விமானப்படையுடன் விளையாடும் மத்திய அரசு

இந்திய விமானப்படைக்கு புதிய விமானங்கள் வாங்காமல் தொடர்ந்து ஒப்பந்தங்களை கிடப்பில் போட்டும், ரத்து செய்தும் தொடர்ந்து விமானப்படைக்கு தொந்தரவு கொடுத்து வருகிறது மத்திய அரசு. MMRCA திட்டத்தை ரத்து செய்து வெறும் 36 விமானங்களை வாங்க ஒப்பந்தம் போட்ட அரசு, மேலதிகவிமானங்களை வாங்க பணம் இல்லை என்று கை விரித்தது, அதோடு விமானப்படையின் விருப்பத்திற்கு மாறாக ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்களை வாங்க நிர்பந்தித்தது, ஆனால் தற்போது அந்த திட்டத்தையும் கை விட்டு மீண்டும் இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்களை வாங்குமாறு விமானப் படையை கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த வருட ராணுவ பட்ஜெட்டில் மொத்த மதிப்பீட்டில் வெறும் 2.1% மட்டுமே ஒதுக்கிய மத்திய அரசு, தொடர்ந்து ராணுவ நவீனப்படுத்தல் திட்டத்தை தள்ளிப்போட்டு வருகிறது. அதில் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாவது விமானப்படையே. புதிய விமானங்கள் இல்லாமல் பல விமான தளங்கள் செயல்படாமலும் அல்லது ஒன்று இரண்டு விமானங்களுடனும் செயல்பட்டு வருகிறது.

மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது, ரபேல் விமானங்கள் விலை அதிகம் என்பதால் அவற்றை நூற்றுக்கணக்கில் வாங்க முடியாது,ஆகவே விமானப்படை விலை குறைந்த ஒற்றை எஞ்சின்கள் கொண்ட விமானத்தை வாங்கவேண்டும் என்று நிர்பந்தித்தார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பல விமானப்படை அதிகாரிகள், ஒற்றை எஞ்சின் விமானங்கள் சீனாவோடும் பாகிஸ்தானோடும் போட்டி போட தகுதியற்றவை என்று கடுமையாக விமர்சித்தனர். இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சகத்தை தாண்டி விமானப்படை அதிகாரிகளால் முடிவெடுக்க முடியாததால் ஒற்றை எஞ்சின் கொண்ட விமானங்களை வாங்க முடிவெடுத்து சுவீடனின் கிரிப்பன் மற்றும் அமெரிக்காவின் F 16விமானங்கள் விலைப்புள்ளி மற்றும் தரத்தை நிரூபிக்க விமானப்படை சார்பில் கோரப்பட்டிருந்தது. இதில் அதிகம் நாட்டமில்லாத விமானப்படை இந்த கொள்முதல் திட்டத்தை அப்படியே அரசின் போக்கில் விட்டுவிட்டது.

இரண்டு வருடங்களாக எவ்வித முன்னேற்றமும் இல்லாத இந்த விமான கொள்முதல் திட்டத்தை தற்போதைய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் ரத்து செய்துள்ளார். அதோடு விமானப் படையிடம் கூடுதல் திறனுள்ள இரட்டை எஞ்சின் கொண்ட விமானங்களை வாங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது விமானப்படையின் வட்டாரத்தில் மீண்டும் ஒரு பெரிய குழப்பத்தைஏற்படுத்தியுள்ளது.

கார்கில் போரில் ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே பல்திறன் கொண்ட தாக்கும் விமானங்களை வாங்கி பயன்படுத்த விமானப்படை முடிவெடுத்து அப்போதைய அரசுகளுடன் பேசி அனுமதியும் வாங்கியது. முதல்கட்டமாக மிராஜ் விமானங்களை வாங்க திட்டமிட்ட விமானப்படை, அதைவிட நவீன திறனுள்ள ரபேல் விமானத்தை பிரான்ஸ் தயாரித்ததும் அதை வாங்க திட்டமிட்டது.

ஆனாலும் தகுதி தேர்வு வைத்தே விமானங்களின் தரத்தை சோதித்து வாங்க அரசு நிர்ப்பந்தித்தது, சோதனையின் அடிப்படையில் ரபேல் விமானத்தை தேர்வு செய்தும் பல அரசியல் காரணங்களுக்காக திட்டத்தை ரத்து செய்தது தற்போதைய அரசு. அதற்கு மாற்றாக தான் ஒற்றை எஞ்சின் கொண்ட விமானத்தை வாங்க புதிய ஒப்பந்தத்தை வெளியிட்டது. தற்போது அதையும் ரத்து செய்து மீண்டும் வேறொரு இரட்டை எஞ்சின் விமான கொள்முதல் திட்டத்தை வெளியிட்டுள்ளது அரசு.

இது ஒருபுறம் இருக்க, ரஷ்யாவோடு செய்து கொண்ட FGFA திட்டமும் தற்போதுகிடப்பில் உள்ளது, அது மட்டுமல்லாது AMCA திட்டமும் இன்னும் பொம்மை வடிவில் தான் உள்ளது.

அதுமட்டுமல்லாது சீன பாகிஸ்தானிய போர் விமானங்களை சமாளிக்க விமானப்படைக்கு 42 சுகுவாட் விமானங்களை வைத்துக்கொள்ளஅனுமதிக்கப்பட்டிருந்தது. இப்போது அதன் எண்ணிக்கையை 31- ஆக குறைக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

மற்ற நாட்டு விமானப்படைகளில் ஒரு சுகுவாட் விமானம் என்பது சுமார் 22 லிருந்து 25 வரை இருக்கும், ஆனால் இந்திய விமானப்படையில் தான் வெறும் 18 என்ற குறைந்த எண்ணிக்கை ஒரு சுகுவாடில் உள்ளது. இது போர் என்று வரும் போது ஒரு விமான தளத்திலிருந்து வெறும் 5 அல்லது 8 விமானங்கள் தான் ஒரே நேரத்தில் தாக்க செல்லவோ அல்லது பாதுகாப்பு கொடுக்கவோ முடியும்.

தற்போதைய நிலைமையை குறுக சொன்னால், இந்திய விமானப்படை தற்போது எதிரி தாக்குதலை கூட சமாளிக்க முடியாமல் குறைந்த எண்ணிக்கை விமானங்களோடு தான் உள்ளது.  அது வரும் ஆண்டுகளில் இன்னும் மோசமான நிலைமைக்கு தான் செல்லவுள்ளது. அது மட்டுமல்லாது விமானப்படைக்கு தேவையான உதவி விமானங்களின் நிலையும் படு மோசமான நிலையில் உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியில் விமானப்படை ஓரம் கட்டப்பட்டது, தற்போதைய பிஜேபிஆட்சியில் விமானப்படை ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை என்பதே உண்மை. தற்போதைய ஆட்சியில் விமானப்படைக்கு கிடைத்த ஒரே திட்டம் வெறும் 36 ரபேல் விமானங்கள் மட்டுமே.