ராணுவத்தை பலப்படுத்த பணம் இல்லை, 10 நாட்கள் கூட போரிட முடியாது, பாராளுமன்ற நிலைக்குழு

இந்த வருட ராணுவ பட்ஜெட் மிக குறைந்த அளவே உள்ளது என்றும், அதனால் ராணுவத்தை நவீனப்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது என்றும், கடந்த ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் தற்போது கிடப்பில் உள்ளது என்றும், போர் என்று வந்தால் வெறும் 10 நாட்கள் தான் ராணுவத்தால் போரிட முடியும் என்றும் பாராளுமன்ற நிலைக்குழு மக்களவையில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது என்றும், கிழக்கே சீனா மாபெரும் படை குவிப்பு மற்றும் திபெத் பகுதிகளில் புதிய விமான மற்றும் ராணுவ தளங்களை அமைத்து வருவதாகவும், முன்னெப்போதும் இல்லாத அளவு ரோந்துகளில் ஈடுபட்டுவருவதாகவும்,

மேற்கே பாகிஸ்தான் தொடர்ந்து எல்லைப்பகுதியில் தாக்குதல் நடத்துவதோடு, அதிக அளவு ராணுவத்தை குவித்தும், மட்டுமல்லாது சீனாவிடமிருந்து வாங்கிய நவீன ஆயுதங்களை அங்கு நிறுவி வருவதாகவும்,

இந்திய பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு நாட்டில் ஏற்பட்டுள்ள நிலை இல்லாத தன்மையும் இந்திய நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சீனா,  அமெரிக்க ராணுவத்துக்கு நிகராக தனது படைகளை நவீனப்படுத்தி வருவதாகவும், சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து இந்தியாவை தாக்கும் நிலை முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகப்படியான வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சீனா ராணுவத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் இந்திய படைகள் நவீனப்படுத்த பட வேண்டும் என்று அக்குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

ராணுவத்தை நவீனப்படுத்த இந்த வருட பட்ஜெட்டில் 21 ,338 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது, ஆனால் கடந்த ஆண்டுகளில் வாங்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நவீனப்படுத்தல் செலவுகளுக்கே 29, 033 கோடி ருபாய் தேவைப்படுகிறது. அதனால் இந்த வருடம் புதியதாக எவ்வித திட்டங்களயும் முன்னெடுக்க முடியாது,  அதோடு கடந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்கள் பலவும் கிடப்பில் போடும் நிலையில் உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

புதிய அரசு ராணுவ அதிகாரிகள் தங்களாக முடிவெடுத்து ஆயுதங்கள் வாங்கும் மதிப்பை பல ஆயிரம் கோடியாக உயர்த்தியது. ஆனால் அதற்காக ஒரு பைசா கூட பட்ஜெட்டில் ஒதுக்கவில்லை.

ராணுவ நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு செலவுகளுக்காக சுமார் 40,073 கோடி ருபாய் கோரப்பட்டிருந்தது, ஆனால் வெறும் 30, 791 கோடியே அளிக்கப்பட்டுள்ளது, இதனால் பல நடவடிக்கைகள் மற்றும் பராமரிப்பு வேலைகள் முடக்கப்படும், அதோடு சீனா அல்லது பாகிஸ்தான் ஒரு ஊடுருவலை நடத்தினால் இந்த தொகை இன்னும் அதிகமாகும்.

அது மட்டுமல்லாது தற்போது படைகள் பயன்படுத்தி வரும் ஆயுதங்கள் உபகரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மிக பழமையானவை, அதோடு அவை போரில் சண்டையிடவும் தகுதியற்றவை. அறுதியிட்டு கூறுகையில் 68 % ஆயுதங்கள் மிகப் பழமையானவை, 24 % ஆயுதங்கள் தற்காலத்தில் பயன்படுத்த போதிய நிலையிலும், 8 % ஆயுதங்கள் மிக நவீன நிலையிலும் உள்ளது.

ராணுவத்தை பொறுத்த வரையில் மொத்த பட்ஜெட்டில் 63 % பணம் வீரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்திற்கு செல்கிறது, 20 % பணம் பராமரிப்பு மற்றும் நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுகிறது, வெறும் 12 % பணமே புதிய ஆயுதங்கள் வாங்கவும் நவீனப்படுத்தலுக்கும் செலவிடப்படுகிறது.

அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள்

1. அடுத்த தலைமுறை கவச வாகனம் தயாரிக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

2. 1,86,138 புல்லட் ப்ரூப் உடைகள் வாங்கும் திட்டம் தற்போது சோதனையில் உள்ளது.

3. 7.62x51mm குண்டுகளை சுடும் புதிய ரக துப்பாக்கிகள் வாங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது