பாகிஸ்தான் எல்லை அருகே புதிய விமான தளம் அமைக்க அரசு ஒப்புதல்

குஜராத் மாநிலத்தில் தீசா என்ற பகுதியில் விமானப்படைக்கு சொந்தமாக சுமார் 4000 ஏக்கர் நிலம் உள்ளது. அதோடு அதில் ஒரு சிறிய ஓடுபாதையும் உள்ளது, இது ஆங்கிலேயர் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.  தற்போது இது ஹெலிகாப்டர்களை மட்டும் பயன்படுத்தும் வகையில் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.  இந்த நிலத்தை பயன்படுத்தி அதில் பெரிய ஒரு விமான தளம் அமைக்க விமானப்படை சார்பாக பல வருடங்களாக கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

பாதுகாப்புதுறை அமைச்சரிடம் இதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்திய விமானப்படை அதிகாரிகள், இதை விரைவில் செயல்படுத்தவும் வலியுறுத்தினார். இதற்கு செவிசாய்த்த பாதுகாப்பு அமைச்சர், இந்த கோரிக்கையை பாதுகாப்பு கவுன்சிலுக்கு கொண்டு சென்றதோடு முதல் கட்டமாக விமானதளத்தில் வேலைகள் ஆரம்பிக்க சுமார் 1000 கோடி ரூபாயை பெற்று தந்துள்ளார்.

அதன் அடிப்படையில் விரைவில் விமானப்படைக்கு சொந்தமான இந்த இடத்தில் முதல்கட்ட வேலைகள் நடைபெறவுள்ளதாக விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மிக மோசமான நிலையில் உள்ள 1000  மீட்டர் நீள ஓடுபாதையை பெரிய சரக்கு விமானங்கள் தரை இறங்கும் வகையில் நீட்டிக்கவும், விமானங்களை நிறுத்த தற்காலிக ஷெட்டுகள் அமைக்கவும், அதோடு நிர்வாக கட்டிடங்கள் அமைக்கவும் இந்த தொகை செலவிடப்படும் .

பொதுவாக ஒரு விமான தளத்தை முறையாக கட்டி முடிக்க சுமார் 5000 கோடி முதல் 8000 கோடி வரை செலவாகும். குறிப்பாக வேலிகள் அமைப்பது, ராடார்கள் மற்றும் கட்டிட வேலைகள், எண்ணெய் கிடங்குகள், பராமரிப்பு கூடங்கள், அதோடு போர் விமானங்கள் நிற்க குண்டு துளைக்காத கான்க்ரீட் கூடாரங்கள்.

பிரான்ஸ் அரசின் உதவியுடன் தற்போது இரண்டு விமான தளங்களை மேம்படுத்தி வரும் விமானப்படை அதற்காக சுமார் 12,000 கோடி ருபாய் வரை செலவிடுவது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே பாகிஸ்தானை ஒட்டி குஜராத் மாநிலத்தில் மட்டும் மூன்று பெரிய விமான தளங்கள் உள்ளது, தீசா விமானதளமும் வேலைகள் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டால் குஜராத்தில் மட்டும் நான்கு விமான தளங்கள் இருக்கும்.

தீசா விமான தளம் எல்லையிலிருந்து சுமார் 130 கிலோமீட்டர் தொலைவிலும், நாழியா விமான தளம் 80 கிலோமீட்டர் தொலைவிலும், புஜ் விமான தளம் 120 கிலோமீட்டர் தொலைவிலும், ஜாம்நகர் விமான தளம் 200 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

இந்த மூன்று விமான தளங்களிலும், ஹெலிகாப்டர்கள், ஜாகுவார் , MiG 21 மற்றும் MiG 29 போர் விமானங்களும் உள்ளன, அதோடு கமாண்டோ ஆபரேஷன்களுக்காக HS 748 விமானமும் உள்ளது, இந்த HS 748 விமானம் கூடிய விரைவில் மாற்றப்பட்டு C 295 விமானமும்,MiG 21 விமானங்கள் மாற்றப்பட்டு புதிய போர் விமானமும் அங்கு நிலை நிறுத்தப்படும்.

இந்த விமான தளங்கள் பாகிஸ்தானின் கராச்சி ராணுவ நிலைகளையும் ஹைதராபாத் பகுதியில் உள்ள அரச கட்டமைப்புகளையும் போர் என்று வந்தால் மிக குறுகிய நேரத்தில் தாக்கி அழித்து விடும்.

இதுபோல ராஜஸ்தானிலும் பாலோதி என்ற இடத்தில் விமானப்படைக்கு சொந்தமாக இடம் உள்ளது, இங்கும் விமான தளம் அமைக்க விமானப்படை பல வருடங்களாக கேட்டு வருகிறது.