ரஷ்யாவுக்கு ஆதரவான ஓட்டெடுப்பை புறக்கணித்த இந்தியா

முன்னாள் ரஷ்ய உளவாளியை இங்கிலாந்தில் வைத்து வேதியியல் ஆயுதம் மூலம் கொல்ல முயற்சித்தது ரஷ்யா. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட நோவிசோக் என்ற வேதியியல் ஆயுதம் மூலம் தான் கொலை முயற்சி நடந்துள்ளதாக இங்கிலாந்து ஆதாரங்களை சமர்பித்து ரஷ்யாவிடம் விளக்கம் கோரியிருந்தது, இது குறித்த கட்டுரை  (முன்னாள் ரஷ்யா உளவாளியை ரசாயன பொருள் கொண்டு கொல்ல முயற்சி, ரஷ்யா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு )ஏற்கனவே இங்கு பதியப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்கா, ரஷ்யாவை சேர்ந்த தூதுவர்களை தங்கள் நாடுகளிலிருந்து விலக்கி கொண்டது, ரஷ்யாவும் மேற்கூறிய நாடுகளின் தூதர்களை தனது நாட்டிலிருந்து வெளியேற உத்தரவிட்டது.

ஆனால் இந்த வேதியியல் ஆயுதம் குறித்த பயன்பாட்டை பற்றி ரஷ்யா முதலிலிருந்தே பல்வேறு குளறுபடியான தகவல்களை அளித்து வந்தது, இந்த விசாரணையின் போக்கை மாற்றிவிட சர்வதேச வேதி ஆயுத கட்டுப்பாடு அமைப்பில் ஒரு கோரிக்கையை முன்வைத்தது, அதாவது விசாரணையை முதலிலிருந்து துவங்கவும், ரஷ்யாவையும் விசாரணையில் சேர்த்துக்கொள்ளவும் கேட்டது. இது குறித்த ஓட்டெடுப்பு வேதி கட்டுப்பாட்டு அமைப்பில் (OPCW) நேற்று நடந்தது.

இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக சீனா ஈரான் உள்ளிட்ட நாடுகள் ஆறு நாடுகள் ஓட்டளித்தன, 15 நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக ஓட்டளித்து., இந்தியா உட்பட 17  உறுப்பு நாடுகள் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ள மறுத்துவிட்டன. இதனால் ரஷ்யாவின் வேண்டுகோள் வேதி ஆயுத கட்டுப்பாடு அமைப்பால் நிராகரிக்கப்பட்டது.

இந்தியா ஓட்டெடுப்பை புறக்கணித்தது பற்றி நெதெர்லாந்துக்கான இந்திய தூதுவர் வேணு ராஜமணி கூறுகையில், இங்கிலாந்தின் சாலீஸ்பரி நகரில் நடந்த வேதியியல் தாக்குதலை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், வேதி ஆயுதங்களை மனிதர்களுக்கு எதிராக பயன்படுத்துவதை இந்தியா ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார்.

சர்வதேச வேதி ஆயுத கட்டுப்பாடு அமைப்பு, வேதி ஆயுதங்களை நீக்க ஏற்படுத்தப்பட்ட அமைப்பு, அதோடு அவர்களின் பார்வையில் எல்லா நாடுகளின் வேதியியல் சம்பந்தமான ஆயுத பயன்பாடுகளும் இருக்க வேண்டும், அவர்களின் ஒழுங்கு முறைகளுக்கு அனைத்து நாடுகளும் கட்டுப்பட வேண்டும், எந்நேரமும் அவர்கள் சர்ச்சைக்குரிய வேதி பயன்பாட்டை குறித்து விசாரணை செய்ய முழு உரிமையையும் சுதந்திரமும் வழங்க வேண்டும் என்றும் ராஜமணி கூறினார்.

ஸ்க்ரிபால் கொலை முயற்சியை பொறுத்தவரை விசாரணை முடிவு வரும் வரை பொறுமை காக்க வேண்டியுள்ளதாகவும், விசாரணை ஆதாரங்களின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்காமல், ஓட்டெடுப்பை புறக்கணித்தது இந்திய ரஷ்ய உறவில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.