3-ம் தலைமுறை நீர்மூழ்கி மீட்பு அமைப்பை பெறுகிறது இந்திய கப்பல் படை

இங்கிலாந்தை சேர்ந்த ஜேம்ஸ் பிஷர் நிறுவனத்திடமிருந்து இரண்டு நீர்மூழ்கி மீட்பு அமைப்பை பெற 2016-ல் இந்தியா ஒப்பந்தம் செய்திருந்தது. அதன் அடிப்படையில் முதல் நீர்மூழ்கி மீட்பு அமைப்பை மார்ச் மாதம் இந்திய கப்பல் படைக்கு அளிக்க உள்ளது ஜேம்ஸ் பிஷர் நிறுவனம்.

இந்திய கப்பல் படையின் நீர்மூழ்கிகளில் ஆபத்து ஏதேனும் ஏற்பட்டால் அதிலிருந்து வீரர்களை மீட்கவோ அல்லது மூழ்கிய நீர்மூழ்கியிலிருந்து விவரங்களை சேகரிக்கவோ, வேறு நாடுகளிடமிருந்து தான் உதவியை பெற வேண்டியிருந்ததது.

பொதுவாக ஒன்றிரண்டு நீர்மூழ்கிகளை வைத்துள்ள நாடுகளே இது போன்ற நீர்மூழ்கி மீட்பு அமைப்புகளை வாங்கி வைத்துள்ளன. ஆனால் 10-க்கும் மேற்பட்ட அதுவும் மிக பழைய நீர்மூழ்கிகளை வைத்துள்ள இந்திய கப்பல் படையிடம் இது போல ஒன்று கூட இல்லை.

பல ஆண்டுகளாக அரசிடம் இது போன்ற நீர்மூழ்கி மீட்பு அமைப்பை வாங்க கப்பல் படை நிர்பந்தித்து வந்தது, கடைசியாக 2016-இல் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு தொகையும் கைமாறியது.

தற்போது இந்த நீர்மூழ்கி அமைப்பை வடிவமைத்து, இந்திய கப்பல் படை வீரர்களுக்கு இதை எவ்வாறு பயன்படுத்துவது கோளாறு ஏற்பட்டால் எவ்வாறு சரி செய்வது போன்ற வழிமுறைகளையும் ஜேம்ஸ் பிஷர் நிறுவனம் கற்று கொடுத்துள்ளது.