சிரிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

சிரிய போர் மெதுவாக அடுத்த கட்டம் நோக்கி நகர்ந்து வருகிறது, அமெரிக்காவின் புதிய அதிபர் படைகளுக்கு மேலதிக ஆதரவு கொடுக்கவே அமெரிக்கா மெல்ல மெல்ல சிரிய அரசு படைகளை தாக்கி வருகிறது, சமீபத்தில் நடந்த ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரிய விமான தளத்தை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழித்த அமெரிக்கா தொடர்ந்து சிரிய அரச படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தவும் தாயாராகி வருகிறது.

சமீபத்தில் குர்து தனி நாடாக அறிவிக்க குர்து இன தலைவர்கள் அறிவிப்பு வெளியிட்ட சில நாட்களிலேயே, குர்து பகுதிகளை குறிவைத்து சிரிய அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன, ISIS தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் குர்து படைகள், SDF எனப்படும் ISIS-க்கு எதிராக போரிடும் சிரிய அமைப்பு மற்றும் சிரிய அரசு எதிர்ப்பு படைகள் மீது பல முறை தாக்குதல் நடத்தி வந்துள்ளது சிரியா.

அதிலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நேரடி உதவியில் இயங்கும் குர்து படைகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி வரும் என்று சிரிய அரசை அமெரிக்கா ராணுவம் ஏற்கனவே எச்சரித்திருந்தது, குர்துகளை தாக்க கூடாது என்று துருக்கிக்கும் அமெரிக்கா கட்டளை பிறப்பித்துள்ளது குறிப்பிட தக்கது,  சமீபத்தில் குர்து பகுதிகள் மீது துருக்கி தாக்கியதை அடுத்து அமெரிக்காவின் மத்திய கிழக்கின் ராணுவ அதிகாரிகள் குர்து பகுதிக்கு சென்றதோடு மேலதிக ராணுவ வீரர்களையும் அங்கு பாதுகாப்புக்கு அனுப்பினார்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் சிரியாவின் ஆளில்லா தாக்கும் விமானம் ஒன்று வட சிரியாவின்  குர்து பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்த அமெரிக்கா ஆதரவு படைகள் மீது தாக்க துவங்கியது, உடனடியாக அருகே பறந்து கொண்டிருந்த அமெரிக்க போர் விமானமான F 15 அந்த ஆளில்லா தாக்கும் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, அதோடு மீண்டும் ஒரு முறை சிரிய அரசை எச்சரித்தது.  இது குறித்து ரஷ்யா சார்பில் தெரிவிக்கையில், சிரிய எல்லைக்குள் பறக்கும் சிரிய விமானங்களை சுட்டு வீழ்த்துவதை அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லை என்றால் இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் வசனம் பேசியது.

இதனிடையே நேற்று இரவு குர்து பகுதியில் பறந்த ஒரு சிரிய போர் விமானம் திடீரென குர்து படைகள் மீது தாக்க துவங்கியது, இந்த விமானத்தை கண்காணித்து கொண்டிருந்த அமெரிக்கா கப்பல் படையின் போர் விமானமான F/A 18 விமானம், உடனடியாக சிரிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது.  இது குறித்து அறிக்கை வெளியிட்ட அமெரிக்கா, அமெரிக்கா ஆதரவு படைகளை காக்க அமெரிக்கா என்ன வேண்டுமென்றாலும் செய்யும் என்று கூறியுள்ளது, இந்த தாக்குதலை வரவேற்றுள்ள பல்வேறு ராணுவ பார்வையாளர்கள் குர்துகளை பாதுகாக்க வேண்டியதில் அமெரிக்காவின் உறுதியான நிலைப்பாடு நல்லதே என்று கூறியுள்ளனர்.

இதனிடையே சிரியாவில் நிறுவப்பட்டுள்ள ரஷ்யாவின் நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகள் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை,  தற்போதைய தகவல்கள் படி, குர்து பகுதிகள் மட்டுமல்லாது வட சிரியாவின் வான் பகுதி முழுவதையும் அமெரிக்கா தன் கட்டுப்பாட்டிலேயே வைத்துள்ளது போல தெரிகிறது, இங்கு பறக்கும் போர் விமானங்களை தொடர்ந்து கண்காணிக்கும் அமெரிக்கா, ஏதேனும் அசம்பாவிதத்திற்கு எதிரி முயற்சித்தால் உடனடியாக சுட்டு வீழ்த்தவும் தயாராக உள்ளது தெரிகிறது.

இதனிடையே, பழைய போர் விமானங்களை அமெரிக்காவின் நவீன நான்காம் தலைமுறை போர் விமானங்கள் எந்தவித சிரமமுமின்றி மிக எளிதாக தாக்கி அழிக்கின்றன, குறிப்பாக துருக்கி சுட்டு வீழ்த்திய Su 24 விமானமாக இருந்தாலும் சரி, தற்போது சுட்டு வீழ்த்தப்பட்டுள்ள Su 22 விமானமாக இருந்தாலும் சரி.  பார்க்கப்போனால், இனி வான் சண்டைகள் வருமேயானால், பழைய போர் விமானங்களை 4-ம் தலைமுறை போர் விமானங்கள் மிக எளிதாக சுட்டு வீழ்த்தும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது என்றே நினைக்கிறன்.

அது மட்டுமல்லாது சிரியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் எல்லாமே நவீனமயமானவை, இந்தியாவுடன் ஒப்பிட்டால் பல படி முன்னேற்றம் கண்டுள்ள அமைப்புகள், ஆனால் அவை அனைத்தையும் முறியடித்துவிட்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க விமானப்படைகள் தொடர்ந்து சிரியாவின் நிலைகளை தாக்கி கொண்டு தான் இருக்கிறது. இது ரஷ்யா தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்புகளின் நம்பகத்தன்மையை பெரும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் எல்லாமே முன்பு ரஷ்யா தாயாரிப்பாக தான் இருந்து வந்தது, தற்போது தான் அவை மெதுவாக மாற்றப்பட்டு இஸ்ரேல் மற்றும் உள்நாட்டு தயாரிப்புகள் நிறுவப்பட்டு வருகிறது. இருந்தாலும் பல ஆயிரம் கோடி செலவில் ரஷ்யாவின் செயல்படாத S 400 அமைப்பை வாங்க முடிவெடுத்து அதற்கான ஒப்பந்த வேலைகளை அரசு செய்து கொண்டு வருகிறது, இந்த அமைப்பு சிரியாவில் செயல்பாட்டில் உள்ளது, ஆனால், அதனால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பது குறிப்பிடதக்கது .