Tu 142M, ஏன் சீக்கிரம் படையிலிருந்து விடுவிக்கப்பட்டது

இந்திய கப்பல் படை எட்டு Tu 142M என்னும் தொலை தூரம் வரை செல்லும்  நீர்மூழ்கி தேடி அழிக்கும் விமானங்களை பயன்படுத்தி வந்தது,1976 -இல் சோவியத் நாட்டிடமிருந்து வாங்கப்பட்ட இந்த விமானங்கள் அனைத்தையும் சுமார் 29 வருட சேவைக்கு பின்பு படையிலிருந்து விடுவித்துள்ளது கப்பல் படை, நிச்சயம் இந்த விடுவிப்பு தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சுமார் 29 ஆண்டுகள் தொடர்ந்து பணியில், 30,000 மணி நேரம் பறந்து கப்பல் படைக்கு உதவியாக இருந்த இந்த விமானம் எந்த ஒரு விபத்தையும் பார்த்தது இல்லை, இந்த விமானதால் தொடர்ந்து சுமார் எட்டு மணி நேரம் வானில் பறந்து கொண்டே 6500 கிலோ மீட்டர் வரை சென்று நீர்மூழ்கிகளை தேடவோ, துரத்தி செல்லவோ, அழிக்கவோ முடியும்.

இடை காலங்களில் இதன் வலிமையை அதிகரிக்க இஸ்ரேலின் உதவியுடன் நவீன கப்பல்களை தேடும் ரேடார்கள் மற்றும் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களும் சேர்க்கப்பட்டது. இதன் மூலம் ஒரு வலிமையான கடல் பாதுகாப்பு விமானமாக விளங்கியதோடு, கப்பல் படையின் பல்வேறு தாக்கும் மற்றும் பாதுகாப்புக்கும் திட்டங்களிலும் ஈடுபட்டு திறம்பட செயல்பட்டுள்ளது, முக்கியமாக 1988-இல் மாலத்தீவில் நடந்த ராணுவ புரட்சி முறியடிப்பில் கப்பல் படை வீரர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது.

கப்பல் படையில் சிறப்பாக பணி செய்து கொண்டிருந்த ஒரு விமானத்தை எவ்வித திட்டமுமின்றி திடீரென படையிலிருந்து ஏன் விடுக்கப்பட்டுள்ளது என்பது விளங்கவில்லை, இந்த விமானங்களில் பல்வேறு மாறுதல்கள் செய்து அதை ஏவுகணைகளை வீசும் விமானங்களாக மாற்றி ஐரோப்பிய நாடுகளுக்கு தொடர் தொல்லை கொடுத்து வருகிறது ரஷ்ய கப்பல் படை.

சீனாவோ மிகப்பழமையான H6 என்னும் விமானங்களை மாறுதல் செய்து வானில் எரிபொருள் நிரப்பும் விமானமாகவும், சிலவற்றை ஏவுகணை வீசும் விமானங்களாகவும் பயன்படுத்தி வருகிறது, பழைய விமானங்களாக இருந்தாலும் அதன் திறனையும் அமைப்பையும் மாற்றியுள்ளதால் அவை  இன்று வரை இந்திய விமானப்படைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

இந்த Tu 142M விமானங்களை ஏவுகணைகளை வீசும் விமானங்களாக பயன்படுத்தி அரபிக்கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் தொடர்ந்து பறக்கவிட்டால் பாகிஸ்தானின் மொத்த கப்பல்படையும் எப்போதுமே எச்சரிக்கையுடனும் பயத்துடனும் இருக்க வேண்டி வரும்.

அதுமட்டுமல்லாது தர்போ ப்ரொபெல்லர்களை கொண்ட விமானங்களை பயன்படுத்தும் மற்றும் பராமரிக்கும் செலவும் மிகக்குறைவு. இதன் அதிக எடை சுமக்கும் திறனால், சுமார் நான்கு பிரமோஸ் ஏவுகணைகளை இதனால் சுமந்து செல்ல முடியும், ஒவ்வொரு ஏவுகணையும் சுமார் 600  கிலோமீட்டர் வரை சென்று தாக்கும் என்பது குறிப்பிட தக்கது.

இதனால் பாகிஸ்தானின் மொத்த கப்பல் படையையுமே அவர்கள் எல்லைக்குள் செல்லாமலே அழிக்க முடியும், தினமும் இரண்டு Tu 142M விமானங்களை பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் பறக்க விட்டாலே அவர்களின் கப்பற்படையை திணறடிக்க செய்ய முடியும்.

பல பாதுகாப்பு வல்லுநர்கள் முன்னாள் விமானிகள் இதே கருத்தை முன்வைத்த போதும், யாருக்கும் செவி சாய்க்காமல் அரசும் கப்பல் படையும் வேக வேகமாக இந்த திறனுள்ள விமானங்களை படையிலிருந்து விலக்கி கொண்டுள்ளது பெருத்த ஏமாற்றமே.

படத்தில் ரஷ்ய கப்பல் படையின் Tu 95விமானம் எட்டு Kh 101 ஏவுகணைகளுடன்,