இந்திய சீன எல்லையில் படைகளை குவிக்கும் இந்தியா

சமீபத்தில் வெளியான செய்திகள் மூலம் இந்தியா சுமார் 48,000 வீரர்களை அருணாச்சல் மற்றும் அசாம் பகுதிகளில் இந்திய சீன எல்லைக்கு அருகே நகர்த்தியுள்ளது தெரிகிறது, அதோடு சுமார் 24,000 வீரர்களை தயார் நிலையிலும் வைத்துள்ளது. இந்த திடீர் படை குவிப்புக்கு கரணங்கள் எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், பூடான்-இந்திய-சீன எல்லைப்பகுதியான டோக்லாம் பகுதியில் சீனா தொடர்ந்து நிரந்தர ராணுவ கட்டுமானங்களையும், படைகளையும் தளவாடங்களையும் குவித்து வருவதே காரணம் என்று நம்பப்படுகிறது.

டோக்லாம் பகுதியில் இரு நாட்டு படைகளும் வெகு காலமாக சம நிலையை கடைபிடித்து வந்தன, ஆனால் இதற்கு மாறாக திடீரெனெ சீனா, பூடான் நாட்டு எல்லை வழியாக இந்திய நிலைக்கு அருகே வரை சாலைகளை அமைத்து புதிய ராணுவ பார்வை தளம் அமைக்க முயன்றது, இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டு இரு நாடுகளும் படைகளை குவிக்க துவங்கின.

ராணுவம் மட்டுமல்லாது, சீனா எல்லை அருகே உள்ள  தனது விமான தளங்களில் போர் விமானங்களையும்குவித்தது, இந்தியாவும் தனது விமான தளங்களில் போர் விமானங்களையும், அதிரடிப்படை வீரர்களையும் குவித்து சீனா எவ்வித அசம்பாவிதம் செய்தாலும் அதை தடுக்கும் நிலைக்கு தயார் நிலையில் இருந்தது.

73 நாட்கள் தொடர்ந்து வந்த இந்த பதற்றம் சீனா படைகளை விலக்கிய பிறகு தணிந்தது, இருந்தாலும் இரு நாட்டு படைகளும் எல்லைகளிலிருந்து படைகளை விலக்காமல், எல்லைக்கு அருகிலேயே தற்காலிக கூடாரங்கள் அமைத்து அங்கு தங்கி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

அதோடு செயற்கைகோள் படங்கள் தொடர்ந்து சீன நிரந்தர கட்டுமானங்கள் மற்றும் பீரங்கி மற்றும் தாக்கும் ஹெலிகாப்டர்களை எல்லைக்கு மிக அருகிலேயே நிலை நிறுத்தியதும் தெரியவந்தது.

இந்தியாவும் பதிலுக்கு எல்லைக்கு அருகே பாதுகாப்பு குழிகள் தோண்டியும், பழைய சாலைகளை புதுப்பித்தும் வருகிறது. அதோடு சிறிய வகை மோர்ட்டார்களாயும், கன ரக 40mm துப்பாக்கிகளையும் நிறுவி வருகிறது, இதன் மூலம் டோக்லாம் பகுதியில் சீனா தாக்க முயற்சித்தால் இந்தியா தற்காத்து கொள்வதோடு பதிலடியும் கொடுக்க முடியும். இருந்தாலும் டோக்லாம் பகுதியில் சீனாவில் கையே ஓங்கி உள்ளது.

டோக்லாம் பகுதியில் ஒரு மாபெரும் தாக்குதலை சீனா நடத்தினால், அப்பகுதியில் இந்தியாவினால் தாக்கு பிடிக்க முடியாது, அதோடு இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களை இந்தியாவிடமிருந்து பிரித்து விடும். இதனாலேயே டோக்லாம் பகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கோழியின் கழுத்து என்றும் பாதுகாப்பு வல்லுநர்களால் அழைக்கப்படுகிறது.

டோக்லாமில் சீனாவின் பலம் அதிகரித்து வருவதால் அதற்கு ஈடுகட்ட அருணாச்சல் மற்றும் அசாம் பகுதியில் பல்லாயிரக்கணக்கில் வீரர்களை குவித்து வருகிறது. அங்கு ஏற்கனவே நிலை நிறுத்த பட்டுள்ள படைகள் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது, அதோடு யூகிப்பதும் மிக கடினமாக உள்ளது.

ஆனாலும் தற்போதைய தகவல்கள் படி, திமாப்பூரை தலைமையாக கொண்ட 3-வது படைப்பிரிவு மற்றும் டெஸ்பூரை தலைமையாக கொண்ட 4-வது படைப்பிரிவின் நான்கு டிவிஷன் வீரர்களை எல்லைக்கு அருகே நகர்த்தியுள்ளது. அதோடு மேலும் இரண்டு டிவிஷன் வீரர்களை ராணுவ தளத்தில் தயாராகவும் வைத்துள்ளது. இந்த வீரர்கள் மலைப்பிரிவில் சண்டையிட சிறப்பு பயிற்சி பெற்றவர்கள். ஒரு டிவிஷன் படைப்பிரிவில் சுமார் 12,000 வீரர்கள் இருப்பார்கள். இப்படை வீரர்களின் ஆயுத பலம் மற்றும் தளவாடங்கள் குறித்த தகவல்கள் ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், சீனா டோக்லாம் பகுதியில் எந்த அசம்பாவிதத்தில் ஈடுபட்டாலும் அரை லட்சம் இந்திய வீரர்கள் அருணாச்சல் எல்லை வழியாக சீனாவுக்குள் ஊடுருவி தாக்குவரகள், அதுமட்டுமல்லாது சீனா டோக்லாமில் தொடர்ந்து போர் புரிந்தால், இந்தியாவும் சீனாவுக்குள் வேகமாக ஊடுருவி அருணாச்சல் பகுதியிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நிங்க்ச்சி நகரை இரு நாட்களில் கைப்பற்றும் என்பதிலும் ஐயமில்லை.

1962-இல் இந்தியா போருக்கு தயாராக இல்லை, அதோடு சீனா இந்தியாவை தாக்காது என்றும் சோவியத் ரஷ்யா உறுதி அளித்திருந்தத்த்து, ஆனால் சீனா திடீர் படைக்குவிப்பில் ஈடுபட்டு இந்தியாவை தாக்கியது, இதனால் குறைவான எண்ணிக்கையில் எல்லையில் இருந்த வீரர்கள் போர் என்று அறியும் முன்னரே உயிரிழந்தனர். ஆனால் தற்போது இந்தியா சீனாவின் எவ்வித தாக்குதலுக்கும் தயாராகவே உள்ளது, டோக்லாமில் சீனாவின் கை ஓங்கி உள்ள நிலையில் அருணாச்சல் பகுதியில் இந்தியாவின் கை ஓங்கி உள்ளது.

அதுமட்டுமல்லாது அரசு செய்திகளின் படி கடந்த வருடம் மட்டும் சுமார் 426 தடவை எல்லையில் இரு நாட்டு வீரர்களும் மோதல் நிலைக்கு வந்துள்ளனர். 2016-இல் இது போன்ற மோதல் போக்கு சுமார் 273 தடவை என்று அரசு கூறியுள்ளது.

அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவின் பலம் எல்லையில் மேலும் அதிகரிக்க உள்ளது, அமெரிக்காவிடமிருந்து வாங்கும் CH 47 கன ரக ஹெலிகாப்டர் மூலம் M777 155mm இலகு ரக அதிக திறனுள்ள ஆர்டில்லரிகளை மலை உச்சியில் நிலை நிறுத்த முடியும், இது ராணுவத்துக்கு அதிக பலத்தை கொடுக்கும், அதோடு ரபேல் விமானங்கள் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவுக்கு வர உள்ளது. ஒரு சுகுவாட் ரபேல் விமானங்கள் ஹசிம்ரா விமான தளத்தில் நிலை நிறுத்தப்படவுள்ளது. இது டோக்லாம் பகுதியிலிருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவிலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவுடன் எல்லையில் ஒரு சாதாரண போருக்கு இந்தியா எப்போதுமே தயார் நிலையில் உள்ளது, ஆனால் போரில் நாட்கள் நீள நீள சீனாவின் பலம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. ஆனால் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கொண்டுள்ள ராணுவ உறவுகளால், அந்த நாடுகள் இந்தியாவுக்கு உதவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.