முன்னாள் ரஷ்யா உளவாளியை ரசாயன பொருள் கொண்டு கொல்ல முயற்சி, ரஷ்யா மீது இங்கிலாந்து குற்றச்சாட்டு

ரஷ்யாவின் ராணுவ உளவு அமைப்பை (GRU) சேர்ந்தவர் கலோனல் செர்கி ஸ்க்ரிபால், அவர் ரஷ்ய உளவுத்துறையில் இருந்து கொண்டே ஐரோப்பாவில் செயல்படும் ரஷ்யாவின் உளவு வேலைகள் மற்றும் ஏஜெண்டுகளின் தகவல்களை இங்கிலாந்து உளவு அமைப்பான MI6 -க்கு கொடுத்துவந்தார். இதை கண்டறிந்த ரஷ்ய உளவுத்துறை 2006-இல் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த அவரை 2010-இல் நடந்த கைதிகள் பரிமாற்றத்தின் போது அமெரிக்கா அவரை விடுவித்து அமெரிக்காவுக்கு வரவழைத்தது.

பின்பு இங்கிலாந்து உளவுத்துறையான MI 6 உதவியோடு இங்கிலாந்தில் குடியேறினார். அங்கு சுமார் 8 ஆண்டுகளாக வசித்து வரும் ஸ்க்ரிபால், இங்கிலாந்து ராணுவ கல்லூரிகளிலும் , ராணுவ பயிற்சி வகுப்புகளிலும் ரஷ்ய தாக்கும் முறைகள் மற்றும் அவர்களின் ஆயுதங்கள் பற்றி பாடம் நடத்தி வருகிறார்.

மார்ச் 4-ம் தேதி இங்கிலாந்தின் சாலிஸ்பரி நகருக்கு அவரது மகள் யூலியாவுடன் சென்றுள்ளார். நகரின் மையத்தில் உள்ள கடையின் வெளியே உள்ள இருக்கையில் அவரும் அவரது மகளும் மயங்கிய நிலையில் இருப்பதை கண்ட பொதுமக்கள் அருகில் உள்ள காவலருக்கு தகவல் தெரிவித்தனர்.

இருவரையும் தொட்டு சோதித்த காவல் துறை அதிகாரி சார்ஜன்ட் நிக் பெய்லியும் மயங்கி விழுந்தார். உடனடியாக மேலதிக காவல் படை வரவழைக்கப்பட்டது. ஆரம்ப கட்ட பார்வையில் இது ஒரு வேதி பொருளின் தாக்கம் என்று அறியப்பட்டதும் இங்கிலாந்து ராணுவத்தின் ரசாயன சிறப்பு படை வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

ரசாயன தாக்குதலுக்கு உட்பட்டவர்களை இங்கிலாந்தில் உள்ள சிறப்பு மருத்துவமனை மருத்துவம் செய்து வருகிறது, அவர்கள் கூறுகையில் உளவாளி ஸ்க்ரிபால் மற்றும் அவர் மகள் யூலியா இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் ஆனாலும் அவர்கள் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தெரிவித்துள்ளது, அதோடு சம்பவத்தை முதலில் விசாரித்த இங்கிலந்து காவல் துறை அதிகாரி பெயிலி ஆபத்து கட்டத்தை தாண்டி விட்டதாகவும் இருந்தாலும் மருத்துவ மேற்பார்வையில் மருத்துவமனையில் இருப்பதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது.

சம்பவத்தை விசாரித்து வரும் இங்கிலாந்து ராணுவம் மற்றும் ரசாயன விஞ்ஞானிகள், முன்னாள் உளவாளியும் அவரது மகளும் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுள்ளார்கள், அங்கு அவர்கள் இருந்த நாற்காலியில் இதே ரசாயன பொருளின் தடயம் கிடைத்துள்ளது. தற்போது அப்பகுதி முழுவதையும் ராணுவம் தங்களது கட்டுக்குள் கொண்டு வந்து காவல் துறையுடன் விசாரித்து வருகிறது.

ரசாயன பகுதி பொருளை சோதித்ததில் அது ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் நோவிசோக் என்ற ரசாயன பொருள் ஆகும். இதை திட பொருளிலோ அல்லது திரவ பொருளிலோ கலந்து பயன்படுத்த முடியும், அதாவது உணவிலோ அல்லது தண்ணீரிலோ கலந்து கொடுக்க முடியும் , இது நேரடியாக வயிற்றுக்குள் சென்றால் ஒரு சில நிமிடங்களிலேயே மரணம் ஏற்படும். அதுமட்டுமல்லாது காற்றில் இது எளிதில் கரையவல்லது. அதனால் அருகில் இருப்பவர்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தும்.

இது இங்கிலாந்து முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாது இங்கிலாந்து நாடாளுமன்றத்திலும் கடந்த சில நாட்களாக இது குறித்து தான் பெரும் விவாதங்கள் நடை பெற்று வருகிறது.

நேற்று தான் உளவாளியை கொல்ல பயன்படுத்திய ரசாயன ஆயுதம் நோவிசோக் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாது அதை தயாரிப்பது ரஷ்ய ராணுவம் மட்டுமே, அதோடு அதை பயன்படுத்துவதும் அவர்களே.

இதனால் ரஷ்யா மீது இங்கிலாந்து நேரடியாக குற்றம் சாட்டியுள்ளது. அது மட்டுமல்லாது இது குறித்து செவ்வாய்க்கிழமை இரவு (13-03-2018) அதாவது இன்று இரவுக்குள் விளக்கம் அளிக்குமாறும் ரஷ்யா தூதரகத்திற்கு கட்டளையிட்டுள்ளது.

இது குறித்து இங்கிலாந்து பிரதமர் தெரசா மே கூறும்போது, இது இங்கிலாந்து நாட்டின் மேல் ரஷ்யா நேரடியாக தாக்குதல் தொடுப்பது அல்லது அதிக ஆபத்தை விளைவிக்கும் ரசாயன ஆயுதங்களை பாதுகாக்க முடியாமல் அதை அடுத்தவர்கள் கைப்பற்ற வழிவகை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதோடு இன்று இரவுக்குள் ரஷ்யா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து ரஷ்ய வெளியுறவு செய்தி தொடர்பாளர் பேசும் போது, இங்கிலாந்து பிரதமர் நாடாளுமன்றத்தில் சர்க்கஸ் காட்டி வருகிறார் என்று கூறியுள்ளார்.

இந்த ரசாயன தாக்குதல் குறித்து ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுடன் இங்கிலாந்து விவாதித்துள்ளது. அவர்களும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் ரஷ்யாவுக்கு அதிக அழுத்தம் தரவும் மேலதிக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது குறித்த இங்கிலாந்து மற்றும் ரஷ்யாவின் நிலைப்பாடு நாளை மதியம் தெரியவந்துவிடும்.

சுருக்கமாக இங்கிலாந்து மீது ரஷ்யா ஒரு ரசாயன தாக்குதலை மேற்கொண்டுள்ளது.