அமெரிக்காவின் மத்திய கப்பல் படை கட்டளைக்கு இந்திய கப்பல்படையின் பார்வையாளர்

அமெரிக்காவின் மத்திய கப்பல் படையின் தலைமையகம் பஹ்ரைன் நாட்டில் செயல்படுகிறது, இது அமெரிக்காவின் மத்திய பாதுகாப்பு கட்டளையின் ஒரு அங்கமாக செயல்படுகிறது. NAVCENT என்று அழைக்கப்படும் இந்த கட்டளை பிரிவு தான் செங்கடல், பாரசீக வளைகுடா, அரபிக்கடல் போன்ற பகுதிகளை கண்காணித்தும் அங்கு ராணுவ நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்த கட்டளை பிரிவின் செயல்பாடுகள் மற்றும் ஆபரேஷன் நடவடிக்கைகளில் இந்திய கப்பல் படையையும் சேர்க்கும் பொருட்டு, இந்திய கப்பல் படையின் அதிகாரி ஒருவரை NAVCENT கட்டளை பிரிவில் பணி அமர்த்த முடிவு செய்துள்ளது அமெரிக்கா.

இது குறித்த அமெரிக்க செனட் ஒப்புதல் மற்றும் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனின் ஒப்புதல் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், சீக்கிரமே இந்திய கப்பல் படையின் அதிகாரி ஒருவரை கட்டளை அமைப்பில் சேர்க்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக இந்திய பாதுகாப்புறை செயலர் சஞ்சய் மித்ரா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது இந்திய அமெரிக்கா உறவில் ஒரு மாபெரும் மைல் கல் ஆகும், 1962-ம் ஆண்டு சீனாவுடன் நடை பெற்ற போரின் போது, இந்திய பிரதமருக்கு தினசரி போர் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்கும் போது அமெரிக்கா தூதரக அதிகாரிகள் மற்றும் அமெரிக்கா உளவுத்துறை அதிகாரிகளும் இருந்தனர். அதன் பிறகு இப்போது தான் அமெரிக்க ராணுவ நடவடிக்கைகளின் போது இந்திய அதிகாரி ஒருவர் கூட இருந்து நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதோடு இந்திய அரசுக்கும் தகவல் தெரிவிப்பார்.

ஏற்கனவே அமெரிக்காவின் மத்திய கப்பல் படை கட்டளை அமைப்பில் வேறு சில நாடுகளின் ராணுவ பிரதிநிதிகளும் உள்ளனர்.

அரபிக்கடலில் நடக்கும் அனைத்து அமெரிக்கா கப்பல் படையின் நடவடிக்கைகளும் இனி இந்தியாவுக்கும் தெரியும், தேவைப்பட்டால் அரபிக்கடலில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அமெரிக்காவை உடனே உதவிக்கு அழைக்கவும் முடியும்.

அமெரிக்காவின் இந்த கட்டளை அமைப்பு தான் தற்போது சவூதி ஏமன் போரில் ஏமன் கடல் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, அதோடு பாகிஸ்தான் மற்றும் சோமாலியாவில் ரகசிய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகிறது.

அது மட்டுமல்லாது பாதுகாப்பு செயலரின் அமெரிக்க பயணத்தின் போது, அமெரிக்கா தனியார் பாதுகாப்பு தொழில் கண்காணிப்பு குழுமத்திலும் இந்தியர் ஒருவரை சேர்க்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.DIUx (Defense Innovation Unit Experimental )  என்று அழைக்கப்படும் இந்த குழுமம், அமெரிக்காவில் செயல்படும் தனியார் நிறுவனங்களை கண்காணிக்கும்.

அந்நிறுவனங்களில் பாதுகாப்பு துறைக்கு தேவையான பாகங்களோ அல்லது கண்டுபிடிப்புகளோ நிகழ்த்தப்பட்டால், இந்த அமைப்பு அதை சோதனை செய்து, அதை முன்னேற்ற போதிய வழியையும் பண உதவியையும் செய்து கொடுக்கும். அமெரிக்க ராணுவ தொழில்நுட்பத்தில் தனியார் துறையின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. ராணுவ மற்றும் தொழில் நுட்பத்தில் மற்ற நாடுகளைவிட பல படிகள் மேலே நிற்க தனியார் துறையும் இந்த கண்காணிக்கும் அமைப்பும் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

இந்த அமைப்பில் இந்திய அரச பிரதிநிதி ஒருவரை சேர்க்கும் போது, அவர் அந்த அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்றும், எவ்வாறு தொழில் துறைகளை கண்டறிவது என்றும் பயில முடியும். இதன் மூலம் இந்திய உள்நாட்டு தனியார் துறைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவித்து பாதுகாப்பு துறையில் ஆயுதங்களையும் உதிரி பாகங்களையும் செய்து தர வைக்க முடியும். இதன் மூலம் மேக் இன் இந்திய திட்டம் மேலும் வலுப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதோடு அமெரிக்காவும் இந்திய கப்பல் படையும் புதிய ஒரு கப்பல் படை பயிற்சியை ( Amphibious Action )  துவங்கவும் திட்டமிட்டுள்ளன. கப்பல் படை மூலம் எதிரி நாட்டுக்குள் ஊடுருவும் இந்த பயிற்சியை அடுத்த சில ஆண்டுக்குள் இந்தியாவுக்கு கற்று தர அமெரிக்கா கப்பல் படை ஒத்துக்கொண்டுள்ளது. இந்த பயிற்சியை அமெரிக்க தனது நெருங்கிய நேச நாடுகளுக்கு மட்டுமே கற்று தரும், அதோடு தென் கொரியாவோடு மட்டுமே தொடர்ந்து எல்லா வருடமும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவின் கடல் வழி ஊடுருவும் படைகளுடன் ஒப்பிடுகளில், இந்தியாவின் படை மிக சிறியதே, அதோடு இந்தியாவிடம் அமெரிக்காவிடம் இருப்பது போன்ற போதிய திறனுடைய கப்பல்கள் மற்றும் உதவி அமைப்புகள் இல்லை.

இந்த கடல் வழி ஊடுருவும் பயிற்சி போர் மற்றும் இயற்கை பேரிடர்கள் போதும் கப்பல் படை அபரிமிதமாக செயல்பட வழிவகை செய்யும்.