீன ஏவுகணைகள் இல்லை என்றாலும் அவற்றை ராணுவம் மற்றும் விமானப்படை வசம் தள்ளிவிட்டு முக்கிய நகரங்களுக்கு மட்டும் அதி நவீன ஏவுகணைகளை வாங்குவது பாகுபாட்டையே காட்டுகிறது.

இருந்தாலும் டெல்லியில் தற்போது உள்ள ஸ்பைடர் ஏவுகணைகளை விமானப்படை தனது விமான தளங்களை பாதுகாக்க எடுத்துக்கொள்ளும், விமானப்படை தற்போது தனது தளங்களில் 1970-இல் வாங்கப்பட்ட பிச்சோரா ஏவுகணைகள் , ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் ஸ்பைடர் ஏவுகணைகள் இவற்றில் ஏதாவது ஒன்றை நிறுவி விமான தளங்களை பாதுகாத்து வருகிறது, தாக்குதல் அபாய நிலையை பொறுத்து ஏவுகணைகள் நிறுவப்பட்டுள்ளது, உதாரணமாக சீன எல்லை அருகே உள்ள சில ஓடுதளங்கள் மற்றும் விமான தளங்கள் ஸ்பைடர் ஏவுகணைகள் மூலமும் , பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள விமான தளங்கள் ஆகாஷ் ஏவுகணைகள் மூலமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது

மேற்கண்ட வான் பாதுகாப்பு ஏவுகணைகள் எல்லாமே தற்போது வாங்கபட உள்ள NASAMS 2  ஏவுகணைகளை விட பல தலைமுறைகள் பழையவை. இந்தியாவின் கண்ணோட்டத்தில் பார்த்தல் NASAMS 2 ஏவுகணை பல தலைமுறைகள் நவீனமானவை.

இந்த ஏவுகணைகள் தான் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை, ரஷ்ய எல்லை அருகே உள்ள நாடுகளான பின்லாந்து, லித்துவேனியா, நெதர்லாந்து , நார்வே போன்ற நாடுகளிலும் நிறுவப்பட்டுள்ளது. இவை அதி சிறந்த மற்றும் எவ்வித கடும் மாபெரும் வான் தாக்குதலையும் தடுத்து நிறுத்தும் வல்லமை பெற்றவை.

ஒரு NASAMS 2 ஏவுகணை தொகுதியில் 12 ஏவுகணை வீசும் வாகனங்கள் இருக்கும், ஒரு ஏவுகணை வீசும் வாகனத்தில் ஆறு அதி நவீன அமெரிக்கா தயாரிப்பான AMRAAM ஏவுகணை இருக்கும். இந்த ஏவுகணைகள் சுமார் 50 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்க வல்லவை, அதாவது தலைநகருக்கு வெளியே எதிரி ஏவுகணைகளையோ விமானங்களையோ பெரிய குண்டுகளையோ தாக்கி அழிக்கும். அதோடு ஒரு தொகுதி ஏவுகணை அமைப்பில் சுமார் 8 ராடார் மற்றும் ஒரு தொலை தூர காமிரா-வும் இருக்கும், ஒவ்வொரு ராடார் அமைப்பும் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் வரையும் சுமார் 25,000 அடி உயரம் வரையும் மிக துல்லியமாக இலக்குகளை கண்டறியும்

அதோடு தற்போது பெருகிவரும் ஆளில்லா சிறிய உளவு விமானங்களையும் கண்டுபிடித்து உடனே தகவல் அனுப்பவும் தேவைப்பட்டால் ஏவுகணைகளை அனுப்பி அழிக்கவும் செய்யும். இந்த ராடார்களை செயலிழக்க செய்வது மிக கடினம், அல்லது முடியாத காரியம்,

இவற்றை தலைநகரில் நிறுவும் போது , டெல்லியும் உலகின் தலை சிறந்த வான் பாதுகாப்பு ஏவுகணைகளை பெற்றுள்ள பட்டியலில் சேரும், இருந்தாலும் அதற்கு சில காலம் ஆகும்,

மேலும் இதற்கு இணையான உள்நாட்டு தயாரிப்பான QRSAM இன்னும் ஆரம்பகட்ட சோதனையிலேயே உள்ளது, அதோடு சோதனைகள் அனைத்திலும் வெற்றி பெற்றாலும் அதனால் NASAMS 2 திறனில் 10 சதவீதம் கூட வர முடியாது.

இந்தியா எத்தனை NASAMS 2 ஏவுகணை தொகுதிகளை வாங்கப்போகிறது என்பது குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை